கதாபாத்திரங்கள் அறிமுகம்,அதன்பின் அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை,அதற்குள் காதல்,மோதல்,கலகலப்பு எனப்பல்வகை உணர்வுகள்,இறுதியாக ஓர் அதிரடியான முடிவு அல்லது சோகமான முடிவு சில நேரங்களில் சுகமான முடிவு என்று திரைப்படங்களுக்கு வழக்கமாக இருக்கும் இலக்கணத்தைப் புறந்தள்ளி,சமகால வாழ்வை ஒப்பனையின்றிக் காட்டி, காட்சிகள் வழியே கருத்துகளை வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கும் படம் கொட்டுக்காளி.
சூரி ஏற்றிருக்கும் ஆண் கதாபாத்திரம் நாம் அன்றாடம் காணும் கதாபாத்திரம்.அதை முழுமையாக உள்வாங்கி நடிப்பில் மிகச் சரியாக வெளிப்படுத்தி திகைக்க வைத்திருக்கிறார்.திரை இலக்கணப்படி அந்தக் கதாபாத்திரத்தின் மீது கோபம் வரவேண்டும் ஆனால் தன் நடிப்பால் கோபத்தை மறக்க வைத்து வியக்க வைத்திருப்பது அவருடைய பலம்.
நாயகியாக நடித்திருக்கும் அன்னாபென், கண்களிலும் கண்ணசைவுகளிலும் சின்னச் சின்ன முகம் திருப்பலிலும் பார்வையாளர்களுக்கு ஏதாவது ஓர் உணர்வைக் கடத்தியிருக்கிறார்.ஒரு கதாநாயகியை இவ்வாறு நடிக்க வைக்க முடியும் என்கிற இயக்குநரின் நம்பிக்கைக்கு எள்ளளவும் பங்கம் வராமல் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
நாயகன் நாயகி தவிர மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் எல்லாருமே அப்பட்டமான நிஜங்கள்.
ஒரு பங்குதானியின் பயணமே திரைக்கதை அதன் வழியெல்லாம் பல கதைகள்.அவற்றை அழகாகக் காட்சிப்படுத்தி படத்தை இரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்திவேல்.
படத்துக்கு இசையமைப்பாளர் இல்லை என்கிற குறையே தெரியாதவண்ணம் கதைக்களங்களில் நாம் அன்றாடம் கேட்கும் ஒலிகளே இசையாகியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் கணேஷ்சிவா தான் இதுவரை கற்ற வித்தைகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு இயக்குநரின் எண்ணப்படி இயங்கியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் பி.எஸ்.வினோத்ராஜ்,கொட்டுக்காளி என்கிற பெயரில் தொடங்கி படத்தில் பிரதானமாக இடம்பெறும் சேவல் உள்ளிட்ட சில கதாபாத்திரங்களைக் கொண்டு பல கதைகளைச் சொல்லிச் சென்றிருக்கிறார். நவநாகரிகம் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் முற்காலப் பெண்களைப் போலவே இக்காலப் பெண்களும் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயத்தைக் கண்முன் நிறுத்தி நாம் கடந்து செல்ல வேண்டிய தூரத்தை நினைவூட்டியிருக்கிறார்.
எந்தக் கதையாக இருந்தாலும் அதைத் திரைமொழியில் சரியாக மொழி பெயர்த்தால்தான் வெகுமக்களைச் சென்றடையும்.இப்பட இயக்குநர் நாளேடு படிக்கும் வாசகர்களுக்கு நவீன இலக்கியத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.அதனால் வெகுசனப் பரப்பிலிருந்து விலகி நிற்பதும் தவிர்க்கவியலாத உண்மை.