அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கியுள்ள படத்துக்கு ‘அரிமாபட்டி சக்திவேல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் முக்கிய வேடத்தில் சார்லி நடித்துள்ளார். நாயகனாக புதுமுகம் பவன்.கே நடிக்கிறார். மலையாள நடிகை மேகனா எலன், இமான் அண்ணாச்சி, சூப்பர்குட் சுப்ரமணி, கராத்தே வெங்கடேஷ், ஹலோ கந்தசாமி உட்பட பலர் நடித்துள்ளனர். மணி அமுதவன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜேபி மேன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கே, அஜிஸ் பி தயாரிக்கின்றனர்.
திருச்சி அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. ஒரு கிராமம் தங்களுக்கென ஒரு கட்டுப்பாட்டை வரையறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை ஒருவன் மீறும்போது நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் கே. எஸ். ரவிகுமார், கரு. பழனியப்பன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அம்பேத்கரும், பெரியாரும் இன்னும் மாறாத சமூகத்தை பரிதாபத்துடன் சிறைக் கம்பிகளுக்கு வெளியில் நின்று, கவனிக்கும் விதமாக அந்த போஸ்டர் அமைந்துள்ளது.
இயக்குநர் கரு பழனியப்பனின் உதவியாளராக பணியாற்றிய, ரமேஷ் கந்தசாமி இப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமாகிறார். சமூகத்தின் மறுபக்கத்தை ஏற்றத்தாழ்வுகள் மிக்க மனிதனின் முகத்தைத் தோலுரித்துக் காட்டும் படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர்.