தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக எடுக்கிறார்கள். அந்தப்படத்துக்கு’இளையராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். இளையராஜா திரைப்படத்தை ராக்கி, சாணிகாயிதம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை வழங்குகின்றன. ஸ்ரீராம் பக்திசரண் சி.கே. பத்ம குமார், வருண் மாத்தூர், இளம்பரிதி கஜேந்திரன் மற்றும் சௌர்ப் மிஸ்ரா ஆகியோர் இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பு செய்கிறார்.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா, சென்னையில் மார்ச் 20,2024 அன்று நடைபெற்றது.

நடிகர் தனுஷ் இளையராஜாவாக தோற்றமளிக்கும் அழகான வடிவமைப்பை வெளியிட்டு இப்படத்தினைத் தொடக்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

இந்த நிகழ்வில் இளையராஜா,கங்கை அமரன், இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோருடன் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது…
 
உலக அதியசங்கள் என எதை எதையோ சொல்கிறோம் ஆனால் இளையராஜா நம் நாட்டின் அதிசயம். நான் சிறு வயதிலிருந்து அவனுடன் பழகி வருகிறேன், ஆனால் அவனது திறமை, இசை என்னாலேயே நம்பமுடியாதது. கையில் என்ன கிடைத்தாலும் உடனே இசையமைக்க ஆரம்பித்துவிடுவான். அவன் அருகில் இருப்பதால் அவன் அருமை தெரியவில்லை. இந்திய மாநிலங்கள் அனைத்தும் இணைந்து திரைத் துறையினர் ஒன்று சேர்ந்து அவனுக்கு விழா எடுக்க வேண்டும் அதில் நான் பங்கு கொள்ள வேண்டும் அதுவே என் ஆசை. அவன் ஒரு அதிசயப்பிறவி, எத்தனை நூற்றாண்டு காலம் ஆனாலும் இந்திய நாடு இளையராஜாவை மறக்க முடியாது. இளையராஜாவின் பயோபிக்கை எடுப்பது மிகவும் கஷ்டம், நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும். தனுஷ் இதில் இணைந்துள்ளார், மகிழ்ச்சி, கடவுள் எப்படி ஒன்று சேர்த்துள்ளார் பாருங்கள். அற்புதமான நடிகன். நடிகர், இயக்குநர், பாடலாசிரியர் என அனைத்திலும் ஜொலிக்கக்கூடியவன். தனுஷ் நடிப்பது எனக்குப் பெரு மகிழ்ச்சி. இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் நான் ஒரு படம் செய்திருக்கிறேன், மிகவும் முரட்டுத்தனமான இயக்குநர். என்னையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு இயக்குநர் என்றால் அவன் தான். மிகத் திறமைசாலி அவர் இந்த படத்தை இயக்குவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய எனது வாழ்த்துகள் என்றார்.

இவ்விழாவினில் நடிகர் தனுஷ் பேசியதாவது..,

இது எனக்கு உண்மையிலேயே நிறைவான தருணம்.எனது சிறுவயதிலிருந்தே, மேஸ்ட்ரோ இளையராஜா சாரின் மயக்கும் மெல்லிசைக்கு நான் இரசிகன். நம் எண்ணங்களே நம்மை வடிவமைக்கின்றன என்று கூறுவார்கள். அது தான் உண்மை, நாம் முழு மனதுடன் நம் கனவை நோக்கி நம்மை அர்ப்பணிக்கும் போது, அவை நிறைவேறும்.எனக்கு இரண்டு பேரின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது கனவு. ஒன்று ரஜினிகாந்த் சார், மற்றொன்று இளையராஜா சார், இப்போது இளையராஜா சாரின் பாத்திரத்தில் நான் நடிப்பது மிகப் பெரிய மகிழ்ச்சி. பலர் தங்கள் மன அமைதிக்கு இளையராஜாவின் பாடல்களை நாடுகிறார்கள். பலர் உறக்கத்திற்காக அவரது பாடல்களில் மூழ்குவார்கள், நான் என் பல இரவுகளை அவரது இசையுடன் கழித்துள்ளேன். வெள்ளித்திரையில் அவரது பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இப்போது அது நடப்பது மிகுந்த மகிழ்ச்சி.எனது திரை வாழ்க்கையில் ஆரம்பம் முதல் இப்போது வரை, ஒரு நடிகனாக உண்மையிலேயே சிறப்பான நடிப்பை வழங்க வேண்டிய தருணத்தில் எல்லாம்,எனது இயர்போன்கள் மூலம் அவரது இசையில் மூழ்கி, அதன் மூலமே என் நடிப்பை வெளிப்படுத்துவேன். இன்று வரை எனக்கு நடிப்பு சொல்லித்தருவது அவரது இசை தான். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். இளையராஜா சாரின் உண்மையான அபிமானியான மாண்புமிகு கமல்ஹாசன் சாரின் வருகைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருண் மாதேஸ்வரன் ஒரு மகத்தான பொறுப்பின் கனத்தை உணர்கிறார் என்பது புரிகிறது. ஆனால் இந்தத் திரைப்படத்தை மிக மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் உருவாக்கலாம் என அவரை ஊக்குவிக்கிறேன். ஏனெனில் இது கலையின் மீதான காதல் இளையராஜாவின் மீதான காதல். அனைவருக்கும் என் நன்றிகள்.

நிகழ்வில் கமல்ஹாசன் பேசியதாவது….

எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்பதே எனக்குப் புரியவில்லை இது மிக நீண்ட ஒரு பயணம் எங்களுக்கு இடையிலான நட்பு என்பது மிகப்பெரியது.இவர் தான் இளையராஜா என்று தெரியாமல் இருந்த காலத்திலிருந்து அவரை அறிந்தவன் நான். பாவலர் பிரதர்ஸ் உடன் பணி புரியும் காலத்திலிருந்து இவரைத் தெரியும். நான் அப்போது அமர் தான் இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு விழாவில் இளையராஜாவைச் சந்தித்தபோதுதான் தெரிந்தது.அவரது இசைக்கு இரசிகனாக ஆரம்பித்துக் கொஞ்ச நாளில் அண்ணனாக மாறி பின்பு அய்யாவாக மாறி இன்று வரை தொடர்கிறது.எனக்கு இசையில் நாட்டமில்லை என்பதால் எனக்கு அவர் மீது பொறாமை இல்லை அவரை இரசித்துக்கொண்டே அவரது வெற்றிகளை எல்லாம் என் வெற்றியாய் நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். குணா படப் பாடல் குணாவுக்கும் அபிராமிக்குமானதல்ல எனக்கும் அவருக்குமான காதலைச் சொல்லும் பாடல். நான் எழுதினேன், அவர் இசையமைத்தார். எங்கள் காதல் பாடல் அது. ராஜாவின் கதையை எளிதாக எடுக்கலாம்.கஷ்டம் அல்ல. அதை எடுக்கணும் என்று நினைத்தால் 8 பார்ட் வரை கூட எடுக்கலாம், ராஜாவைப் பிடிக்காதவர்கள் எடுத்தால் அது ஒரு மாதிரியானது. ராஜாவைப் பிடித்தவர்கள் எடுத்தால் அது வேறு மாதிரியாக இருக்கும், ஆனால் அதில் எல்லாவற்றிலும்  இளையராஜா தனித்துவமாக இருப்பார்.இங்கு பலர் தங்கள் வாழ்க்கையையே அவரது பாடல்களுடன் இணைத்துத் தான் ஞாபகத்தில் வைத்துள்ளார்கள். மிக மகிழ்ச்சியுடன் எந்த பிரஷரும் இல்லாமல் படத்தை எடுங்கள். ஏனெனில் இது இளையராஜாவின் படம் கிடையாது. பாரத ரத்னா இளையராஜாவின் படம். தனுஷ் மற்றும் இயக்குநருக்கு என் வாழ்த்துகள் என்றார். 

இயக்குநர் வெற்றிமாறன் பேசும்பொழுது….

இளையராஜா சாரின் மியூசிக் என்பது அம்மாவின் அன்பு மாதிரி, அது எப்போதும் நிலையானது. இங்கு நம் வாழ்க்கையின் அத்தனை தருணங்களிலும் அவர் உடன் இருந்திருக்கிறார்.அவரது இசையால் எப்போதும் அவர் நம்முடன் தான் இருக்கிறார்.அவரது ஒவ்வொரு பாடல்களைக் கேட்கும் போதும் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்கள் எங்களுக்கு ஞாபகம் வரும்.தற்போது அவரிடம் பணி புரியும் போது அவரைப் பற்றி நிறையத் தெரிய வந்தது.உண்மையில் அவர் மிகத் தன்னடக்கமானவர்.என்னிடம் படம் குறித்து ஏதாவது விவாதிக்கும் போது கூட இதை நான் சொல்லலாமா? என அனுமதி கேட்பார். அவர் இசையமைப்பைப் பார்ப்பது வரம், அவர் இசையில் மெஜீசியன். விடுதலை படத்தில் ஒரு பாடலுக்கு நான்கு பாடல்கள் தந்து விட்டார்.அவர் வரலாற்றை எடுப்பது என்பது நம் நாட்டின் வரலாற்றுப் பதிவு ஆகும். கிட்டதட்ட 80 வருட வரலாறு.நம் வரலாற்றின் புக்மார்க்க்காக அவர் இசை இருக்கிறது. அவர் வாழ்வு படமாவது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது.அதிலும் தனுஷ் நாயகனாக நடிப்பது இன்னும் மகிழ்ச்சி.அவருக்கு இது மிகப் பெரிய சவால் ஆனால் அந்த சவால்களை அவர் தாண்டி வருவார்.இயக்குநர் அருணுக்கு இது மிகப்பெரிய பரிசு.இந்தப் படத்தில் இளையராஜா சார் இசையைக் கேட்க நான் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

இந்தப்பட வடிவமைப்பில் இப்படத்துக்கு இசையமைப்பது யார்? என்பது குறித்து வெளிப்படுத்தப்படவில்லை.ஆனால் வெற்றிமாறன் பேச்சில், இந்தப் படத்தில் இளையராஜா சார் இசையைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சொல்லியிருப்பதன் மூலம் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு இளையராஜாவே இசையமைக்கிறார் என்பது தெரியவருகிறது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.