பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களையோ, சமத்துவம், சமூகநீதி போன்ற எந்த விஷயங்களையும் தனது படத்தில் வசனங்களில் பேசாமல் இருப்பவர் சந்தானம். தன்னை ஒரு போதும் திராவிடப் பகுத்தறிவுக் கருத்துக்களை பின்பற்றுபவராக காட்டிக் கொண்டதில்லை. அதன் காரணம் சமீபத்தில் தெரியவந்திருக்கிறது. அது சந்தானத்தின் உள்ளே ஒரு சங்கி உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பது.
சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. கவுண்டமணி செந்திலின் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற பெயரை தலைப்பில் வைத்திருக்கிறார்கள்.
ட்ரெய்லரில், சாமியே இல்லன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தானே நீ’ என்று ஒருவர் கேட்க, நான் அந்த ராமசாமி இல்லை என்று சாமி கும்பிட்டு கற்பூர தட்டு ஏந்தி நிற்கிறார் சந்தானம்.
ட்ரெயலர் இப்படி வெளியிடப்பட்டிருப்பதற்கு இயக்குனர் மற்றும் கதையாசிரியர் அத்துடன் நாயகன் சந்தானமும் பொறுப்பாவார்கள். இவர்கள் சம்மதத்துடன் தான் அது வெளியாகியிருக்கிறது. இந்த ட்ரெய்லரை விமர்சித்து கண்டனப் பதிவுகள் வந்தவுடன் உடனே சந்தானம் ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார்.
ஆனாலும் அவருடைய இந்துத்துவா சார்பு முகம் வெளியே வந்தது வந்தது தான். இனிமேல் அவருடைய திரைப்படங்களை விமர்சகர்கள் கூர்ந்து கவனிப்பார்கள்.
தற்காலத்தில் உள்ள இந்துத்துவ அரசியல் சூழலில் நான் சுத்தமான இந்துதான் இந்துதான் என்று அனைவரும் தங்களை நிரூபித்துக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாத்திகமும், பகுத்தறிவும் ஏதோ கொடிய விஷயங்கள் போல பார்க்கப்படுகின்றன.
பிற மதத்தை சாதாரணமாக இழிவுபடுத்துபவர்கள், சுய மதத்தை விமர்சிக்கும் இந்துக்களை இந்து விரோதி என்கிறார்கள். சினிமாவிலும் இந்த இந்துத்துவ சிந்தனைபோக்கு துளிர்விடத் துவங்கியிருப்பதற்கு வடக்கப்பட்டி ராமசாமியின் ட்ரெய்லர் ஒரு ஆரம்பம்.