அரக்கோணம் போன்ற சிறுநகரத்தில் இரண்டு மட்டைப்பந்தாட்டக் குழுக்கள். அவர்களுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகள்.ஒரு கட்டத்தில் இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு எதிரி வரும்போது இவர்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகியனவற்றை மையப்படுத்திய கதை.
அதை அப்படியே விட்டிருந்தால் முழுக்க முழுக்க விளையாட்டு மற்றும் அதற்குள் இருக்கும் சிக்கல்கள் என்று போயிருக்கும். ஆனால், இரண்டு மட்டைப்பந்தாட்டக் குழுக்களீல் ஒன்று ஊர் மற்றொன்று சேரி என்றதும் மொத்தப் பார்வையும் மாறிவிடுகிறது.
நாயகனாக நடித்திருக்கும் அசோக்செல்வன், மீசையில்லாத் தோற்றத்தில் வருகிறார்.ஒவ்வொரு காட்சியிலும் மிகுந்த உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். காதல், மோதல் என எல்லாவற்றிலும் முந்தைய படங்களைக் காட்டிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
நிஜத்தில் மனைவியாகிவிட்ட கீர்த்திபாண்டியன் இப்படத்தில் அசோக்செல்வனின் காதலி.பாடல்களுக்கு மட்டும் பயன்படும் நாயகியாக இல்லாமல் முக்கியமான பாத்திரம் அவருக்கு. அதில் பொறுப்பாக நடித்திருக்கிறார்.
அசோக்செல்வனின் எதிரணித்தலைவராக இருக்கும் சாந்தனுவும் மிகப்பொருத்தம். உயர்ந்தோன் என்கிற எண்ணத்தில் அவர் செய்யும் செயல்கள் அந்த எண்ணம் ஒன்றுமில்லாதது என்பதை உணர்ந்ததும் ஏற்படும் மாற்றங்களைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிருத்வி, லிஸ்ஸி ஆண்டனி, குமரவேல், பக்ஸ் ஆகியோர் பாத்திரங்களும் நடிப்பும் நன்று.
ஒளிப்பதிவாளர் தமிழ்.ஏ.அழகன், கதாபாத்திரங்கள் மட்டுமின்றி கதைக்களமும் முக்கியம் என்பதை உணர்ந்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை காட்சிகளுக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது.
1990 களில் நடக்கும் கதை என்பதால் கலை இயக்குநர் ஜெயரகுவுக்கு வேலைப்பளு அதிகம்.ஆனாலும் அந்தக்காலகட்டத்துக்கு அழைத்துச் செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
தமிழ்ப்பிரபாவின் எழுத்தும் எஸ்.ஜெயக்குமாரின் இயக்கமும் பின்னிப்பிணைந்து பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றன.
எல்லோருக்கும் தெரிந்த மட்டைப்பந்து விளையாட்டைக் கதைக்களமாகக் கொண்டு எல்லோரும் அறியாத சனாதனத்தைத் தோலுரித்து பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் எனும் வேறுபாடுகளைக் களைந்து ஒருங்கிணையவேண்டும் என்கிற மிக மிக அழுத்தமான ஆழமான கருத்தைப் பேசியிருக்கிறது படம்.
– தனா