உணர்ச்சிகளைப் பட்டியலிட்டால் முதலில் அன்பு,பாசம் ஆகியனவும் அடுத்து கோபமும்தான் இடம்பெறும்.இந்த வரிசையை மையப்படுத்தி எழுதப்படும் கதைகள் பார்வையாளர்கள் மனதுக்கு மிக நெருக்கமாக அமையும் என்பது வெள்ளிடைமலை.இதை உணர்ந்து உருவாகியிருக்கும் படம்தான் கருடன்.
சசிகுமாரும் உன்னிமுகுந்தனும் நண்பர்கள். உன்னிமுகுந்தனின் தீவிர விசுவாசி சூரி.ஒரு கட்டத்தில் உன்னிமுகுந்தன் பக்கமா? சசிகுமார் பக்கமா? என்கிற மிக மிகச் சிக்கலான நிலை உருவாகிறது.அந்நிலையில் சூரி என்ன முடிவெடுக்கிறார்? அதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.
சூரி நாயகனாக நடித்து வெளியாகும் இரண்டாவது படம் இது.இதிலேயே அசுரப் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார்.விசிவாசி என்கிற சொல்லுக்கு எடுத்துக்காட்டாகவே இவரது இந்தக் கதாபாத்திரத்தைச் சுட்டலாம் என்கிற அளவுக்கு எழுதியிருக்கிறார்கள். அதற்கு முழுவடிவம் கொடுத்து இரசிக்க வைத்திருக்கிறார் சூரி.அவரிடம் நகைச்சுவையை எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து வடிவமைக்கப்பட்டிருப்பதும் அதை மிக எளிதாக சூரி செய்துவிடுவதும் படத்தைக் கலகலப்பாக்குகிறது. சண்டைக் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் வேகம் பிரமிக்க வைக்கிறது.மிகச் சிக்கலான மன உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் வெற்றி கண்டிருக்கிறார் சூரி.
இதற்கு இவர் மட்டுமே பொருத்தம் என்று அளவெடுத்துத் தைத்த சட்டை போல் சசிகுமார் இருக்கிறார்.அவர் நடிப்பால் படம் பலம் பெற்றிருக்கிறது.
சசிகுமார்,சூரி ஆகியோர் முன்னால் உன்னிமுகுந்தன் கொஞ்சம் குறைவுதான்.தனிப்பட்ட முறையில் பார்த்தால் நிறைவு.
காவல்துறை அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, அமைச்சராக நடித்திருக்கும் ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் நடிப்பு நன்று.அதிகார வர்க்கமும் அரசியல் வர்க்கமும் தனிமனித வாழ்வில் நடத்தும் லீலைகளுக்கு இவர்கள் எடுத்துக்காட்டு.
ஷிவதா கொஞ்சமாக வந்தாலும் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறார். ரேவதி சர்மா,பிரிகிடா சகா, வடிவுக்கரசி ஆகியோரும் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் பஞ்சவர்ணக்கிளியே பாடல் சுகம்.பின்னணி இசையில் சூரிக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
நிலப்பரப்புகள் அவற்றின் பரிமாணங்கள் ஆகியன காட்சிகளுக்கு வலுச் சேர்க்கக் கூடியவை என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ.வில்சன். அதனால் தனித்த காட்சியனுபவம் மட்டுமின்றி மிகையான காட்சிகளையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் எண்ணம் ஏற்படுகிறது.
ஒரு கதாநாயகன் வெற்றி பெற வேண்டுமெனில் அவனைச் சுற்றி இருப்போர் அவரைவிடப் பலசாலிகளாகவும் திறமையாளர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற சூத்திரப்படி திரைக்கதை எழுதி அதைச் சரியான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் துரை.செந்தில்குமார்.
கருடன் வெல்வான்.
– இளையவன்