ஒரு கொலைமுயற்சியில் உயிர்தப்பும் விஜய் ஆண்டனியை உயிரிழந்துவிட்டார் என்று உலகத்தை நம்ப வைத்து வேறொரு ஊரில் வேறொரு பெயரில் இருக்க வைக்கிறார் சரத்குமார்.போன இடத்தில் புதிய சிக்கல்கள் உருவாகின்றன.அவற்றை விஜய் ஆண்டனி எப்படி எதிர்கொள்கிறார்? இறுதியில் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் மழை பிடிக்காத மனிதன் படம்.படத்தின் திருப்புமுனைக் காட்சியை ஒரு மழை நேரத்தில் வைத்து தலைப்புக்கு நியாயம் செய்ய முயன்றிருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனியை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக்க மெனக்கெட்டிருக்கிறார் விஜய்மில்டன்.அதை உணர்ந்து உழைத்து வெற்றி பெற்றிருக்கிறார் விஜய் ஆண்டனி.அடுத்தடுத்த படங்களில் அவர் நூறுபேரை அடித்துச் சாய்க்கிறார் என்றாலும் மக்கள் நம்புவார்கள். காதலும் காதல்காட்சிகளும் நிறைவாக அமையாதது மக்களுக்குக் குறை அவருக்கு நிறை.
நாயகி மேகா ஆகாஷ் இருக்கிறார்.அவருக்கு முக்கியத்துவம் குறைவென்றாலும் அவர் இருப்பதே ஆறுதல் என்றிருக்கிறது.
சரத்குமார்,சத்யராஜ் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் வந்தாலும் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
டாலி தனஞ்செயா, முரளிசர்மா ஆகியோரின் வேடங்களும் அதில் அவர்களின் நடிப்பும் நன்று.முரளிசர்மா கூடுதலாக இரசிக்க வைக்கிறார்.
சரண்யா பொன்வண்ணன்,தலைவாசல் விஜய், சுரேந்தர், ப்ருத்வி அம்பார், ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்டோர் கவனம் ஈர்க்கிறார்கள்.
நாயகன் விஜய் ஆண்டனி இசையமைப்பிலும் பங்கேற்றிருக்கிறார்.அப்படியிருந்தும் பாடல்கள் பெரிதாக இல்லை என்பது நிஜம்.
இயக்குநர் விஜய்மில்டனே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.அதனால் எழுத்தும் காட்சிகளும் நேர்க்கோட்டில் இணைந்து பயணிக்கின்றன.அது நல்ல காட்சியனுபவங்களைக் கொடுக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் விஜய்மில்டன், விஜய் ஆண்டனியின் தோற்றத்தை மாற்றியதில் தொடங்கி பல புதிய விசயங்களைச் செய்திருக்கிறார்.மழை பிடிக்காத மனிதன் என்கிற எதிர்மறை பெயரை வைத்துவிட்டு, தீயவனை அழிப்பதைக் காட்டிலும் தீமையை அழிப்பதே சிறந்தது என்கிற நேர்மறைக் கருத்தை மையமாகக் கொண்டு கதை எழுதியிருக்கிறார்.கதை இதுதான் என்பதால் அதற்கேற்ற திரைக்கதையும் எழுதப்பட்டிருக்கிறது.
இந்த எழுத்தோடு, சுப்ரீம் சிவா, மகேஷ் மாத்யூ, கெவின் குமார் ஆகிய சண்டைப்பயிற்சி இயக்குநர்களும் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.
– இளமுருகன்