குரங்கு பெடல் என்கிற பெயர் அதன் அர்த்தம் ஆகியன இக்கால கட்டத்தினருக்கு முற்றிலும் அந்நியம்.1970 மற்றும் 1980 களில் பிறந்தவர்கள் அனைவருமே இதைக்கடந்துதான் வந்திருப்பார்கள்.அக்கால கட்டத்தினருக்கு மலரும் நினைவுகளையும் இரண்டாயிரத் தலைமுறையினருக்கு ஒரு இனிய வாழ்வியலையும் அறிமுகப்படுத்தும் படம் குரங்கு பெடல்.
தொலைக்காட்சிகள் கூட இல்லாத காலத்தில் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொள்வது எல்லாச் சிறுவர்களுக்கும் தீராத தாகம்.அக்கால பள்ளி கோடைவிடுமுறைக் காலத்தில் சிறுவர்கள் மிதிவண்டி ஓட்டக் கற்றுக் கொள்ள நினைக்கிறார்கள்.அதற்கு மிதிவண்டி வேண்டுமே? அப்போது வாடகை மிதிவண்டிகள் கிடைக்கும்.அதை எடுத்துக் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார் சிறுவன் சந்தோஷ் வேல்முருகன்.ஆனால் அவருடைய அப்பா காளிவெங்கட், வாடகை வண்டி எடுக்கக் காசு கொடுக்க மறுக்கிறார். சிறுவன் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறான்.
அதன்பின் என்னவெல்லாம் நடந்தன? என்கிற கேள்வி திரைக்கதைக்கான விடையாக இருக்கும்.ஆனால் அப்படிச் சொல்லிவிட இயலாதபடி ஒரு முழுநீள மண்மணம் நிறைந்த வாழ்வியலைக் காட்சிப்படுத்திக் கண்கலங்க வைத்திருக்கிறார்கள்.
அக்காலகட்டத்தில் நடது போகிறவர்களுக்குப் பெயர் நடராஜா சர்வீஸ்.அந்தப் பெயருடன் நடித்திருக்கும் காளிவெங்கட்,அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறாரா? அல்லது அவர்தான் அந்தப்பாத்திரமா? என்று கேட்க வைத்திருக்கிறார்.
சந்தோஷ் வேல்முருகன்,இராகவன்,ஞானசேகர், சாய்கணேஷ், அதிஷ் ஆகிய சிறுவர்கள், கொங்கு நாடு எனச்சொல்லப்படும் மெற்கு மாவட்ட மொழி நடை உடை பாவனைகள் அனைத்தையும் அப்படியே பிரதியெடுத்திருக்கிறார்கள்.அவர்களுக்குப் பயிற்சி கொடுத்த ஈரோடு கலைக்குழுவினருக்குப் பாராட்டுகள்.
சிறுவனின் அக்காவாக நடித்திருக்கும் தக்ஷனா, அம்மாவாக நடித்திருக்கும் சாவித்திரி, வாத்தியாராக நடித்திருக்கும் செல்லப்பா, தோல் பாவைக் கலைஞராக வரும் குபேரன் ஆகிய அனைவரும் கொங்குத் தமிழர்களாகவே மாறியிருக்கிறார்கள்.
எல்லோரையும் ஈர்க்கும் கொங்குத்தமிழ் பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் ஜென்சன் திவாகர் ஆகியோர் உச்சரிப்பில் கொங்கு மக்களே மயங்கிப்போவார்கள் என்பது நிச்சயமுங்க.
ஒளிப்பதிவாளர் சுமீ பாஸ்கரனுக்கு நல்ல கதைக்களம் கிடைத்திருக்கிறது.அதை உணர்ந்து காட்சிகளை வடிவமைத்து சிறந்த காட்சியனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் சுகம்.பின்னணி இசை இதம்.
இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் எனும் சிறுகதை இயக்குநர் கமலக்கண்ணனின் வாசிப்பினால் திரையில் நிறைந்திருக்கிறது.
மன அழுத்தம், மன உளைச்சல் என்கிற சொற்களுக்கு இடமே இல்லாத வாழ்க்கை இதுதான் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நுங்குக் குளிர்ச்சியுடன் கொடுத்திருக்கும் இயக்குநர் கமலக்கண்ணனுக்கு வாழ்த்துகள்.
– தனா
சமீப காலங்களில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பானதாக நான் கருதும் படம் ‘குரங்கு பெடல்’.
Nepotism என்று கருதக்கூடாது .
காக்கா முட்டைக்கு பிறகு குழந்தைகளை முக்கிய பாத்திரங்களில் வைத்து இயக்கப்பட்ட படங்களில் இது பிரமாதமாக வந்திருக்கிறது. இரண்டு மணி நேரப்படத்தில் ஒரு நொடி கூட போர் அடிக்கவில்லை including பாடல் காட்சிகள்.
நாமெல்லாம் மறந்து போன சுதந்திரமான கோடைக்கால விடுமுறைகள் , சைக்கிள் பயிற்சி போன்றவையெல்லாம் திரும்ப நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன். கிராமத்து மனிதர்கள் அனைவரும் உயிரோட்டமாக வருகின்றனர்.
படத்தின் இறுதிக்காட்சிகளில் ஒரு சைக்கிள் பந்தயத்தை வைத்து உச்சகட்ட காட்சிகளுக்கு புத்திசாலித்தனமாக உயிர் கொடுத்துள்ளனர். நடிகர்கள், குழந்தை நடிகர்கள் அனைவரும் வெகு சிறப்பு. அதுவும் மிலிட்டரியாக வரும் பிரசன்னாவும் குடிகாரனாக வரும் ஜென்சன் திவாகரும் பின்னி எடுக்கின்றனர்.
பேய் பிசாசு படங்களுக்கு கூட்டிச் செல்வதை விட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தப் படத்திற்கு அழைத்துச் சென்று தங்கள் கடந்த கால நினைவுகளை அவர்களுக்கு கடத்தலாம்!!
–நன்றி. பாலகுரு. வாட்ஸப் பகிர்வு.