சாதி மாறித் திருமணம் செய்தால் ஊரைவிட்டுப் போகவேண்டும் இல்லையெனில் உயிரை விட வேண்டும் என்கிற கொடிய கட்டுப்பாட்டை வைத்திருக்கும் கிராமமொன்றில் பிறந்த நாயகன் வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்கிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பதுதான் அரிமாபட்டி சக்திவேல். இதில் அரிமாபட்டி என்பது கதை நடக்கும் கிராமம். சக்திவேல் கதாநாயகனின் பெயர்.
பெரியார் அம்பேத்கர் போன்றோரை அடையாளப்படுத்தி படம் பேசவரும் சாதி மறுப்புக் கருத்தை துணிவாக வெளிப்படுத்தியிருப்பதற்கு இயக்குனரைப் பாராட்டலாம்.
படத்தின் கதை,திரைக்கதையை எழுதி நாயகனாகவும் நடித்திருக்கிறார் பவன்.படத்தைத் தயாரித்திருக்கும் இருவரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இவருக்கு, மேல்நிலைப்பள்ளி மாணவர், திரைப்பட உதவி இயக்குநர் ஆகிய இரு வகைத் தோற்றங்கள்.தோற்றங்களில் மட்டுமின்றி நடிப்பிலும் மாறுபாடு காட்ட முயன்றிருக்கிறார். இன்னும் கொஞ்சம் தேர்ச்சி வேண்டும்.
நாயகியாக மேக்னாஎலன். கிராமத்து அழகு என்பதற்கேற்ப செழிப்பாக இருக்கிறார். நடிப்பிலும் குறையில்லை.காதல் உணர்வுகள், பய உணர்ச்சி ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துகிறார்.
நாயகனின் அப்பாவாக சார்லி நடித்திருக்கிறார்.திருமணத்துக்குப் பின் மகன் மாறிவிட்டான் என்று வருந்தித் துன்புறும் வேடம்.வழக்கம்போல் சற்றுமிகை நடிப்பென்றாலும் நெகிழவைக்கிறார்.
நாயகியின் அண்ணனாகவும் கதையில் வில்லனாகவும் நடித்திருக்கும் பிர்லா போஸ் வேடத்துக்கேற்ப விறைப்பாக இருக்கிறார்.
நாயகனின் தாத்தாவாக வரும் அழகு, அரசியல்வாதியாக வரும் இமான் அண்ணாச்சி, சூப்பர்குட் சுப்பிரமணி,சேதுபதி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் தம் நடிப்பின் மூலம் திரைக்கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
மணி அமுதவனின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை அளவு.
ஜெபி மேனின் ஒளிப்பதிவு, கதைக்களத்தையும் கதை மாந்தர்களையும் உள்ளது உள்ளபடி காட்சிப்படுத்தியிருக்கிறது.
ரமேஷ் கந்தசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.பார்த்துப் பழகிய கதைதான் எனினும் அதை சுவையாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.அதுமட்டுமின்றி, இந்நிகழ்வுகள் ஒரு கிராமத்தில் இன்னமும் தொடர்கின்றன என்பதையும் அதனால் அவ்வூரைவிட்டு வெளியேறி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் குறித்த விவரங்களைக் கடைசியில் காட்டியதன் மூலம் படத்தைப் புதிது போல் ஆக்கிவிட்டார்.
– அரசன்