ஒரு நிகழ்வுக்குப் பல பக்கங்கள் உண்டு.திரைமொழியில் இதை திரைமொழியில் ரஷோமோன் விளைவு என்றுகூடச் சொல்வார்கள்.அந்த வகையில் உருவாகியிருக்கிறது இந்தப்படம்.
நாயகன் பிக்பாஸ் புகழ் ஷாரிக்ஹாசனும் நாயகி ஹரிதா மற்றும் சில நண்பர்கள் சுற்றுலா செல்கிறார்கள்.போன இடத்தில் திடீரென நாயகன் காணாமல் போகிறார்.அவரைக் காணோம் என்று காவல்துறையில் புகார் கொடுத்த நண்பரும் காணாமல் போகிறார்.இதுகுறித்த காவல்துறை விசாரணையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
ஷாரிக்ஹாசனுக்கு பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான வேடம்.அதைப் புரிந்து நடித்து தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்.
நாயகி ஹரிதா படத்தில் வரக்கூடிய பல கதாபாத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்.அதில் தன்னைத் தனித்துத் தெரிய வைக்க வேண்டும் என்று நினைத்து நடித்திருக்கிறார்.
அரவிந்த்,திவாகர் குமார்,நிதின் ஆதித்யா,மோனிகா ரமேஷ்,காவ்யா அமிரா ஆகியோரும் குறைவில்லை.காவல்துறை விசாரணையின்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை என்பதைக் காட்டுகிறார்கள்.
விஷால்.எம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கதையில் இருக்கும் பரபரப்பைத் திரையில் கொண்டுவர முயன்றிருக்கிறார்.
கெவினின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம்.பின்னணி இசையிலும் தாழ்வில்லை.
படத்தொகுப்பாளர் கோவிந்த்துக்கு இது சவாலான படம்.அதனால் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார்.
சாய்ரோஷன்.கே.ஆர் எழுதி இயக்கியிருக்கிறார்.எழுதியதைத் திரையில் கொண்டுவர இன்னும் கூடுதலாக மெனக்கெட்டிருக்க வேண்டும் என்று நினைக்க வைத்திருக்கிறார்.
வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டுப் படமெடுக்கவேண்டும் என்று நினைத்து கதாநாயகன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பதும் படத்தைக் கொண்டு சென்றிருக்கும் விதமும் வரவேற்புக்குரியன.
– இளையவன்