சமகால அரசியல் நிகழ்வுகளை நினைவு படுத்தும்படியான காட்சிகளைச் சரியாகத் தொகுத்துக் கொடுத்தாலே மக்கள் கலகலப்பாகப் பார்த்து இரசிக்கும் படத்தைக் கொடுத்துவிடலாம் என்று காட்டியிருக்கிறது உயிர் தமிழுக்கு.

கேபிள் டிவி தொழிலில் இருக்கும் நாயகன் அமீர், அரசியல்தலைவர் ஆனந்தராஜின் மகளான நாயகி சாந்தினி ஶ்ரீதரன் மீது காதல் கொள்கிறார். அதற்காக அரசியலில் நுழைகிறார். ஒருகட்டத்தில் ஆனந்தராஜ் கொலை செய்யப்பட அந்தப்பழி அமீர் மீது விழுகிறது.நாயகியும் அதை நம்புகிறார்.இந்தப் பழியிலிருந்து மீள அமீர் செய்யும் செயல்களும் அதன் விளைவுகளும்தாம் படம்.

அமீருக்குள் இப்படி ஒரு கலகலப்பான நடிகர் இருக்கிறாரா? என்று அனைவரும் ஆச்சரியம்படும் வண்ணம் நடித்து இரசிகர்களிடையே வரவேற்புப் பெற்றிருக்கிறார்.காதல் காட்சிகளிலும் மனிதர் அசத்தியிருக்கிறார்.அவர் நடிகராகவே தொடரலாம்.

நாயகியாக அறிமுகமாகியிருக்கும் சாந்தினி ஶ்ரீதரன், முதல்படத்திலேயே ஏராளமான இரசிகர்களைப் பெற்றுவிட்டார்.அந்த அளவுக்கு அவருடைய அழகும் பாத்திரத்தை உணர்ந்த நடிப்பும் அமைந்திருக்கிறது.

ஆனந்த ராஜ், இமான் அண்ணாச்சி, ராஜ் கபூர், மாரிமுத்து, சரவண சக்தி, கஞ்சா கருப்பு ஆகிய அனைவருமே படம் வேகமாக நகரவும் சிரித்துக்கொண்டே செல்லவும் பயன்பட்டிருக்கிறார்கள்.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம், பின்னணி இசையிலும் தாழ்வில்லை.

தேவராஜின் ஒளிப்பதிவில் திரைக்கதையோட்டத்தின் பரிமாணங்கள் காட்சிகளாக விரிந்திருக்கின்றன.

இயக்குநர்கள் பாலமுரளிவர்மன், அஜயன்பாலா ஆகியோரின் வசனங்களில் சமகால அரசியல் அல்லோல கல்லோலப் பட்டிருக்கிறது.அதனால் படம் நெடுக சிரிப்பும் கும்மாளமுமாகப் போகிறது.

எழுதி இயக்கியிருக்கும் ஆதம்பாவா, அமீரை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்தித்தே காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

அப்படி, ஓவ்வொரு பூவாக எடுத்து அவர் கோர்ததவை
ஓர் அழகான மாலையாக அமீர் கழுத்தில் விழுந்திருக்கிறது.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.