திருமணம் மீறிய உறவு குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஏற்கெனவே பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இன்னொருபடம் டெவில்.
நாயகன் விதார்த்தும் நாயகி பூர்ணாவும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.மணவாழ்வின்போது விதார்த்தின் ஒரு செயலால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகிறார் பூர்ணா. அந்நேரம் அவர் வாழ்வில் வருகிறார் நடிகர் திரிகுன்.அதனால் விதார்த் பூர்ணா தம்பதியர் வாழ்வில் சிக்கல்கள். அவை என்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதுதான் படம்.
விதார்த்துக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதிலும் தன்னை நிருபிக்கும் வகையில் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நம்பிக்கைதுரோகத்தின் வலி தாங்காமல் தவிக்கும் கதாபாத்திரத்தை தன் விழிகளாலேயே நிறைவு செய்கிறார் பூர்ணா.திரிகுன் உடனான சந்திப்பு அதற்குப் பிறகான காட்சிகள் எல்லாம் யூகங்களுக்கு உட்பட்டவையே.
விதார்த், பூர்ணா ஆகிய இரு மலைகளுக்கு நடுவில் தன்னைத் தக்க வைக்கப் பாடுபட்டு வென்றிருக்கிறார் திரிகுன்.
கார்த்திக் முத்துகுமாரின் ஒளிப்பதிவுக்கருவிக்கும் கறுப்புக்கண்ணாடி மாட்டிவிட்டுவிட்டார்கள் போலும். ஆனாலும் காட்சிகளின் நேர்த்தி இருளை மீறி சுவாசிக்க வைக்கிறது.
மிஷ்கின் இசையமைத்திருக்கிறார். பாடல்களில் குறைவில்லை. பின்னணி இசைக்கும்போது காட்சிகளில் அவர் வெளிப்படுத்த நினைத்த அதிர்வும் பார்வையாளர்களின் மனமும் பல இடங்களில் ஒத்துப்போகவில்லை.
எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபேர் என்று எளிதாகக் கடந்துவிடும் ஒரு செயலுக்குள் ஒளிந்திருக்கும் ஓராயிரம் உணர்வுகளைக் காட்சிகளில் வெளிப்படுத்திவிட முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆதித்யா.
அதில் அவர் பேசியிருக்கும் கருத்துகள் புறக்கணித்துவிட இயலாதவை என்பது அவருக்கான பலம்.
– வேலன்