‘உசரத்துல என்ன இருக்கு உசுருதான் முக்கியம்’ என்பதை அழகாக த்ரில்லராக்கி தந்திருக்கிறார்கள். நகரில் மர்மமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. அது தொடர்பான விசாரணையை காவல்துறை மேற்கொள்கிறது. உயரம் குறைவான கதாநாயகன் செங்குட்டுவன் அவை குறித்து விசாரணையில் தானும் ஈடுபடுகிறார். இது வழக்கமான கதை. இதற்குள் நாயகன் உயரம் குறைவானவர் என்று வைத்து உருவத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை எனும் கருத்தை வலிமையாகச் சொல்லியிருக்கும் படம் மதிமாறன்.
நாயகன் வெங்கட்செங்குட்டுவன், உயரம் குறைந்தவர் என்கிற எண்ணம் கிஞ்சித்துமின்றி இயங்குகிறார். உயரம் குறைவாய் இருப்பது இயற்கையின் விஷயங்களில் ஒன்று என்று ஆடியன்ஸ்க் சராசரி மனிதனின காதல், மோதல், பாசம் ஆகிய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். தற்கொலைக்கு முயல்வதும் அதிலிலிருந்து மீள்வதும் உத்வேகம் தரக்கூடிய காட்சிகள்.
நாயகியாக வரும் ஆராத்யா, காவலதிகாரியாக நடித்திருக்கிறார். காதலை வெளிப்படுத்தும் காட்சிகள் நெகிழ்வு.நாயகனோடு இணைந்து துப்புதுலக்கும் காட்சிகளில் இயல்பாகப் பொருந்தியிருக்கிறார்.
நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இவானா படத்தின் பெரும்பலம்.அவருடைய வேடமும் காட்சிகளும் திரைக்கதைக்கு வலுச்சேர்க்கின்றன.அன்பான குடும்பத்தைத் தாண்டி வந்துவிட்டு அவர் படும் துயரங்களும் அதைத் தன் நடிப்பால் காட்டியிருக்கும் விதமும் நன்று.
எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட நடிகர்களும் அளவாகவும் சரியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
கார்த்திக்ராஜாவின் இசையில் கத்திக்கூவுது காதல் உள்ளிட்ட பாடல்கள் சுகம். பின்னணி இசையில் காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருக்கிறார்.
பர்வேஸ் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகளும் நகரத்துக்காட்சிகளும் மிக இயல்பாக அமைந்துள்ளன.
எழுதி இயக்கியிருக்கிறார் மந்த்ராவீரபாண்டியன், உளவியலை அடிப்படையாகக் கொண்டு குடும்பப் பாசம், குற்றச்செயல்களின் கொடூரம் ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார். மையக்கதையில் மட்டுமின்றி காட்சிகளிலும் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருக்கிறார்.
புதிய இயக்குநர் வளரும் நாயகன் ஆகியோரை வைத்து எடுக்கப்படும் படம் என நினைத்து படத்தின் செலவில் சிக்கனம் செய்யாமல் தேவையான செலவுகளைத் தயங்காமல் செய்திருக்கும் தயாரிப்புநிறுவனமும் பாராட்டுக்குரியது.
– தனா