பள்ளி, கல்லூரிக் காலங்களில் நண்பர்களாக இருப்பவர்கள் அதன்பின் ஒன்றாகச் சேர்ந்து தொழில் செய்யவும் தொடங்கினால் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் நடக்கும்? என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாகச் சொல்லியிருக்கும் படம்தான் நண்பன் ஒருவன் வந்த பிறகு.
மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பி உட்பட பல படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் பார்த்திருந்த ஆனந்த்,இந்தப்படத்தின் நாயகனாகியிருக்கிறார். அவரே இயக்குநரும் என்பதால் எழுத்தில் உள்ளதை அப்படியே நடிப்பிலும் கொண்டுவந்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பவானிஸ்ரீக்கு சும்மா வந்து போகிற கதாபாத்திரமில்லை.தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
நண்பர்களாக ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பேட், தேவ், மோனிகா, கே.பி.ஒய் பாலா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபென்னி ஆலிவர், தர்மா, வினோத் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களில் ஆர்.ஜே.விஜய்யின் கதாபாத்திரமும் அவர் பேசும் வசனங்களும் இரசிக்க வைக்கின்றன.
கொளப்புளி லீலா, குமரவேல், விஷாலினி, ஐஸ்வர்யா,வெங்கட்பிரபு உள்ளிட்டோர் நன்றாக நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எச்.காசிப் படத்தின் தலைப்புக்கேற்ற பாடல் என்பதால் முஸ்தபா முஸ்தபா பாடலை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்க்.அவருடைய இசையில் உருவான பாடல்களில் ஆளாதே, ஓகே சொல்லிட்டா ஆகிய பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன.
தமிழ்ச்செல்வனின் ஒளிப்பதிவு நன்று.ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பு அளவு.
நாயகனே எழுதி இயக்கியிருப்பதால் தனக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கவேண்டும் என்று எண்ணாமல் திரைக்கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
ஏற்கெனவே பார்த்த படங்களைப் போல் இருக்கிறதே என்று நினைக்க வைத்தாலும்,படத்தைப் பார்க்கும் பலரும் நமக்கும் இதுபோன்ற அனுபவம் உள்ளதே என்று நினைப்பது பலமாக அமைந்திருக்கிறது.
– இளையவன்