‘எஸ்கே23’ ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம். ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும் தி லெஜண்ட் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சரவணன் நடிக்கும் லெஜண்ட் -2 என தற்காலிகமாக அழைக்கப்படும் படத்தில் நடிக்கிறார். துரை செந்தில்குமார் இயக்கத்தில் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
இவ்விரு படங்களின் கதையும் ஒன்றுதான் என்ற பேச்சு அடிபடுகிறது.
ஒரு சாமானிய மனிதன்,தனிநபர் சிக்கல்கள், சமுதாயச் சிக்கல்கள் உள்ளிட்ட எல்லாவற்றையும் வலிந்து இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவன்.அவன் எதிர்கொள்ளும் வித்தியாசமான பிரச்சினை அதனால் அவன் சந்திக்கும் விளைவுகள் தாம் திரைக்கதை என்று சொல்லப்படுகிறது.
இதைத்தான் இரண்டு இயக்குநர்களும் படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
பொதுவாக ஏதாவதொரு வெளிநாட்டுப் படத்தைப் பார்த்துவிட்டு அதை அவரவர் தமிழுக்கு காப்பி செய்யும்போது ஒரே கதையை இரு வேறு இயக்குனர்கள் எடுத்து படமாக்குவது நடந்திருக்கிறது.
சில சமயம் கதை விவாதங்களில் பங்கு பெறும் இயக்குநர்கள், வருங்கால இயக்குநர்கள் உள்ளிட்டோர் ஓரிடத்தில் பேசிய விசயத்தை இன்னோரிடத்திலும் சொல்லிவிடுவார்கள். அது இன்னொரு படத்திலும் அதே விஷயம் வந்து கடைசியில் அது சிக்கலில் போய் முடியும்.
இருவரிடமும் கேட்ட போது, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எங்கள் கதைக்களம் தனித்துவமானது திரைக்கதை வேறுபட்டது என்றே சொல்கிறார்கள்.