கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கொரு கொடுமை அவுத்துப் போட்டு ஆடுதுன்னு ஒரு சொலவடை உண்டு அதுமாதிரிதான் இருக்கு இங்க நான்தான் கிங்கு.
கடன் வாங்கி வீடு கட்டிட்டு அந்தக் கடனைக் கட்டுமளவுக்கு வரதட்சிணை கொடுக்கிற பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ண நினைக்கிறாரு சந்தானம்.அவர் நினைக்கிற மாதிரியே ஒரு ஜமீன் குடும்பத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்யறாரு.அதனால் கடன் தீருமென்று நினைத்தால் கடன் அதிகமாகுது.அது மட்டுமின்றி வேறொரு பெரிய சிக்கலும் வருகிறது. அவற்றை எப்படி எதிர்கொண்டார்? கடைசியில் என்னவானது? என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருப்பதுதான் படம்.
சந்தானம் வந்தால் சிரிக்க வைப்பார் என்கிற நம்பி வருபவர்களை ஏமாற்றாமல் சிரிக்க வைக்கிறார்.ஒவ்வொருவர் பேசும்போதும் அவர் திருப்பி அடிக்கும் இடங்கள் சிரிப்போ சிரிப்பு.
நாயகியாக நடித்திருக்கும் பிரியாலயா.அளவான அழகு.நடிப்பிலும் குறைவில்லை.கொடுக்கப்பட்ட வேடத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.
சந்தானத்துக்கு அடுத்தபடி அதிகம் கவனிக்க வைக்கிறார் தம்பிராமையா.ஜமீன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவர் நிலைமையும் அதை அவர் வெளிப்படுத்தியிருக்கும் விதமும் சிரிப்பு வெடிகள்.தம்பிராமையாவின் மகனாக நடித்திருக்கும் பாலசரவணனும் இவர்களோடு இணைந்து சிரிப்பை வளர்க்கிறார்.
விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், லொள்ளுசபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் ஆகிய அனைவருமே சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.அவர்களைப் பற்றி நாம் நினைப்பதை அவர்களே சொல்லிவிடுகிறார்கள்.எடுத்துக்காட்டுக்கு விவேக் பிரசன்னாவுக்கு யாரு இரட்டை வேடம் கொடுத்தா? என்பது.
ஓம்பிரகாஷ் இது முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் என்றுணர்ந்து வேலை செய்திருக்கிறார்.
டி.இமானின் இசையில் மாயோனே, குலுக்கு குலுக்கு ஆகிய பாடல்கள் இரசிக்க வைக்கின்றன.பின்னணி இசையும் பொருத்தம்.
படத்தொகுப்பாளர் தியாகராஜன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக உழைத்திருக்க வேண்டும்.
எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். ஆனந்த் நாராயணன் இயக்கியிருக்கிறார். வெகுமக்களைக் கவர்ந்த சமகால நிகழ்வுகள் மற்றும் திரைப்படக்காட்சிகளைக் கிண்டல் செய்வதை மக்கள் இரசிப்பார்கள் என்பதை உணர்ந்து எடுத்திருக்கிறார்கள்.உருவகேலிகளைத் தவிர்த்திருக்க வேண்டும்.
இப்படியெல்லாம் நடக்குமா? என்று உண்மைத்தன்மையைத் தேடாமல் காட்சிகளை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டால் நன்றாகச் சிரித்துவிட்டு வரலாம்.
– கதிரோன்
ட்ரெய்லர்…