இயக்குநர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எழில் பெரியவேடி எழுதி இயக்கியிருக்கும் படம் பராரி.

இப்படத்தில்,தோழர் வெங்கடேசன் பட நாயகன் ஹரி சங்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.அறிமுக நடிகை சங்கீதா கல்யாண் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.இவர்களோடு 40 புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் மற்றும் ஜி.முத்துக்கணி ஆகியோர் இசையமைத்துள்ளனர். சான்.ஆர்.டி.எக்ஸ் படத்தொகுப்பு செய்ய, ஏ.ஆர்.சுகுமாரன் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளார்.

இயக்குநர் ராஜு முருகன் வழங்குகிறார்.

படம் குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பேசுகையில்….

இயக்குநர் எழில் பெரியவேடி என்னைத் தொடர்பு கொண்டு இந்தக் கதையைப் படியுங்கள் என்றார்.அவர் அனுப்பிய கதையைப் படித்த போது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.குறிப்பாகப் படத்தின் க்ளைமாக்ஸ் ஏசி அறையிலும் எனக்கு வியர்க்கும் அளவுக்கு பதற்றத்தைக் கொடுத்துவிட்டது.அதனால் இப்படத்தில் பணியாற்றினேன்.

பரியேறும் பெருமாள் படத்திற்குப் பிறகு 9 படங்களில் பணியாற்றி விட்டேன்.அப்படம் போல், சாதி அரசியலை வைத்து நிறையப் படங்கள் வருகின்றன.ஆனால், அதைத் தாண்டி மொழி, மதம், கார்ப்பரேட் ஆகியவற்றில் இருக்கும் அரசியலை இந்தப் படம் அழுத்தமாகப் பேசுகிறது. குறிப்பாக மத்திய மாநில அரசியலைத் தழுவி இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.இந்தப் படத்திற்குப் பிறகு சினிமாவில் சாதிப் படம் எடுப்பவர்கள் காலாவதியாகி விடுவார்கள்.ஒரு சமூகத்தினரைத் தாழ்த்திப் பேசுவது அல்லது ஒரு சமூகத்தைப் பெருமையாகப் பேசுவது என்று தான் சாதிப் படங்கள் இருக்கின்றன.இந்தப் படம் முதலில் மக்கள் மன ரீதியாகத் திருந்த வேண்டும், பிறகு பொருளாதார ரீதியான மாற்றங்கள், முன்னேற்றங்கள் தானாக வரும் என்பதை வலியுறுத்துகிறது.

நான் இதுவரை 9 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறேன், பல பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறேன், ஆனால் இதுவரை எந்தப் படத்திற்காகவும் இவ்வளவு பேசியதில்லை.ஆனால், இப்போது இவ்வளவு பேசுகிறேன் என்றால் இந்தக் கதை தான் காரணம்.120 ரூபாய் கொடுத்து இந்தப் படத்தைப் பார்க்கும் இரசிகர்கள், படம் முடிந்த பிறகு கூடுதலாக 120 ரூபாய் கொடுக்கத் தயாராக இருப்பார்கள், அந்த அளவுக்கு தியேட்டருக்கான படமாகவும் ‘பராரி’ இருக்கும். இதை நான் இப்போது சொல்லவில்லை, 2021 ஆம் ஆண்டே என் சமூக வலைதளப் பக்கத்தில் சொல்லியிருக்கிறேன். படம் பார்த்த பிறகு நான் சொன்னது தவறு என்று நீங்கள் நினைத்தால்,என் பதிவை நீக்கி விடுகிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

நாயகன் ஹரி சங்கர் படம் பற்றிக் கூறியதாவது….

இப்படத்தின் கதை மிக சிறப்பானதாக மட்டும் இன்றி எனக்குப் பொருத்தமானதாகவும் இருந்தது. படத்தில் இடம்பெறும் சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன், அதனால் தான் இந்தக் கதையில் என்னைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. இந்தக் கதைக்காக நான் என் உடல் எடையை, 100 கிலோவாக இருந்த நான் 44 கிலோவாகக் குறைத்திருக்கிறேன்.உடல் எடையைக் குறைத்து கூலி வேலை செய்யும் ஒரு இளைஞர் போல இருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே படப்பிடிப்பைத் தொடங்குவேன் என்று இயக்குநர் சொல்லிவிட்டார்.சென்னையில் இருந்து கொண்டு உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டால் அதை எளிதில் செய்ய முடியாது என்பதால் படப்பிடிப்பு நடக்கும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கே சென்று அங்கு மூன்று மாதங்கள் தங்கியிருந்து, கரும்பு வெட்டுவது, செங்கல் சூளையில் வேலை செய்வது என்று ஒரு கூலித் தொழிலாளியாகவே இருந்து உடல் எடையைக் குறைத்து, என் தோற்றத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து நடித்தேன் என்று கூறினார்.

இயக்குநர் எழில் பெரியவேடி படம் குறித்துக் கூறியதாவது….

ராஜு முருகன் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.அவர் இயக்கிய ஜிப்ஸி படம் முடியும் போது இந்தக் கதையை நான் முடித்துவிட்டேன். சில நிறுவனங்களில் கதை சொன்னேன். கதையைக் கேட்டுவிட்டு நன்றாக இருப்பதாகச் சொல்வார்கள்.ஆனால் கிளைமாக்ஸ் காட்சியைக் கேட்டுவிட்டு பயந்து விடுவார்கள். இந்தக் காட்சியில் எந்த நடிகர், நடிகையும் நடிக்க மாட்டாங்க என்று சொல்லி நிராகரித்து விடுவார்கள்.இப்படி பலரிடம் கதை சொல்வேன்.அவர்களும் க்ளைமாக்ஸ் காட்சியைக் கேட்டுப் பயந்து விடுவார்கள்.இப்படியே போனதால் எனக்கே இந்தக் கதை மீது சலிப்பு ஏற்பட்டு விட்டது.அதனால் சினிமாவை விட்டே போய் விடலாம் என்று முடிவு செய்து என் இயக்குநரிடம் கூறினேன்.அவர் பதற்றமடைந்து வேண்டாம் என்று சொன்னதோடு, இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறினார். அப்படித் தான் ‘பராரி’ தொடங்கியது.

வட தமிழகத்தில் இருக்கும் இரண்டு விளிம்புநிலை சமூக மக்களிடையே இருக்கும் அரசியலைத் தான் இந்தக் கதை முன் வைக்கிறது. வட தமிழகம் பற்றி இதுவரை சொல்லாத அரசியல். இரண்டு சமூகமாக இருப்பவர்கள் ஒரே குலசாமியை வணங்குகிறார்கள். இது தான் அங்கிருக்கும் மிகப்பெரிய அரசியல். இருவரும் தினக்கூலிகளாகத் தான் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இவர்களிடம் ஏற்றத் தாழ்வு எப்படி வந்தது? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறோம்.

இப்படத்தில் திராவிட நாடு அரசியலும் இருக்கிறது. திராவிட நாடு அரசியல் என்பது திராவிட அரசியல் இல்லை. மொழி வாரியாகப் பிரிந்து கிடக்கும் திராவிட நாடு அரசியல். மொழி வாரியாக திராவிட நாடுகள் பிரிந்திருந்தாலும், அதன் வேர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன.ஆனால், தமிழர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்லும் போது அவர்களை வேற்று மொழி பேசுபவர்களாகப் பார்ப்பதோடு, அவர்களை எப்படி நடத்துகிறார்கள்?அங்கே மொழி ரீதியிலான அரசியல் எப்படி இருக்கிறது? என்பதைத் தான் படத்தில் சொல்லியிருக்கிறேன்.

டீசரில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையே நடக்கும் பிரச்சனை போல் காட்சிகள் இருக்கலாம், ஆனால் படம் அதைப் பற்றி மட்டும் பேசவில்லை. அதைத் தாண்டிய மனிதத்தைப் பற்றிப் பேசும்.ஒரு சமூகத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு சமூகத்தினரைக் குறை சொல்வது போலவும் காட்சிகள் இருக்காது. தவறு செய்பவர்களைக் குத்திக்காட்டுவதோ அல்லது குறை சொல்வதோ என் நோக்கம் இல்லை.அனைவரையும் நேசிக்க வேண்டும். அனைவரும் சமம், நீ பெரியவன் நான் பெரியவன் என்று பார்க்கக் கூடாது. தமிழ் மரபுகளில் இருந்து தான் உயிரினம் உருவானது என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட தமிழ்ச் சமூகம், மேலே கீழே என்று பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்பது தான் இந்தக் கதை.

நான் ஒரு அமைப்பில் இருக்கிறேன், அதன் மூலம் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போது நான் பார்த்த சம்பவங்கள் தாம் இந்தக் கதை. இந்தப் படத்தில் இருக்கும் பெருபாலான சம்பவங்கள் உண்மையில் நடைபெற்றவை. இந்தப் படத்தில் யார் மீதும் குற்றம் சொல்லவில்லை. எந்தக் குறியீடுகளையும் வைக்கவில்லை. விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல்.அவர்களிடம் இருக்கும் அரசியல். அவர்கள் வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி பராரிகளாகச் செல்லும் போது அவர்கள் எதிர்கொள்ளும் அரசியலை தான் இந்தப் படம் பேசுகிறது.

இந்தப் படத்தைப் பார்த்து ஒரு சமூகம் திருந்திவிட்டது அல்லது சிலர் திருந்திவிட்டார்கள் என்று சொல்லலாம்.அப்படித் தான் கதை இருக்கும்.படத்தின் க்ளைமாக்ஸ் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவதோடு அனைவரையும் யோசிக்க வைக்கும். 20 நிமிட க்ளைமாக்ஸ் இதுவரை எந்தப் படத்திலும் வராத க்ளைமாக்ஸாக இருக்கும்.படம் முடிந்து வெளியே வரும் போது கண்கலங்கியபடி தான் வருவீர்கள்.நான் சொல்வது உங்களுக்கு கொஞ்சம் அதிகமாகத் தோன்றாலாம்.ஒரு படைப்போ, கவிதையோ, கட்டுரையோ, சிறுகதையோ, நாவலோ படிக்கும் போது உங்கள் மனதைச் சலனப்படுத்தவில்லை என்றால் அதைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள் என்று அருந்ததிராய் சொல்லியிருப்பார்.அதுபோல் என் படம் உங்களை 10 நிமிடமோ அல்லது ஒரு நாளோ உங்கள் மனசாட்சியைக் கேள்வி கேட்கவில்லை என்றால் என் படத்தைக் குப்பையில் போட்டு விடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.