முன்னாள் காதலியைச் சந்தித்து அவருடன் அளவளாவுவது விஜய்சேதுபதி த்ரிஷா நடித்த 96 படம். முதன்முதலில் சந்திக்கும் கதிரினா கைஃப் உடன் விஜய்சேதுபதி உலாவருவது மெரி கிறிஸ்துமஸ். இதில் காதல் மட்டுமின்றி கொலையும், எதிர்பாரா திருப்பங்களும் அடங்கியிருப்பது கொஞ்சம் புதிய அனுபவம்.
விஜய்சேதுபதியின் முகபாவங்களும் உடல்மொழியும் கத்ரினா கைஃப்பை மட்டும் ஈர்க்கவில்லை, படம் பார்ப்போரையும் ஈர்க்கிறது. அவருடைய காதல்கதையைச் சொல்வதும் அதில் இருக்கும் படிப்படியான முன்னேற்றம் சுவாரசியம். இறுதிக்காட்சிகளும் அப்போது விஜய்சேதுபதி எடுக்கும் முடிவும் வரவேற்புப் பெறும் விதமாக அமைந்திருக்கிறது.
நடுத்தர வயதுப்பெண்ணாக இருந்தாலும் அதற்கேற்ற வேடத்தை ஏற்றிருந்தாலும் அனைவரும் இரசிக்கும்படி இருக்கிறார் கத்ரினா கைஃப். நடிப்பிலும் குறைவில்லை. அவருடைய வாழ்க்கையின் சோகம் அனைவரையும் உச்சுக் கொட்ட வைக்கிறது.
ராதிகா ஆப்தேவுடனான விஜய்சேதுபதியின் காதல் பின்நவீனத்துவம் என்கிற கருத்தாக்கத்தையெல்லாம் தாண்டியது. இதுபோன்ற காதல்களில் உள்ள கவர்ச்சி அதன் பின்னால் இருக்கும் கடும் அதிர்ச்சி ஆகிய இரண்டையுமே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ராதிகா, சண்முகராஜன், கவின்பாபு ஆகியோர் அங்கங்கே சிரிக்க வைத்து படத்தை இலகுவாக்குகிறார்கள்.
மதுநீலகண்டனின் ஒளிப்பதிவு காட்சிகளை இரசித்துப்பார்க்க வைத்திருக்கிறது. முன்னால் உள்ள கதாபாத்திரங்கள் மட்டுமின்றி பின்னால் இடம்பெறும் பொருட்கள் வரை அனைத்தும் கவனமாகக் கையாளப்பட்டிருப்பது தெரிகிறது.
ப்ரீத்தம் இசையில் பாடல்கள் கேட்கலாம். டேனியல் பி.ஜார்ஜின் பின்னணி இசை இதம்.
பிரதீப் குமார்.எஸ்.அப்துல் ஜப்பார், பிரசன்னா பாலா நடராஜன், லதா கார்த்திகேயன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.மனித உணர்வுகளை முதன்மைப்படுத்தும் அவர்கள் எழுத்து படத்தின் தன்மையை உயர்த்திக்காட்டுகிறது.
வலிமையான எழுத்தை அதற்குச் சற்றும் சளைக்காமல் காட்சிகளாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன்.திரைக்கதை நுட்பங்களை வசனங்களில் மட்டும் சொல்லவேண்டும் என்று எண்ணாமல் அர்த்தம் மிகுந்த குறியீடுகள் மூலம் சொல்லி தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை நிறுவியிருக்கிறார்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போன்ற ஆர்ப்பாட்டங்களின்றி அலாதியான சுகானுபவம் தரக்கூடிய படம். அழுத்தமான ஒரு த்ரில்லராக மாறியிருக்க வேண்டிய படம். சில அடிகளில் தவறியிருக்கிறது. ஆனாலும் கொண்டாடப்பட வேண்டிய கிறிஸ்துமஸ் தான்.
– முத்து