வளர்ப்பு பிராணிகளை போட்டி மற்றும் பந்தயங்களுக்கு பயன்படுத்தும் கலாச்சாரம் தமிழகத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதில் சேவல் சண்டை, கிடா சண்டை, புறா பந்தயம் ஆகியவை முக்கியமானவை. இவை இன்றும் உயிர்ப்புடன் தமிழக பகுதிகளில் இயங்கி வருகிறது. அந்த வகையில் தென் தமிழகத்தின் முக்கிய பகுதியான நாகர்கோயிலில் புறா பந்தயம் பிரபலம். இதனை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘பைரி’ எனும் திரைப்படம்.. அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
திருமலை- சரஸ்வதி தம்பதிகளின் வாரிசான லிங்கம் என அழைக்கப்படும் ராஜலிங்கம் பால்ய பிராயத்திலிருந்தே புறா பந்தயங்களுக்கு செல்லக்கூடாது என்றும், புறாவை வளர்க்க கூடாது என்றும் பெற்றோர்களால் கண்டிப்புடன் வளர்க்கப்படுகிறார். ஆனால் அவரது நண்பர் அமல்- புறாவை வளர்த்து அதை வணிகமாக்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார். அவருடைய தூண்டுதல் காரணமாகவும், சூழ்நிலை காரணமாகவும்.. லிங்கம் புறா வளர்க்கிறார். ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது அம்மா வேண்டா வெறுப்பாக சம்மதம் தெரிவிகாக..புறா வளர்க்கிறார் லிங்கம். மெல்ல மெல்ல அவர் புறா பந்தயத்தின் மீது கவனம் திரும்ப.. ஒரு புள்ளியில் தான் வளர்த்த புறாவை பந்தயத்தில் பங்குபற்ற வைக்கிறார். புறா பந்தயத்திற்கு போட்டியிடும் பலரில்.. சுயம்பு எனும் வில்லன் கதாபாத்திரம் நடுவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு குளறுபடி செய்து அவருடைய புறா 20 மணி நேரத்திற்கும் அதிகமாக பறந்தது என தீர்ப்பை பதிவு செய்கிறார். அவரை வெற்றி கொள்ள வேண்டும் என்றால் லிங்கம் வளர்க்கும் புறா அதற்கும் மேலாக பறக்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இந்த சூழலில் லிங்கம் வளர்க்கும் பந்தயப் புறாக்களை பைரி எனும் கழுகு இரையாக்கி கொள்கிறது. ஒருபுறம் பைரி -மறுபுறம் சுயம்பு- மற்றொருபுறம் தாயின் கண்டிப்பு – இவற்றையெல்லாம் மீறி நாயகன் புறா பந்தயத்தில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான் ‘பைரி’ படத்தின் கதை.
யதார்த்த வாழ்வியலை படைப்பு ரீதியாக பதிவு செய்கிறோம் என்கிற போர்வையில் இயக்குநர் ஜோன் கிளாடி- சமூகப் பொறுப்பில்லாமல் செயல்பட்டிருக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் சென்னைக்கு அடையாளமாக திகழும் கெட்ட வார்த்தையை போல்.. நாகர்கோயிலுக்கு அடையாளமாக திகழும் கெட்ட வார்த்தையை பெரும்பாலான கதாபாத்திரங்களை பேச வைத்திருக்கிறார். இதை தவிர்த்திருக்கலாம்.
ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான படைப்பை வழங்க வேண்டும் என்பதற்காக படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் உச்ச ஸ்தாயில் கத்துவது.. கத்துவது போல் பேசுவது… ரத்த அழுத்தத்தை தான் அதிகரிக்கிறது.
அமலாக நடித்திருக்கும் இயக்குநர் ஜான் கிளாடிக்கும், லிங்கமாக நடித்திருக்கும் நாயகன் சயீத் மஜீத்திற்கும் இடையேயான நட்பு.. அழுத்தமாக இல்லாமல் மேலோட்டமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் சுயம்புவால் லிங்கம் பாதிக்கப்படும்போது அவரைக் கொல்வதற்காக அமல் முயற்சிப்பதும் அது தோல்வியில் முடிந்தவுடன் உயிருக்காக அஞ்சி நடுங்குவதும் .. இரண்டு கதாபாத்திரத்தின் மீதும் பரிதாபத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் இது எந்த வகையிலான கதாபாத்திர படைப்பு என்பதும் புரியவில்லை.
படத்தில் ஆறுதலாகவும் அனைவரையும் கவரும் வகையிலும் ரமேஷ் பண்ணையாரின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இயக்குநரை தாராளமாக பாராட்டலாம். அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகர் ரமேஷ் ஆறுமுகத்தின் நடிப்பும் கைத்தட்டலைப் பெறுகிறது.
புறா பந்தயத்தைப் பற்றியும் புறா பந்தயத்தில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலையும் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இந்த படத்தை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு இருப்பது உண்மை என்றால்.. இதனை ரசிகர்கள் படமாளிகைக்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் இதனை படக் குழு தவற விட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை டிஜிட்டல் தளங்களில் வெளியான பிறகோ அல்லது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதோ பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே மேலோங்குகிறது.
பந்தயங்களில் பங்குபற்றும் புறாக்களின் பெயர், புறாக்களை பற்றிய அரிய தகவலையும் ஆவணப்படுத்தியதற்காக படக்குழுவினரைப் பாராட்டலாம்.
சரஸ்வதியாக நடித்திருக்கும் நடிகை விஜி சேகரின் நடிப்பு பிரமாதம். சுயம்புவாக நடித்திருக்கும் நடிகர் வினு லாரன்ஸ் பொருத்தமான தேர்வு. நாயகன் லிங்கத்தின் காதலியாக வரும் ஷரோன் ( மேக்னா எலன்) சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் இளமையும் அழகும் கவனிக்க வைக்கிறது.
ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், பின்னணி இசை, படத்தொகுப்பு, கலை இயக்கம், கிராபிக்ஸ்… ஆகிய அனைத்தும் தரமாக அமைந்திருப்பது.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
பைரி – கவராத டிஜிட்டல் பந்தய புறா