கெட்டும் பட்டணம் போய்ச் சேர் எனும் முதுமொழிக்கேற்ப இரண்டு தம்பிகள் ஒரு தங்கையுடன் சென்னை வந்து சேர்கிறார் தனுஷ்.அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் செல்வராகவன்.முதலில் மூட்டை தூக்கி பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து துரித உணவுக்கடை நடத்துகிறார் தனுஷ்.இந்த எளிய குடும்ப வாழ்வுக்குள் தனுஷின் தம்பி சந்தீப்கிஷனால் ஒரு புயல் வீசுகிறது.அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை இரத்தம் தெறிக்கச் சொல்லியிருக்கும் படம் ராயன்.
மொட்டைத் தலை முறுக்கு மீசையுடன் தினவெடுத்த சிங்கம் போல் சீறுகிறார் தனுஷ்.அவர் வரும் காட்சிகளும் அவற்றிற்குப் பின்னணி இசை மூலம் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் காட்சியனுபவத்துக்குக் கைகொடுக்கின்றன.மூத்த அண்ணனாக தம்பிகள் மற்றும் தங்கையை அரவணைப்பதும் அவர்கள் வழுவிச் செல்லும்போது கண்டிப்பது என அவருடைய பாத்திரப்படைப்பு நேர்த்தியாக இருக்கிறது.அதைத் தன் நடிப்பால் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறார் தனுஷ்.
தனுஷின் தம்பிகளாக நடித்திருக்கும் சந்தீப்கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகிய இருவரும் நன்றாக நடித்து கவனம் ஈர்க்கிறார்கள். முரட்டுத்தனத்தைக் காட்டுவதில் முனைப்பாக இருக்கிறார்கள். பல இடங்களில் அவர்களுடைய கதாபாத்திரத்தை மீறி அவர்களின் நிஜவர்க்கம் எட்டிப்பார்க்கிறது.
தனுஷின் தங்கையாக நடித்திருக்கும் துஷாரா விஜயனுக்கு இது வாழ்நாள் கதாபாத்திரம்.அவருடைய நடிப்பு எதிர்வினை துடிப்பு கோபம் ஆகியன அவ்வளவு பொருத்தமாக அமைந்து அவர் மீது பெரும் மதிப்பையும் படத்தின் மீது ஈர்ப்பையும் ஏற்படுத்துகிறது.
அபர்ணா பாலமுரளி தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.தனுஷ் புகழ்பாடும் வேடத்தில் நடித்திருக்கும் செல்வராகவன் சிறப்பு.
தாதாக்களாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, பருத்திவீரன் சரவணன் ஆகியோரும் தங்கள் வேடத்தை உனர்ந்து நடித்திருக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் நன்று.வரலட்சுமி சரத்குமார் இவ்வளவு சின்ன வேடத்திலா?
ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு காட்சிகளில் நுட்பமான பல விசயங்களை வைத்து வரவேற்புப் பெறுகிறார்.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் கேட்கக் கேட்கத் தித்திப்பு.பின்னணி இசையில் நடத்தியிருக்கும் ராஜாங்கத்தால் அரங்கம் மயிர்க்கூச்செறிகிறது.
கலை இயக்குநர் ஜாக்கியும் சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர்ஹெயினும் இயக்குநர் தனுஷின் இரு கரங்களாகவே செயல்பட்டிருக்கிறார்கள்.
படத்தொகுப்பாளர் பிரசன்னாவால் இரண்டாம்பாதியில் இருக்கும் தொய்வைச் சரி செய்திருக்க முடியும்.
நடிகராக இருப்பதால் கதாபாத்திரங்களை எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் தனுஷ்.நடிகர்களிடம் வேலை வாங்குவதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.யுத்தம் தொடங்கி அது சகோதர யுத்தமாகத் திருப்பம் பெறுமிடத்தின் ஆழம் போதவில்லை.
கழுவிலேற்றப்பட்ட காத்தவராயனின் பெயரை வைத்து சமூதாய அவலங்களைக் கழுவிலேற்ற முயன்றிருக்கிறார் தனுஷ்.
– அரசன்