சந்தான பாரதி இயக்கத்தில், கமல்ஹாசன், ரோஷினி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது.

33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர்.

இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமத்தில் உள்ள திரையரங்குகள் வரை திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே.

குணா திரைப்படம் 1991ல் வெளியானபோது கூட திரையரங்குகளில் குணா படத்தில் இடம்பெற்ற வசனங்கள், பாடல்களுக்கு இந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இன்றைய தலைமுறை மஞ்சு மெல் பாய்ஸ் படத்தில் அதனை திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடியதை பார்த்து என் உடம்பு புல்லரித்து போனது என்றார் குணாபடத்தை இயக்கிய சந்தானபாரதி.

இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில் கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய்ரத்தினம், எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட் , எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர். 

கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையிலும், தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்படமாக இருந்து வரும் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில், மெருகூட்டப்பட்டு கமல்ஹாசனின் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்படுகிறது. தமிழ் திரைப்பட ஆடியோ உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முண்ணணி நிறுவனமாக, திகழ்ந்து வந்த பிரமிட் ஆடியோ குரூப் டிஜிட்டல் மெருகூட்டப்பட்ட குணா படத்தை உலகம் முழுவதும் மீண்டும் வெளியிட உள்ளது.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.