அந்திமழை இதழின் நிறுவனரும் நிறுவிய ஆசிரியருமான மருத்துவர் அந்திமழை ந.இளங்கோவன் ஜூலை 28 அன்று அதிகாலையில் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, அந்திமழை என்ற கையெழுத்துப் பிரதியை தொடங்கினார். இந்தக் கையெழுத்துப் பிரதியில் வெளியான படைப்புகள் சில வெகுஜன இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. இந்த இதழ் கல்லூரி மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

1994ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்ததும், இதழியல் பணிக்குச் செல்ல விரும்பினார் இளங்கோவன். ஆனால், குடும்பத்தினரின் கருத்துக்கேற்ப யூனிகெம் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். பதினாறு மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செல்வம் பிராய்லர்ஸ் நிறுவனத்தில் கர்நாடக மாநிலத்திற்குப் பொறுப்பாளராகச் சேர்ந்தார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து, ஃபார்சூன் 500 பட்டியலில் இடம்பிடித்த ஃபோர்ட் டோட்ஜ் என்ற கால்நடை உயிரியியல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

தமிழ்நாடு- கேரள விற்பனை மற்றும் தொழில்நுட்ப வணிகப் பிரிவில் பணியாற்றினார். இதற்கிடையே சென்னையிலிருந்து வெளிவரும் குமுதம், தமிழன் எக்ஸ்பிரஸ், குங்குமம் ஆகிய முன்னணி இதழ்களில் எழுதி, தனது எழுத்து ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார். இதழியல் மீதான அவரது ஈர்ப்பு மிகவும் தவிர்க்கமுடியாததாக ஆனது.

1999ஆம் ஆண்டு விண்நாயகன் என்ற மாதம் இருமுறை இதழில் முழுநேர இதழாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு இவருக்கு முன்னைய சம்பளத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கிடைத்தது. ஓர் ஆண்டு காலத்துக்குள் விண்நாயகன் இதழ் மூடப்படும் நிலையில் இருந்ததால், அதிலிருந்து விலகினார். பெங்களூருவுக்குத் திரும்பிவந்தவர், மீண்டும் கால்நடைகள் தொடர்பான ஒரு தொழில் நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கடுத்த ஆண்டு, அவர் இண்டோபையோகேர் என்ற கால்நடை சுகாதாரத் தொழில் நிறுவனத்தில் பெங்களூரில் வேலையில் சேர்ந்தார். தேசிய வணிகத் தலைவராக பணி உயர்வு அளிக்கப்பட்டு பரோடா நகருக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு 2004ஆம் ஆண்டு அவரது எதிர் வீட்டில் இருந்த ஒருவருடனான நட்பின் மூலம் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அப்போதுதான் அவருக்குள் செயலற்ற நிலையில் இருந்த தொழில்முனைவு விருப்பம், மீண்டும் உயிர்பெற்றது. 2007ஆம் ஆண்டு இளங்கோவன் தனது கனவான ஐரிஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தன் சேமிப்பில் இருந்த 16 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். நூறு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையில் நிறுவனத்தைத் தொடங்கியவர், ஆரம்பத்தில் நாய்களுக்கான அழகுசாதனப் பொருட்கள், ஷாம்பு வகைகள், நாய்களுக்கான பிஸ்கட் வகைகள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்தினார். பின்னர் 2008ஆம் ஆண்டு தன் நண்பர் ஒருவர் நடத்திவந்த வேபா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் கோழிப் பண்ணைகளுக்கான இணை உணவுப் பொருட்களை சந்தைப்படுத்தினார் இளங்கோவன். அதே ஆண்டில் பெங்களூரு பொம்மனஹள்ளியில் ஐரிஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு தொடங்கப்பட்டது.

இளங்கோவன், தமிழகத்தின் தென் மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர். ‘கரன்சி காலனி’,’ஊர்கூடி இழுத்த தேர்’ ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

  • அசோகன் (அந்திமழை இதழ் ஆசிரியர் )

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.