சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகர் ஷபீர் நாயகனாகவும் ஜெயிலர் புகழ் மிர்னா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் பர்த் மார்க்.

இந்தப்படத்தில், தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விக்ரம் ஸ்ரீதரன் எழுதி இயக்கியிருப்பதோடு ஸ்ரீராம்சிவராமனோடு இணைந்து தயாரித்தும் இருக்கிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு உதய் தங்கவேல்,படத்தொகுப்பு இனியவன் பாண்டியன்,இசை விஷால் சந்திரசேகர்.

இந்தப்படம் பிப்ரவரி 23 அன்று திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் விக்ரம்ஸ்ரீதரன் உடன் ஓர் உரையாடல்.

1.பர்த் மார்க் படம் பற்றி..?

இது எங்களுடைய முதல் படம்.பார்த்துச் சலித்த கதைகளின்றி புதிதாக ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்போது தான் சுகப்பிரசவம் பற்றி விக்ரம் ஒரு விசயத்தைக் கூறினார்.அதன்பின் அதைப்பற்றி நிறையப் படித்தோம்.நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் தெரிய வந்தன.இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந்ததால் படமாக எடுத்துள்ளோம்.

2.கதைக்களம் மற்றும் அது நடக்கும் காலகட்டம் குறித்துச் சொல்லுங்கள்..?

இந்தக் கதையை 1990 களில் நடக்கிற மாதிரி எழுதியுள்ளோம்.கார்கில் போருக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய டேனி என்ற இராணுவவீரர், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை தன்வந்திரி என்கிற கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார். எந்தவிதமான சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர் போன இடம் அந்த கிராமம்.

அதை அப்படியே பிரதியெடுக்கும் வகையில், தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் கிராமத்தின் குறுக்கே ஒரு கிராமத்தை அமைத்தோம். 1990-களில் நடக்கும் கதை இது என்பதால் தேவையான ஆய்வு செய்யப்பட்டு அக்கிராமத்தை உருவாகி படப்பிடிப்பு நடத்தினோம்.

3.நடிகர்கள் பற்றி..?

இந்தக் கதையை எழுதியவுடன் ஷபீர் எங்கள் கதாபாத்திரத்திற்கான சரியானவராக இருப்பார் என்றெண்ணி அவரை அணுகினோம்.அவரும் கதையைக் கேட்டு அது பிடித்துப் போனதால் சம்மதம் சொன்னார். அப்போதிருந்து மற்ற படங்களைக் கூட விட்டுவிட்டு எங்களுடன் பயணித்தார்.படப்பிடிப்புத் தளத்திலும் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப யாருடனும் பேசாமல் அந்த உணர்வுடனேயே தனிமையில் இருப்பார்.

கதாநாயகிக்காக பல நடிகைகளைப் பார்த்தோம்.அவர்கள் ஜெனி வேடத்திற்குப் பொருத்தமாக இல்லை.அதன்பின் மிர்னா வந்தார்.அவரிடம், படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை விவரித்து நடிக்க வைத்தோம்.அதில் அவர் நடித்ததைப் பார்த்த போது, இவரைத் தவிர வேறு யாரும் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அதனால் தான் அவரை நடிக்க வைத்தோம். படப்பிடிப்புத் தளத்தில் மிர்னா, தனியாக அமர்ந்து குழந்தையுடன் பேசிக்கொண்டு இருப்பார்.

இவர்கள் இருவருமே தங்களை மனதளவில் தயார்ப்படுத்திக் கொண்டு நடித்ததால், படத்தின் அனைத்துக் காட்சிகளும் மிக இயல்பாக வந்திருக்கிறது.படம் வெளிவந்த பின் ஷபீர் மற்றும் மிர்னாவின் நடிப்பை இரசிகர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.

4.அறுவை சிகிச்சை மூலம் நடக்கும் பிரசவங்களுக்கு எதிராகப் பேசியுள்ளீர்களா?

அறுவை சிகிச்சை முறையிலான குழந்தைப் பிறப்புக்கு எதிராகவோ அல்லது இயற்கை குழந்தைப் பிறப்புக்கு ஆதரவாகவோ நாங்கள் பேசவில்லை.அதை ஒரு களமாக எடுத்துக்கொண்டு ஒரு தம்பதியின் மனப்போரட்டங்களையும், தனிமைப்படுத்துதலில் அவர்களுக்கு இடையே ஏற்படும் மாற்றங்கள், அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அதனால் அவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? அவற்றைத் தாண்டி மிர்னாவின் குழந்தை பிறப்பு எப்படி நடக்கிறது? என்பதை த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறோம்.

5.எதற்கு த்ரில்லர் பாணி..?

படத்தின் முதல் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படபடப்புடன் பார்க்கிற அளவுக்கு படத்தில் எதாவது ஒன்று நடந்துகொண்டே தான் இருக்கும். அது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் பார்க்க வைக்கும்படி தான் திரைக்கதை அமைத்திருக்கிறோம்.படத்தில் சில மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் உள்ளன.ஆனால், அதைவிட எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

6.இந்தப்படத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன?

ஒவ்வோர் குடும்பத்தில் நிகழும் குழந்தை பிறக்கும் செயல்முறை ஆண்கள் நினைப்பது போல் எளிதானது அல்ல. உடல் ரீதியான சவால்கள் தாண்டி மனரீதியாகப் பெண்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் குறித்தும் பேசப்பட வேண்டும். இது போன்றதொரு காலகட்டத்தில் தன் மனைவியுடன் கணவன் வரும்போது அவன் மீண்டும் பிறக்கிறான்.இது தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை அவனுக்கு ஏற்படுத்தும். இதைத்தான் உணர்த்த விரும்பினோம்.

-இளமுருகன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.