சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடக்கிற கதை. பூர்வகுடித் தலைவனாக இருக்கும் தங்கலான், தம்மினத்தையும் தமக்கான நிலத்தையும் மீட்க ஆங்கிலேயர் சொல்லும் தங்கப்புதையலை எடுத்துத்தரும் வேலையை ஒப்புக்கொள்கிறார்.அப்பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? நினைத்தது நடந்ததா? என்பதைச் சொல்லும் படம் தங்கலான்.
நடிகர் விக்ரம் கடின உழைப்பாளி.தான் ஏற்றிருக்கும் வேடத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்,அதற்கேற்ற நடிப்பைக் கொஞ்சமும் குறையாமல் கொடுத்து வியக்க வைப்பவர் ஆகிய இலக்கணங்களைக் கொண்டவர்.அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக அவருடைய தோற்றமும் நடிப்பும் மிரட்டலாக இருக்கிறது.அன்பு,கோபம்,ஆக்ரோசம்,வேகம் என எல்லாவற்றையும் நிறைவாகச் செய்திருக்கிறார்.
விக்ரம் போன்றதொரு நடிப்பு அரக்கனுக்கு இணையாக மல்லுக்கு நின்றிருக்கிறார் பார்வதி. கங்கம்மா கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.விக்ரமும் பார்வதியும் இணைந்து திரையில் வரும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாம் என்று எண்ண வைத்திருக்கிறார்கள்.
ஆர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாளவிகா மோகனன், நானும் நடிப்பில் சளைத்தவளில்லை என்று காட்டியிருக்கிறார்.அவருடைய கதாபாத்திரம் தொன்மையை வெளிப்படுத்தப் பயன்பட்டிருக்கிறது.
பசுபதி கதாபாத்திரம் படத்துக்கு மட்டுமின்றி வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறுகிற கதாபாத்திரம்.பல இரகசியக் கதவுகளைத் திறந்து வைக்கும் அப்பாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் அவர்.
ஆங்கிலேயராக நடித்திருக்கும் டேனியல் இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்த வெள்ளைக்காரர்களிலிருந்து மாறுபட்டுத் தெரிகிறார். நடிப்பிலும் குறைவில்லை.
ஹரிகிருஷ்ணன்,முத்துக்குமார் உள்ளிட்டு படத்தில் இருக்கும் அனைவரும் அந்தந்த பாத்திரங்களாகவே மாறியிருப்பது வியப்பு.
கிஷோர்குமாரின் ஒளிப்பதிவில் உலகப்படங்களுக்கு இணையாகக் காட்சிகள் விரிந்து பரவசம் கொள்ள வைத்திருக்கின்றன.நிலவியல் அடிப்படையிலான காட்சிகளும் அரசியல் பேசுகின்றன.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் துள்ளல் இரகம்.இரசித்துக் கேட்க வைத்திருக்கிறார்.பின்னணி இசையில் அசுரப் பாய்ச்சல் நிகழ்த்தி படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறார்.
தமிழ்ப்பிரபா,அழகியபெரியவன் ஆகியோரோடு இணைந்து எழுதியிருக்கிறார் பா.இரஞ்சித்.வசனங்களில் ஆழமும் கூர்மையும் நிறைந்திருக்கின்றன.
முதல்பாதியில் எழுதப்பட்ட திரைக்கதை இறுக்கமாக அமைந்து படத்தை வேகமாகக் கொண்டு செல்கிறது.அதனுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதியில் சில தடுமாற்றங்கள் தெரிகின்றன.
தன்னுரிமை மற்றும் மண்ணுரிமைக்கான போராட்டம்,அதற்குள் பவுத்தம் பலவீனமாக்கப்பட்டது, தாய் வழிச் சமூகம், மூத்தோர் வாழ்வியல் உள்ளிட்ட ஏராளமான விசயங்களைக் காட்சிகள் வசனங்கள் குறியீடுகள் மூலம் பதிந்து தன்னை அழுத்தமாக நிறுவியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
– வெற்றி