இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் படம் தில் ராஜா.இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் விஜய் சத்யா.அவருக்கு இணையராக ஷெரின் நடித்திருக்கிறார்.நகைச்சுவை வேடத்தில் கே.பி.ஒய் பாலா நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் நாயகன் விஜய் சத்யாவுடன் ஒரு சந்திப்பு…
1.தில்ராஜா படத்தில் உங்கள் வேடம் பற்றி..?
இந்தப்படத்தில், நடுத்தர குடும்பத் தலைவனாக நடித்திருக்கிறேன்.அவனுக்கு எதிர்பாராமல் ஒரு மோதல் நடக்கிறது.எதிர் முனையில் இருப்பவர்கள் மிகப் பலம் வாய்ந்தவர்கள்.அதனால், நாயகனுக்கும் அவனது குடும்பத்திற்கும் நிறைய பாதிப்பு. அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள்? என்பதை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக மட்டும் இன்றி சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் சொல்லியிருக்கிறார்.
2. உங்கள் திரைப்பயணத்தில் இடைவெளி ஏன்?
நல்ல கதைக்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது, அதனால் தான் நான் சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டேன். தற்போது அதற்கான பலன் தான் ஏ.வெங்கடேஷ் சார் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் இயக்குநர் என்ன சொன்னாரோ அதைத் தான் நான் செய்திருக்கிறேன். அவர் பல வெற்றிகளைப் பார்த்தவர். நான் வெற்றிக்காகக் காத்துக்கொண்டிருப்பவன்.அதனால் வெங்கடேஷ் சாரிடம் நான் சரணடைந்து விட்டேன். அவர் சொல்வதை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் செய்திருக்கிறேன்.
3.இயக்குநர் ஏ.வெங்கடேஷ் உடன் பணியாற்றியது குறித்து..?
இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஒரு ஹீரோவின் முழுத் திறமையை வெளிப்படுத்தும் அனைத்து அம்சங்களும் அவர் படத்தில் இருக்கும். அப்படித் தான் இந்தப் படத்திலும் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய கமர்ஷியல் கதையாக இருந்தாலும், அதில் ஆக்ஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகளும் பாராட்டும்படி இருக்கும். இந்தப்படத்தின் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருக்கிறது.‘தில் ராஜா’ படம் தமிழ்த் திரையுலகில் எனக்கான இடத்தைப் பெற்றுத் தரும்.இது நிச்சயம்.
4.ஷெரின் உடன் நடித்திருக்கிறீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள்…
ஷெரின் நாயகியாக நடித்திருப்பது இந்தப்படத்திற்குப் பலம். அவர் ஏற்கனவே பெரிய பெரிய கதாநாயகர்களுடன் நடித்தவர்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்திருக்கிறார், அதனால் அவர் படத்தில் இருப்பது பலம்.
5.தனுஷின் முதல்படத்தில் ஷெரின் தான் கதாநாயகி.உங்கள் முதல்படத்திலும் அவருடன் சேர்ந்திருக்கிறீர்கள்.இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஷெரினுடன் நடித்த நடிகர்கள் பெரிய நடிகர்களாக உயர்ந்திருப்பதால் அவரை நாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. இயக்குநர் தான் தேர்வு செய்தார்.அதேசமயம்,நீங்கள் சொல்கிற மாதிரி ஷெரின் சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனால் எனக்கு சந்தோசம்.
6.படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் குறித்து..?
படத்தில், கே.பி.ஒய் பாலா காமெடியில் கலக்கியிருக்கிறார். அவரது டைமிங் சரியாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கிறார்.அம்ரீஷ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கின்றன.பாடல்களைப் படமாக்கிய விதத்தையும் பலர் பாராட்டி வருகிறார்கள்.இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு.
– இளையவன்