திரைப்படத்துறையில் மக்களுக்கு தேவையானதை அவர்கள் விரும்பும் வகையில் வழங்கும் படைப்பாளிகள் உள்ளனர். படைப்பாளிகள் சிலர் தங்களுடைய தேடலில் கிடைக்கும் சில அரிய கதாபாத்திரங்களை முதன்மைப்படுத்தி எதிர்காலத்திற்கு தேவையான விடயம் ஒன்றை பற்றிய விழிப்புணர்வை படைப்பாக வழங்குவர். அந்த வகையில் அறிமுக இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் மற்றும் அவரது குழுவினர் ஓராண்டு ஆய்வுக்குப் பிறகு உருவாக்கி இருக்கும் ‘பர்த் மார்க்’ எனும் திரைப்படம்… அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

1999 களில் நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் பங்கு பற்றிய இந்திய ராணுவ அதிகாரிகள் சிலருக்கு Post War Trauma எனும் தற்காலிக மன அதிர்ச்சி பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பில் உள்ள நாயகன் தன் மனைவி மீது அன்பு செலுத்துகிறான். ஆனால் அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள். அவளது பிரசவத்தை வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்று விரும்பி, இயற்கையான முறையில் பிரசவத்தை நிகழ்த்தும் தனியார் இயற்கை மருத்துவ கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவர் தன்னுடைய மன அதிர்ச்சிக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே.., தன் மனைவியை கவனித்துக் கொள்கிறார். ஒரு புள்ளியில் தன் மனைவியின் வயிற்றில் வளரும் கரு தன்னுடையதா..! என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. இதற்கான விடையை அவரது மனைவி இவரின் நடவடிக்கையை துல்லியமாக அவதானித்த பிறகு, நேரடியாக அவரிடம் தெரிவிக்கிறார். அதன் பிறகு அவர்கள் மீண்டும் இணைந்தார்களா..? இயற்கையான முறையில் பிரசவம் வெற்றிகரமாக நடந்ததா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

ராணுவ அதிகாரியின் வீரதீர சாகசம் என்றால்.. அதனை ரசிக்கலாம். ஆனால் அதே ராணுவ அதிகாரி மன அதிர்ச்சிக்கு ஆளாகி தன்னிலை தடுமாறும் கதாபாத்திரம் என்றால்… இதனை பாமர ரசிகர்கள் உட்கிரகிப்பதற்கு சிரமம் ஏற்படலாம். இதனை இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மூவரும் இணைந்து நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருந்தாலும்… இதனை புரிந்து கொள்வதற்கு சற்று சினிமா ரசனை மேம்பட்டவர்களால் மட்டுமே முடியும்.

இந்த திரைப்படம் முழுவதும் திட்டமிட்டு கதாபாத்திரங்களை திரையில் காட்சி படுத்தாமல்.. அவர்களின் இயல்புக்கு ஏற்ப காட்சிப்படுத்தியிருப்பது புதிது. அதேபோல் சில கதாபாத்திரங்களை ரசிகர்களின் கோணத்தில் யூகிக்க விட்டிருப்பதும் புதிது. குறிப்பாக செபாஸ்டின் எனும் கதாபாத்திரத்தை  குறிப்பிடலாம்.

பிரம்மாண்டமான குளியல் தொட்டிக்குள் சௌகரியமாக அமர்ந்து இயற்கையான முறையில் பிரசவத்தை மேற்கொள்வதற்கான நடைமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கதை ஒரு பிரிவினருக்கு பிடிக்கலாம்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிர்ணா- கர்ப்பிணி பெண்ணாகவே நடிப்பு தன் திறமையை நிரூபித்திருக்கிறார். டான்சிங் ரோஸாக ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் ஷபீர்- கதையின் நாயகனான டேனியல் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.

நடிகர், நடிகைகளின் நடிப்பை கடந்து, படத்தின் ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும், இசையமைப்பாளரும் இணைந்து படத்தை ரசிக்க வைக்க இஷ்டப்பட்டு கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கலாம். 

பர்த்மார்க் – பெஞ்ச்மார்க்

 

தயாரிப்பு : சேப்பியன்ஸ் என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள் :  ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர், மிர்ணா மற்றும் பலர்.

இயக்கம் : விக்ரம் ஸ்ரீதரன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.