இறந்த தாயின் அஸ்தியைக் கறைப்பதற்கு வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார் ஸ்ருதி ஹாசன். அவரை கடத்திச் செல்ல வரதராஜ மன்னார் ஆட்களை அனுப்புகிறார். ஸ்ருதியின் தந்தை, பிலால் என்கிற மற்றொரு நண்பரிடம் மகளை காப்பாற்றும்படி கேட்க, அவர் தனது நம்பகமான கையாள் தேவா என்கிற பிரபாஸை அனுப்புகிறார். அதையும் தாண்டி ‘கான்சார் முத்திரை’ குத்தி ஸ்ருதியை கடத்திச் செல்கிறார்கள். தன் நண்பனான வரதாவே ஸ்ருதியை கடத்தியதால் பிரபாஸ் எப்படி ஸ்ருதியை காப்பாற்றினார் என்பதை வெட்டு, குத்து, ரத்தங்கள் தெளித்து சொல்லியிருப்பது தான் சலார்: பார்ட் 1 – சீஸ் ஃபயர்!’.
பிரபாஸ் பாகுபலிக்குப் பின்பு சங்கிகள் முன்னிறுத்தும் நாயகனாக ஆகியிருக்கிறார். வெற்றுப் புராணக் கதாநாயகப் பிம்பங்கள் மூலம் பழங்கால இதிகாசங்களை பிரம்மாண்டப்படுத்தி மக்களை மூடநம்பிக்கைகளுக்குள் சுழலச் செய்யும் படங்கள் தாண்டி, போலியான சரித்திரப் புனைவுக் கதைகள், இது போன்ற வெற்று அரசியல் கதைகள் மூலம் பிரபாஸின் பிம்பம் ஊதிப் பெருக்கப்பட முயற்சி நடந்திருக்கிறது. அது தோல்வியில் முடிந்திருக்கிறது.
வெற்று சண்டைகளும், போலியான அரசியல் காட்சிகளும் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றவைக்க மறுக்கின்றன. கேஜீஎப்ல் ஒரு விடுதலைக்கான புனைவை உண்டாக்கியிருந்த இயக்குனர் நீல், இப்படத்தில் பிரபாஸூக்காக வலிந்து கட்டப்பட்ட ஒரு கதையமைப்பை வைத்து பார்வையாளர்களை மிரளவைக்க முயன்று தோற்றுப் போகிறார்.
புவன் கவுடாவின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கிறது. ரவி பஸ்ஸூரின் இசையும் பிரம்மாண்ட படத்துக்காகவே போட்ட வழக்கமான இசை. கதை வலுவில்லாததால் இவையும் பெரிதும் படத்தை வலுப்படத்த முடியவில்லை.
அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகளும், உஜ்வால் குல்கர்னியின் ஆக்ஷன் எடிட்டிங்கும் படத்திற்கு வலு சேர்த்தாலும் படத்தை நிமிர்த்தமுடியவில்லை.
சலார், டெக்னிக்கல் பிரம்மாண்டம். கதையமைப்பில் குடிசைத் தொழில்.