பெரும் வனத்தையொட்டிய ஒரு கிராமத்தில், சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு குடியும் கூத்துமாக இருக்கிறார் நாயகன் ஜீ.வி.பிரகாஷ். ஒருநாள் திருடப்போன இடத்தில் நாயகி இவானாவைப் பார்க்கிறார்.பார்த்தவுடன் அவர் மீது காதல் கொள்கிறார்.இவானாவோ, நீயே ஒரு திருடன் நீ என்னைக் காதலிப்பதா? என்று ஏளனம் செய்து நிராகரிக்கிறார்.
இவானாவைக் காதலிப்பதற்காகத் திருட்டை விட்டுவிட்டு வேறு வழிகளில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.அந்த நேரத்தில் ஆதரவற்றிருக்கும் முதியவர் பாரதிராஜாவைத் தத்தெடுக்கிறார்.அவரைத் தத்தெடுக்க என்ன காரணம்? காதல் நிறைவேறியதா? என்பனவற்றிற்கான விடைகள் தாம் படம்.
திருடன்,குடிகாரன்,பொறுப்பற்றவன் ஆகிய பாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.கொங்குத் தமிழ் பேசுவதும் கொஞ்சம் எதிர்மறை வேடமேற்றிருப்பதும் புதிதாக இருக்கிறது.அதையும் நிறைவாகச் செய்திருக்கிறார்.
இந்த வேடத்துக்கு இவானாதான் மிகப்பொருத்தம் என்று எல்லோரும் நினைக்குமளவுக்கு நடித்திருக்கிறார்.கோபம், வேகம், காதல் ஆகிய உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதியவராக நடித்திருக்கும் பாரதிராஜாவின் வேடமும் அதற்கான அவருடைய நடிப்பும் நன்று.முதியவர்களுக்கே உரிய அதிகார தோரணை, புறக்கணிப்பின் வலி ஆகியன அவருடைய நடிப்பில் சரியாக வெளிப்பட்டிருக்கின்றன.
ஜி.வி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் தினா, நகைச்சுவைக்குப் பொறுப்பேற்று முடிந்தவரை நிறைவேற்றியிருக்கிறார்.
ஜீ.வி.பிரகாஷே பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். எல்லாப் பாடல்களும் கேட்கும் இரகம். பின்னணி இசையமைத்திருக்கும் ரேவா கதைக்கிசைந்து பணிபுரிந்திருக்கிறார்.
வனப்பகுதி, அதையொட்டியுள்ள கிராமம்,யானைகள் நடமாட்டம் என இயற்கை சூழ்ந்த வெளியை கதைக்களமாக்கி அதற்கேற்ற சுவாரசியமான திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் பி.வி.சங்கர்.அவரே படத்துக்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் என்பதால் சர்வ சுதந்திரமாகச் செயல்பட்டிருக்கிறார்.அதனால் காட்சிகளில் இனிமை நிறைந்திருக்கிறது.
எதிர்பார்க்கக்கூடிய வகையில் படம் நகர்வதும், திரைக்கதையில் இருக்கும் சில தொய்வுகளும் படத்துக்குப் பலவீனம்.
மேலோட்டமாகப் பார்த்தால் சாதாரண கதை போலத் தெரியும் இதற்குள் பல அடுக்குகள் இருக்கின்றன.அவற்றுக்குள் பல்வேறு மனித உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஜீ.வி.பிரகாஷின் முந்தைய படங்களால் இது நல்லபடம் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது.
– தனா