எவ்வளவு பேசினாலும் தீராதது உறவுச்சிக்கல்கள். அதிலும் ஆண் பெண் உறவு குறிப்பாக காதல் உணர்வுக்குப் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.அவை குறித்துப் பேசவும் நிறைய உண்டு. அப்படி ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு ஓர் உரையாடலை நிகழ்த்துகிறார் இயக்குநர் பிரபுராம்வியாஸ்.
நாயகன் மணிகண்டனுக்கு சொந்தமாக ஒரு குளம்பிக்கடை (காபி கடை அல்லது கஃபே) வைக்க ஆசை. அதற்கும் முன்னதாகவே நாயகியுடன் காதல். காதலி தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று எண்ணும் அதீதஎண்ணம். அதனால் பல சிக்கல்கள்.அவை என்ன? அவற்றின் முடிவு என்ன? என்பதுதான் படம்.
இன்றைய உயர்நடுத்தர வர்க்க இளைஞர்களைப் பிரதிபலிக்கும் வேடம் ஏற்றிருக்கிறார் மணிகண்டன். அதற்குத் தகுந்தபடி நடித்துமிருக்கிறார். அன்பு எனும் பெயரால் நடக்கும் அராஜகங்களைச் சிறப்பாகச் செய்கிறார். இனிவரும் காலங்களில் காதலன் காதலிகளுக்குள் சிக்கல் வரும் நேரத்தில் லவ்வர் மணிகண்டன் போல இருக்கிறான் என்று பல காதலிகள் குற்றம் சொல்ல வாய்ப்புள்ள மாதிரி நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீகெளரிபிரியாவுக்கும் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம்.அதை உள்வாங்கி நடித்திருக்கிறார். காதலனின் தொல்லை தாங்காமல் தவிப்பதும் பிரிவின்போது துடிப்பதும் அவரைக் கவனிக்க வைக்கின்றன.
கண்ணா ரவி,ஹரிஷ் குமார்,சரவணன்,கீதா கைலாசம் ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளைச் சரியாகச் செய்து திரைக்கதையோட்டத்துக்கு உதவுகிறார்கள்.
ஸ்ரேயாஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் இளமைத்துள்ளல். அழகான காட்சிகள் மட்டுமின்றி இளமனங்களின் வலிகளையும் காட்சிகளில் காட்டியிருக்கிறார்.
ஷான்ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை சூழல்களுக்கு ஏற்ப இசைந்திருக்கிறது.
அகம் புறம் எனும் இருபெரும் இயல்களுக்குள் இயக்குநர் பிரபுராம்வியாஸ் அகத்தினுள் பயணித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் கூறியதுகூறல் சிக்கல் இருப்பினும் எடுத்துகொண்ட மையக்கருவுக்கு நியாயம் செய்யும் நோக்கில் பயணம் இருக்கிறது.நாயகனின் வாழ்விலிருந்தே அவருக்குக் கற்பிக்கப்படும் பாடம் அவருக்கு மட்டுமன்று. கொஞ்சம் விரித்துப் பார்த்து உணர்ந்தால் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம் இருக்கிறது.
நாயகன் மணிகண்டன் உள்ளிட்டு ஒட்டுமொத்தக் குழுவும் அதை உணர்ந்து இயங்கியிருப்பது பலம்.
– தனா