நாட்டில் நிகழும் ஒரு சிலரின் வெறுப்புப் பேச்சுக்கான காமெடி பதிலாக இந்த Malayalee From India படம்.
இந்தியாவில் நிகழும் வெறுப்புப் பேச்சுக்களால் கடுப்பான நபரா நீங்கள்..? உங்களுக்கு முதல் பாதி செம்ம ஜாலியாக இருக்கும்.
த்யான் சீனிவாசனும், நிவின் பாலியும் கேரளாவில் தண்ட சோறாக சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்கள். இஸ்லாமியர்கள் கெட்டவர்கள், பாகிஸ்தான் நம் எதிரி, குஜராத் வளர்ந்த மாநிலம் என புரட்டுகளை நம்பி மூளைச்சலவை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்றுவிட ஒரு இஸ்லாமிய வீட்டில் வெடிச்சத்தம் கேட்கிறது. அதனால் உக்கிரமடைந்து த்யான் சீனிவாசன் செய்யும் செயல் ஊரையே இரண்டாகப் பிரிக்கிறது. தலைமறைவாகும் நிவின் பாலி துபாய்க்கு தப்பி ஓடுகிறார். அங்கு அவருக்கு நடக்கும் சம்பவங்களும், அவர் என்னவாக மாறுகிறார் என்பதே மீதிக்கதை.
வாட்ஸ் அப் ஃபார்வர்டுகளை உண்மையென நம்பி வாழும் கதாபாத்திரங்களை திரையில் அசத்தலாக கொண்டுவந்திருக்கிறார்கள் நிவினும், த்யானும்.
படத்தில் பொட்டில் அடித்தது போல வெறுப்பு பேச்சுக்கு எதிராக வசனங்களை எழுதிய ஷரிஸ் இந்த முறை தர லோக்கலில் ஜாலியாக நக்கலடித்து எழுதி வைத்திருக்கிறார்.
GDP 2 லட்சம் கோடி தெரியுமா என சொல்பவரிடம் , மசால் தோசை 40 ரூபாய் ஆகிடுச்சு அதுக்கும் எதோ DGP தான் காரணமாம் என பதில் சொல்வதாகட்டும்; “கேரளத்தை குஜராத் போல் மாற்றப் போகிறோம்” என நிவின் சொல்ல, ” இந்த கிராமத்த மட்டும் விட்டுடுங்கடா” என சலீம் நக்கலடிப்பதாகட்டும் முதல் பாதி முழுக்கவே ‘அந்தாணிஜி’ காமெடிகள் தான். அதே சமயம், வெறுப்புப் பேச்சுக்கு எதிராக ஆணித்தனமான வசனங்களையும் வைக்க அவர் தவறவில்லை.
” நீ இப்ப வெறுப்ப விதைச்சுட்டு போயிடுவ.. அடுத்த தலைமுறை இதைய வச்சு சண்டை போடறப்ப. நீயும் இருக்கமாட்ட. நானும் இருக்க மாட்டேன். அப்புறம் ஏன் இதைய பண்றீங்க”; ” எந்தவொரு தேசம் மதத்த அதோட அரசியல் அமைப்பு சட்டமா பாவிச்சு காய் நகர்த்துதோ அது மண்ணோட மண்ணாத்தான் போகும்.அது என் தேசமா இருந்தா என்ன, உன் தேசமா இருந்தா என்ன ” உட்பட பல வசனங்களில் கவர்கிறார் வசனகர்த்தா ஷரிஸ். அதே சமயம், இஸ்லாமியர்கள் பக்கம் நடக்கும் தவறுகளையும், ISIS தீவிரவாதம் குறித்தும் சரிசமமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
மதவெறி பிடித்து அலையும் ஒருவன் , சூழ்நிலைவசத்தால் அதற்கு நேரெதிரான ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதே கதை.