பயணத்தை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வரும்.அவை காதலர்களின் பயணமாக இருக்கும் அல்லது பயணத்தில் காதல் மலரும் நண்பர்களின் பயணம் அல்லது பயணத்தில் நண்பர்களாவது என்று அப்பயணங்கள் இருக்கும்.இந்தப்படமும் ஒரு பயணப்படம்தான்.ஆனால் முற்றிலும் மாறுபட்டு இது ஒரு உடலத்தின் பயணம்.
அமரர் ஊர்தி ஓட்டுநரான நாயகன் விமல்,தன்னுடைய ஊர்தியில் ஓர் உயிரற்ற உடலை எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் போகிற பயணமும் அப்பயணத்தின்போது நடக்கிற நிகழ்வுகளும்தாம் இப்படத்தின் திரைக்கதை.
நாலு பாட்டு நாலு சண்டை என்கிற வழக்கமான நாயகனாக இல்லாமல்,அன்றாட வாழ்வுக்கே கஷ்டப்படும் நடுத்தர வர்க்கக்குடும்பம், பிரசவ நேரத்திலும் மனைவியை விட்டுவிட்டு வேலைக்குச் சென்றாக வேண்டிய கட்டாயம் உள்ள ஓர் அழுத்தமான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் விமல்.அதற்கு அவர் முகமும் உடலும் நன்றாக ஒத்துழைத்திருக்கிறது.உடன்வரும் கதாபாத்திரங்களுக்கு அவர் ஆற்றும் எதிர்வினைகளில் அவருடைய தனித்துவம் தெரிகிறது.
விமலின் மனைவியாக நடித்திருப்பதால் இப்படத்தின் நாயகியாகியிருக்கும் மேரிரிக்கெட்ஸ்,நடுத்தரக் குடும்ப மனைவிகளை அழகாகப் பிரதிபலித்திருக்கிறார்.
விமலின் பயணத்தில் இணைகிறார் கூத்துக்கலைஞரான கருணாஸ்.பல படங்களில் நகைச்சுவையாளராக நடித்து சிரிக்க வைத்தவர் இந்தப்படத்தில் பல இடங்களில் நெகிழவும் கலங்கவும் வைத்துவிடுகிறார்.அவருடைய கதாபாத்திரமும் நடிப்பும் படத்துக்கும் தலைப்புக்கும் பொருள் சேர்க்கிறது.
ஆடுகளம் நரேன்,பவன்,தீபா சங்கர் ஆகியோரை வைத்து தென்மாவட்ட மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.அவரிகளும் மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.
அருள்தாஸ்,சார்லஸ் வினோத், வேலராமமூர்த்தி உட்பட படத்தில் இருப்போர் தங்கள் பங்கை குறைவின்றிச் செய்திருக்கிறார்கள்.
என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.படத்தின் கதைக்கருவுக்குப் பலம் சேர்க்கும் வகையில் பின்னணி இசை அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வின், பயண உணர்வையும் படம் தர நினைத்த உணர்வையும் ஒருங்கே காட்சிகளில் கடத்தியிருக்கிறார்.
திரைக்கதையில் இருக்கும் தொய்வுகள் படத்தை பலவீனப்படுத்தினாலும், ஓர் உயிரற்ற உடலத்தை வைத்துக் கொண்டு உயிருள்ளோர் செய்ய வேண்டியவற்றை நினைவுபடுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்வதே பெருமை எனும் நற் கருத்தைப் பேசியிருக்கிறார் இயக்குநர் மைக்கேல் கே.ராஜா.
– இளையவன்