கமல் ரஜினி போல் பெரிய திரைப்பட நடிகர் ஆகவேண்டும என்று ஆசைப்படும் ஓர் இளைஞருக்கு அவ்வாசை நிராசையாகிவிடுகிறது.எனவே தன் கனவை தன் மகன் மூலம் நிறைவேற்றிட விரும்புகிறார். மகனும் அதை ஏற்று அதற்காக உழைக்கிறார். இடையில் எதிர்பாராத பெரும் சிக்கல் ஒன்று வருகிறது.நடிகராகவே முடியாது என்கிற அச்சிக்கலைக் கடந்து இலட்சியத்தை அடைந்தாரா? என்பதைச் சொல்கிறது ஸ்டார்.
பள்ளி மாணவர், கல்லூரி மாணவர்,நடிகர் என மூன்று வகையான தோற்றங்கள் அவற்றிற்கேற்ற நடிப்பு அதற்குள் தன்னுடைய தனித்துவம் ஆகியனவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறா் நாயகன் கவின். அவர் உற்சாகமாக இருக்கும்போது இரசிகர்களும் உற்சாகமாகிறார்கள் திரையில் அவர் கலங்கி நிற்கும்போது பார்ப்போரைக் கண்கலங்க வைக்கிறார்.
அதிதி போகங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகிய இரண்டு நாயகிகள்.இருவருக்குமே முக்கியமான அதை உணர்ந்து பொறுப்புடன் நடித்திருக்கிறார்கள்.இளைஞர்களை ஈர்ப்பதிலும் குறை வைக்கவில்லை.
நாயகனின் அப்பா அம்மாவாக நடித்திருக்கும் லால், கீதா கைலாசம் ஆகியோர் பாத்திரப்படைப்புகள் நன்றி. எண்ணத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் நேர்கோட்டில் பயணிப்பவர்களக இருப்பது இரசிக்க வைக்கிறது.
இயக்குநர் இளனின் அப்பாவும் இந்தப்படத்தில் லால் ஏற்றிருக்கும் வேடத்தின் நிஜமுமான ராஜாராணி பாண்டியனுக்கும் நல்ல வேடம். சரியாகச் செய்திருக்கிறார்.
நிவேதிதா, தீப்ஸ், மாறன், காதல்சுகுமார் உள்ளிட்டோரும் கவனிக்க வைக்கிறார்கள்.
எழிலரசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் இனிமை.
யுவன் இசையில் பாடல்கள் பலவிதம். பின்னணி இசை பலம்.
எழுதி இயக்கியிருக்கும் இளன், தன்னுடைய தந்தையின் கதையைப் படமாக்குகிறோம் கூடுதல் ஈர்ப்புடனும் அர்பணிப்புடனும் பணியாற்றியிருக்கிறார் என்பது திரையில் தெரிகிறது.
இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலான கதையைத் தேர்ந்தெடுத்ததும் வணிக வெற்றிக்குரிய அம்சங்கள் கலந்து அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையும் எதிர்பாரா வகையிலான இறுதிக்காட்சியும் ஸ்டாரை பிரகாசமாக ஒளிர வைக்கின்றன.
நாயகன் கவினுக்கு மற்றுமோர் வெற்றிப்படம்.
– தனா