எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நாயகன் நாயகிக்கிடையே காதல் வந்தால் எப்படி இருக்கும்? என்கிற கேள்விக்கும்,மதுக் குடிப்பகம் வைக்கப் பாடுபடும் நாயகன், மதுவுக்கு எதிராகப் போராடும் நாயகி என்று மதுவை மையப்படுத்திய மையக்கதையின் இறுதியில் என்ன நடக்கிறது? என்கிற கேள்விக்கும் விடையாக வந்திருக்கிறது சாலா படம்.
நாயகனாக நடித்திருக்கும் தீரன், ஆஜானுபாகுவான உடலுடனும் அப்பாவித்தனமான முகத்துடனும் உலா வருகிறார்.சண்டைக்காட்சிகள் தன் முழுத்திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.நடனத்திலும் குறைவில்லை.காதல் உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தியிருக்கும் அவர்,காதலி பாதிப்புக்கு ஆளாகும்போது பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கிறார் ரேஷ்மா வெங்கட்.நாயகிகள் காதல் காட்சிகளுக்கானவர் என்கிற இலக்கணத்தை உடைத்து மதுவுக்கு எதிரான போராட்டங்களில் மக்களை ஒருங்கிணைக்கும் கதாபாத்திரத்தில் சரியாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
சார்லஸ் வினோத், அருள்தாஸ் ஆகியோர் எதிர்மறை வேடங்கள் ஏற்றிருந்தாலும் அதில் நேர்மறையாக நடித்து பாத்திரங்களுக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஸ்ரீநாத் அங்கங்கே சிரிக்க வைக்கிறார். சம்பத்ராம்,யோகிராம் ஆகியோரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.பள்ளி மாணவர்கள் நிலையும் அவர்கள் முடிவும் அதிர்ச்சிகரமாக அமைந்திருக்கிறது.
தீசன் இசையமைத்திருக்கிறார்.பாடல்கள் நன்று.பின்னணி இசையும் அளவாக அமைந்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் உழைப்பில் வடசென்னை நேர்த்தியாகப் பதிவாகியிருக்கிறது. படத்தொகுப்பாளர் புவன் படத்தை இலகுவாக நகர்த்திச் செல்ல முயன்றிருக்கிறார்.
குடி மட்டுமின்றி குடிநோயாளர்களிடமிருந்தும் விலகி இருப்பதே சாலச் சிறந்தது எனச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்.டி.மணிபால். காதல்,நகைச்சுவை,சண்டை ஆகிய வழக்கமான அம்சங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதையில் மதுவுக்கு எதிரான கருத்தை மையமாகக் கொண்ட திரைக்கதையும் அதற்கான காட்சிகளும் படத்தின் வண்ணத்தை மாறுபடுத்திக் காட்டியிருக்கிறது.
இப்படம் பார்ப்பவர்கள் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டமாட்டார்கள் என்பது உறுதி.அப்படி ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி.அதற்காகவே பாராட்டலாம்.
– இளையவன்