நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை
என்று ஏட்டில் கவி வடித்தார் கவிஞர் மு.மேத்தா.
அந்தப் பெயரை வைத்து திரையில் கவி படித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமம் அழகானது.அதன் வாழ்க்கை அப்படியன்று. வறுமையும் ஏழ்மையும் பின்னிப் பிணைந்த வாழ்வில் உரிமைப் போராட்டத்தில் உயிரை இழக்கிறார் ஒரு குடும்பத்தலைவர்.அதன்பின், வயதுக்கு வந்த மகள் பள்ளி செல்லும் சிறுவன் ஆகியோரை வைத்துக் கொண்டு வயிற்றுப்பாட்டுக்கே போராடுகிறார் ஒரு தாய்.அவர்கள் வாழ்க்கையை அப்படியே திரையில் வரித்திருக்கும் படம் வாழை.
பொன்வேல், சேகர் ஆகிய இரு சிறுவர்களே படத்தின் நாயகர்கள்.பெயர் பெற்ற நடிகர்களைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும் நடிப்பால் இரசிகர்களைக் கவர்கிறார்கள். இருவரில் ஒருவர் கமல் இரசிகர் இன்னொருவர் ரஜினி இரசிகர் என்று வைத்து இரசனை கூட்டியிருக்கிறார் இயக்குநர்.
சிறுவன் பொன்வேலால் விரும்பப்படும் பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் நிகிலாவிமல் இயல்பாகவே அழகு.படத்தில் அவர் காட்டும் அன்பு பேரழகு.அவர் நடிப்பில் அவ்வளவு பாந்தம்.
சிறுவன் பொன்வேலின் அக்காவாக நடித்திருக்கும் திவ்யாதுரைசாமியின் பாத்திரமும் நடிப்பும் நன்று.அவரோடு கண்களால் உரையாடும் கலையரசன் கவனம் ஈர்க்கிறார். சிறுவனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி சிறப்பு.இறுதிக்காட்சியில் மகனைப் பார்க்கும்போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பு நெகிழ்வு.
தயாரிப்பாளர் ஜேஎஸ்கே.சதீஷ் ஏற்றிருக்கும் வேடம் முதலாளித்துவத்தின் பிரதிநிதி. கொடுத்த வேடத்தைக் குறைவின்றி செய்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு புற அழகையும் உள் வலியையும் சரியாகக் காட்சிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறது.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் சுகம்.ஒப்பாரி கனம்.பின்னணி இசை பலம்.
படத்தில் வரும் சிறுவன் பொன்வேல்தான் இன்றைய இயக்குநர் மாரிசெல்வராஜ்.
தன்னைத் தன்னிலிருந்து பிரித்துப் பார்த்து திரைக்கதையாக்கி கொஞ்சமும் பரப்புரை தொனியின்றி வறுமை,பொதுவுடமை,காதல்,நகைச்சுவை ஆகிய உணர்வுகளை அந்த வட்டார வழக்கு மொழியிலேயே உரைத்திருக்கிறார்.அதைக் கண்டு, களித்து, கலங்கவும் வைத்திருக்கிறார்.
கூலி உயர்வு கேட்டமைக்காக நிகழ்ந்துவிட்ட ஒரு கொடுமை பல்லாண்டுகள் கழித்து முதலாளித்துவத்தின் முகத்தில் அறைந்திருக்கிறது.
வாழ்வாங்கு வாழும் இந்த வாழை என்பதில் மாற்றமில்லை.
– சுரா