கலை வடிவங்களின் முன்னத்தி ஏர்களில் ஒன்றாகத் திகழ்வது தெருக்கூத்து.இரண்டாயிரத்து இளைஞர்களுக்கு அறிமுகமில்லாத இக்கலை அழியும் நிலையில் இருக்கிறது என்கிற பொதுவான கருத்து உலவுகிறது.இந்நேரத்தில் தெருக்கூத்துக்கலைஞரின் வாரிசான பாரி இளவழகன், அக்கலைஞர்களுக்குள் நடக்கும் உள்ளரசியலை முன்னிறுத்தி அக்கலை இன்னும் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நிறுவியிருக்கிறார்.
ஜமா என்பது தெருக்கூத்துக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கும் சொல்.இப்படத்தின் கதை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தெருக்கூத்து ஜமாவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து நகர்கிறது.
தெருக்கூத்துகளில் பெண் வேடம் போடும் நாயகன் பாரி இளவழகன்.அர்ச்சுனன் உள்ளிட்ட முக்கியமான ஆண் வேடங்களையும் போடக்கூடியவர்தான்.அவருக்கு தெருக்கூத்துக்குழுவின் தலைவராக அதாவது தலைமை வாத்தியார் என்று சொல்லப்படும் ஜமாவின் தலைவராக வேண்டும் என ஆசை. அவர் பெண் வேடம் போடுபவர் என்கிற காரணத்தைச் சொல்லி அவருடைய ஆசைக்கு எதிர்ப்பு வருகிறது.அதை எப்படி எதிர்கொண்டார்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.
எழுதி இயக்கியிருக்கும் பாரி இளவழகனே கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.பெண் வேடம் போடும் கலைஞர் வேடத்தில் அவ்வளவு இயல்பாக இருக்கிறார்.நுண்ணிய உணர்வுகளை உடல்மொழியில் வெளிப்படுத்தி நடிகராகவும் வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி,திரைக்கதையின் தன்மையை முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.துணிச்சல் மிக்க பெண்களுக்கு முன்னோடி போல் அமைந்திருக்கும் அந்த வேடத்துக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்து இரசிக்க வைத்திருக்கிறார்.
ஜமாவின் வாத்தியார் தாண்டவமாக நடித்திருக்கும் சேத்தன், மிகப்பொருத்தமாக அமைந்திருக்கிறார்.அவருடைய அனுபவமிக்க நடிப்பால் அந்த வேடம் சிறப்புப் பெறுகிறது.
ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என்.மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் என படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறார்கள்.
கோபாலகிருஷ்ணாவின் ஒளிப்பதிவு தெருக்கூத்துக்கலையை நேர்த்தியாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.அக்கலைஞர்களுக்குள் நடக்கும் மோதல்களையும் சரியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்தப்படத்துக்கு இசையமைக்க இளையராஜாவை விட்டால் வேறு ஆளில்லை என்று எண்ணுமளவுக்கு இசையால் படத்தை உயர்த்தியிருக்கிறார்.பாடல்கள் சுகமாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசையிலும் ராஜாங்கம் நடத்தியிருக்கிறார்.இறுதிக்காட்சியில் அவருடைய பின்னணி இசை உச்சம்.
பொதுமக்களுக்குத் தொடர்பில்லாத கதைக்களம் அதற்குள் நடக்கும் உள்ளரசியல் ஆகிய அம்சங்களை திரைமொழியில் சரியாகச் சொல்லி வெகுமக்களைக் கவர்ந்திருக்கிறார் இயக்குநர் பாரி இளவழகன்.
தெறிக்கூத்து.
– இளையவன்