கூழாங்கல் படத்தைத் தொடர்ந்து அப்பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கொட்டுக்காளி’.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘கூழங்கல்’ திரைப்படம் போலவே இப்படமும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வாங்கியிருக்கிறது.

இப்படம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் உடன் ஒரு சந்திப்பு.

1.படம் பற்றி…?

ஒரு பயணத்தின் மூலம் எதார்த்த வாழ்வியலைச் சொல்வது தான் படத்தின் கதை. இந்தப்பயணம் முடிவை நோக்கி அல்லாமல்,அந்த மக்களைப் புரிந்துகொள்ளும் ஒரு படைப்பாக இருக்கும். இது ஒவ்வொருவர் மனதுக்கும் நெருக்கமாக இருக்கும். ஒரு வாழ்ககையைப் பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவத்தை கொடுக்கும் படமாக இருக்கும்.

2.கொட்டுக்காளி என்கிற பெயர் வைத்தது ஏன்?

இது தென் தமிழகத்தில் பல வருடங்களாகப் புழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். சில எழுத்தாளர்கள் மட்டும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வார்த்தைக்கான ஆவணங்கள் எதுவும் கிடையாது. பிடிவாதமாக இருக்கும் பெண்களைத் திட்டுவதற்காக கொட்டுக்காளி என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது. தென் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும், எதாவது ஒரு இடத்தில் இந்த வார்த்தையைக் கடந்து வந்திருப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு பெண் கதாபாத்திரம் படத்தில் முக்கியப் பங்கு வகிப்பதால்,இந்தப் பெயர் பொருத்தமாக இருந்தது.வைத்துவிட்டோம்.

3.சூரி…?

விடுதலை படத்துக்குப் பிறகு தான் சூரியை இந்தப்படத்தில் ஒப்பந்தம் செய்தோம். ‘கூழாங்கல்’ படத்தில் இருக்கும் சில நுணுக்கமான விசயங்களைப் பற்றி அவர் பேசிய விதம் எனக்குப் பிடித்திருந்தது.அந்த வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.அதனால் தான் அவருக்கு அந்தப்படம் பிடித்திருந்தது. இந்தக்கதையைப் படமாக்க வேண்டும் என்று நினைத்த போது, சூரி போன்ற ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவரைச் சந்தித்து கதையைச் சொன்ன போது அவருக்குப் பிடித்தது.பாண்டி என்ற கதபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

4.அன்னாபென்?

தனது உணர்வுகளை உடல்மொழி மூலமாக வெளிப்படுத்த வேண்டிய பெண் கதாபாத்திரம் தேவை, அதற்கு அன்னா பென் முகம் சரியாக இருக்கும் என்று தோன்றியது, அதனால் தான் அவரைத் தேர்வு செய்தோம்.அவரும், அவரது தந்தையும் கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் சொன்னார்கள். அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது நிச்சயம் பேச வைக்கும்.

5.இசையமைப்பாளர் இல்லாமல் ஒரு படமா?

இந்தப் படத்தில், பாடல்கள் மற்றும் இசை இல்லை. சூழலைச்சுற்றி இடம்பெறும் சத்தங்களை வைத்துத் தான் பண்ணியிருக்கோம். ஆனால், படம் பார்க்கும் போது இசை இல்லை என்ற உணர்வே உங்களுக்கு ஏற்படாது. இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எந்தத்திட்டமும் இல்லை. இப்படிச்செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து சாதாரணமாகச் செய்த ஒரு விசயம் தான், அதனால் தான் இதை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

6.விருதுகள் வாங்கவே படமெடுக்கிறீரகளா?

சர்வதேச திரைப்பட விழாக்களைப் பார்த்து, அதில் இடம்பெறும் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான், என்னுடைய படங்கள் அதில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறதே தவிர, அதற்காக மட்டும் நான் படம் எடுக்கவில்லை. பெர்லின், ரோட்டர்டோம், ருமேனியா போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு நம் மொழி மற்றும் கலாச்சாரம் தெரியாது, ஆனால் அவர்கள் என் படங்களைப் புரிந்துகொண்டு பாராட்டும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது, நம் மக்களும் என் படங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

77.முழுக்க முழுக்க வியாபார அம்சங்கள் கொண்ட படம் எடுப்பீர்களா?

வியாபாரம், கலை என்று நான் பிரித்துப் பார்ப்பதில்லை,நான் பார்த்த மக்களை,அனுபவித்த வாழ்க்கையை படைப்பாகக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்,அதனால் தான் இப்படிப்பட்ட படங்களை எடுக்கிறேன். ‘கூழாங்கல்’ படத்தை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்களோ என பயந்தேன். ஆனால், மக்களும் சரி, ஊடகங்களும் சரி அந்த படத்தைக் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். அதனால் எனக்கு பொறுப்பு அதிகமானது மட்டும் அல்ல, தைரியமும் வந்துவிட்டது.அந்த சமயத்தில் தான் சிறுவயதில் நான் பார்த்த ஒரு விசயம் பற்றி சொல்ல வேண்டும் என்று விரும்பினேன்,அதைத்தான் இதில் சொல்லியிருக்கிறேன். இப்படிப்பட்ட படங்களை கொடுப்பதற்கான தைரியம் பாலுமகேந்திரா, வெற்றிமாறன் போன்ற முன்னோர்களிடம் இருந்து தான் எனக்கு வந்தது, இனியும் இது தொடரும்.

8.தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்?

கூழாங்கல் படம் அவருக்குப் பிடித்திருந்தது.அந்த படத்தை பார்த்துவிட்டு. நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று சிவகார்ததிகேயன் சார் சொன்னார்.அவரிடம் இந்தக்கருவைச் சொன்னேன். கதையைக் கேட்டவுடன்,உங்களுக்கு என்னவெல்லாம் செய்யத்தோன்றுகிறதோ,அவற்றைத் தாராளமாகச் செய்யுங்கள் என்று சொன்னார்.இது வியாபார ரீதியாக வரவேற்பு பெறுமா? என்றெல்லாம் எண்ணாமல் தயாரிக்க முன்வந்தார். இப்போது, சர்வதேச அளவில் இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.இதனால் அவருக்கும் மகிழ்ச்சி.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.