மண்ணைப்பொன்னாக்கும் இரகசியக் கலையை அறிந்தவனை ரசவாதி என்பர்.அறிவியலோடு நெருங்கிய தொடர்புடைய ரசவாதத்தை திரைக்கதையில் ஏற்றி இயக்குநர் சாந்தகுமார் கொடுத்திருக்கும் படம்தான் ரசவாதி.

படத்தில் நாயகன் அர்ஜுன் தாஸ், ஒரு சித்தமருத்துவர்.மணவாழ்வில் நடந்த கசப்புகளை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக கொடைக்கானலுக்குச் செல்காறார்.

அங்கு, மக்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டு, இயற்கை மற்றும் உயிரினங்களோடு வாழ்ந்து வருகிறார். அங்கிருக்கும் நாயகி தான்யா ரவிசந்திரனுக்கும், அர்ஜுனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்கிறது.

இந்நிலையில், பணி மாற்றம் பெற்று கொடைக்கானலுக்கு வரும் காவல்துறை ஆய்வாளர் சுஜித் சங்கர், அர்ஜுன் தாஸைக் கண்டதும் கோபம் கொள்கிறார்.அவரது அமைதியான வாழ்க்கையைச் சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.

அர்ஜுன் தாஸ் ஒதுங்கிப் போனாலும் ஓயாமல் தொந்தரவு கொடுக்கிறார்.

அது ஏன்? எதற்காக? அதன் முடிவென்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைகள்தாம் படம்.

இறுக்கமான முகம் கரகரத்த குரல் ஆகிய தன் அடையாளங்களை மாற்றிப் புதிதாகத் தெரிகிறார் அர்ஜுன்தாஸ். காதல் காட்சிகளிலும் மிக இயல்பாக இருக்கிறார் என்பது கூடுதல் பலம்.

தான்யா ரவிச்சந்திரன் போல் ஒருவர் நட்பாகவோ காதலியாகவோ நமக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்? என்று ஏங்க வைக்குமளவுக்கான கதாபாத்திரத்தில் மிக அழகாகப் பொருந்தி நற்பெயர் பெற்றிருக்கிறார்.

இன்னொரு நாயகி புதுமுகம் ரேஷ்மாவும் நன்றாக நடித்திருக்கிறார். அது அவருக்கு மட்டுமின்றி படத்துக்கும் நன்மை செய்திருக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் சுஜித் சங்கர், தன் நடிப்பின் மூலம் யார் இவர்? என்று கேட்க வைத்திருக்கிறார்.இதனால் இனி நிறையப் படங்களில் இவரைக் காணும் வாய்ப்பிருக்கிறது.

ஜி.எம்.சுந்தர், ரிஷிகாந்த், ரம்யா சுப்ரமணியன் ஆகியோரும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

கொடைக்கானல் கதைக்களம் என்றால் ஒளிப்பதிவாளர்களுக்கு செம குஷி வரும். இந்தப்பட ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசுவும் அதற்கு விதிவிலக்கல்ல.அழகும் அமைதியும் காட்சிகளிலும் நிறைந்திருக்கின்றன.

தமன்.எஸ் இசையில பாடலகள் இதமாக இருக்கின்றன.பின்னணி இசையும் சுகமாக அமைந்திருக்கிறது.

எடுத்துக் கொண்ட கதை, அதன் களம் ஆகியனவற்றில் மட்டும் பயணம் செய்யாமல் அந்தப் பாதையில் இடம்பெறும் பல்வேறு படிமங்களைத் திரையில் கொண்டு வந்து, ஒரே காட்சியில் பல குறிப்பிடத் தக்க அம்சங்களைச் சொல்லிச் செல்பவர் இயக்குநர் சாந்தகுமார்.

இந்தப் படத்திலும் அந்த ரசவாதம் நிகழ்த்தியிருக்கிறார்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.