ஒரு பல்கலைக்கழக வளாகத்தைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு பல உளவியல் சிக்கல்கள் குறித்துப் பேச விழைந்திருக்கும் படம் போர்.
அர்ஜுன் தாஸ் படிக்கும் வளாகத்தில் முதலாண்டு மருத்துவக்கல்லூரி மாணவராக வந்து சேருகிறார் காளிதாஸ் ஜெயராம். இருவருக்கும் ஏற்கெனவே பகை.அது இங்கும் தொடருகிறது. இவர்களுக்குள்ளான போர் எதுவரை போகிறது? என்பதைச் சொல்வதுதான் படம்.
அர்ஜூன் தாஸ், வழக்கம்போலவே இறுக்கமான முகத்துடனும் அழுத்தமான குரலுடனும் வளையவருகிறார்.காதல் காட்சிகளிலாவது கொஞ்சம் இளகியிருக்கலாம்.
காளிதாஸ் ஜெயராமின் மென்மையான தோற்றத்துக்கு மாற்றான கதாபாத்திரம்.அதற்குத் தக்க நடிக்க முயன்றிருக்கிறார்.காதல் காட்சிகளில் நன்றாகப் பொருந்தியிருக்கிறார்.
அர்ஜூன் தாஸின் காதல் இணையாக சஞ்சனா நடராஜன், பல்கலைக்கழக மாணவர் தலைவர் தேர்தலில் போட்டியிடும் டி.ஜே.பானு, அதேதேர்தலில் பணபலம் மற்றும் அதிகாரபலத்தோடு போட்டியிடும் அம்ருதாசீனிவாசன் ஆகிய நாயகிகள் படத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை.நாயகர்களுக்கு இணையாக இவர்களுக்கும் திரைக்கதையில் முக்கியப் பங்கு இருக்கிறது.
சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி ஆகியோரின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.
ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன் மற்றும் கௌரவ் கோட்கிண்டி ஆகியோர் பின்னணி இசைத்திருக்கிறார்கள்.முடிந்தவரை திரைக்கதைக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
ஜிம்சி காலித் மற்றும் ப்ரெஸ்லி ஆஸ்கர் டி செளஸா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.திரைக்கதையின் இருண்மையை காட்சிகளில் எதிரொலித்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் பிஜாய் நம்பியார். அறிமுகம், களம், பகை, மையல், முரசொலி, விழா, போர் என ஏழு அத்தியாயங்களாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்.மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகம் என்று சித்தரித்திருப்பது மிகைப்படுத்தும் வகையில் உள்ளது.விதவிதமான பெயர்களுடன் போதைபொருட்களின் பெயர்களை உச்சரிப்பதையெல்லாம் திரையில் தவிர்த்திருக்கலாம். இந்தக் குறையைத் தாண்டி நுட்பமாகப் பல விசயங்கள் குறித்த உரையாடல் நிகழ்த்த முனைந்திருக்கிறார் பிஜாய்நம்பியார்.
– கதிரோன்