ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சீயான் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சித், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன் பேசுகையில், ” தங்கலான் திரைப்படம் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ஊடகங்கள் தான் காரணம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற தங்கலானின் பயணம் அனைவரின் கடும் உழைப்பால் சிறந்த படைப்பாக உருவாகி இருக்கிறது.

கடந்த பத்து நாட்களாக சீயான் விக்ரம் தலைமையில் படக்குழுவினர் பல இடங்களுக்கு பயணித்து தங்கலான் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சென்றடைய செய்திருக்கிறார்கள். இதற்காக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சீயான் விக்ரம் படத்திற்காக உழைத்த உழைப்பை விட படத்தின் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவரின் கடின உழைப்பு.. நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழும். ஒரு நடிகர் திரைப்படத்தில் நடிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அந்த படத்தினை ரசிகர்களிடம் சென்று சேர்ப்பதற்காக மேற்கொள்ளும் உழைப்பு தயாரிப்பாளர் மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் வழங்கிய அன்பும், ஆதரவும் அசாதாரணமானது. ஒவ்வொரு இடத்திலும் அவரின் செயல்கள் சிறப்பானதாக இருந்தது. திரளாக கூடும் ரசிகர்களை கட்டுப்படுத்தி, அவர்களுடன் உரையாடி அவர்கள் மொழியிலேயே உரையாடி, அவர்களின் தேவையை புரிந்து கொண்டு உற்சாகமாக பேசி தங்கலானை சென்றடைய செய்திருப்பது அவருடைய தனிச்சிறப்பு. சீயான் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் என அனைவரும் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் பார்த்துவிட்டு கொண்டாடுவார்கள்.‌ தங்கலான் திரைப்படம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? என்பதனை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் பேசுகையில், ” எல்லா படத்தையும் போல் இந்த திரைப்படத்திலும் கடினமான உழைப்பு இருக்கிறது. அனைவரும் 100 சதவீத உழைப்பை கடந்து அதற்கும் மேலாக உழைத்திருக்கிறார்கள். அனைவரின் கடின உழைப்பும் திரையில் பளிச்சிடுகிறது. எல்லையே இல்லாத அளவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள். அதனால் தங்கலான் படத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது.‌

நான் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் இதனை நான் ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். சில படங்களில்தான் நமக்கான வாய்ப்பு கிடைக்கும். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சூரரை போற்று ‘ என அந்த வரிசையில் தங்கலானும் இடம் பிடித்திருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இசை கொண்டாடப்பட வேண்டியது என்று சிலர் தற்போது சொல்கிறார்கள்.‌ அதனை அந்த நேரத்தில் நாங்கள் தவற விட்டோம் எனக் குறிப்பிடுகிறார்கள். தற்போது தங்கலான் படத்தை கொண்டாட தயாராகி விட்டார்கள். ஏனெனில் சினிமாவை அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும் அனைத்து விசயங்களும் இந்த படத்தில் இருக்கிறது. அதனால் இந்த படத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

பழங்குடியின மக்களின் வாழ்வியலை இசையாக சொல்ல முயற்சித்து இருக்கிறோம். தமிழ் சினிமாவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பெரிதாக காண்பிக்கப்படவில்லை. ஏராளமான புதிய ஒலிகளை உண்டாக்கி அதில் பழங்குடியின மக்களின் வாழ்வியலோடு தமிழ் மணத்துடன் இரண்டற கலக்கச் செய்திருக்கிறோம். இதுவரை கேட்காத புல்லாங்குழல் ஓசை என தேடித்தேடி பல ஒலி மற்றும் ஓசைகளை சேகரித்து இணைத்து இருக்கிறோம்.‌ நிச்சயம் ரசிகர்களுக்கு இது புதிய அனுபவத்தை வழங்கும்.’: என்றார்.

நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில், ” தங்கலான் நான் நடிக்கும் நான்காவது தமிழ் படம். இது எனக்கு மிகவும் முக்கியமான படம். அதுவும் இந்த தருணம் மிகவும் உணர்வுபூர்வமானது.

கடந்த பத்து நாட்களாக இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம்.

ஆரத்தி எனும் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநர் பா. ரஞ்சித்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்ரம் சிறந்த சக நடிகர். பொதுவாக அனைத்து நட்சத்திர நடிகர்களும் சுயநலம் மிக்கவர்களாக இருப்பர். ஆனால் விக்ரம் இந்த விசயத்தில் தாராளமாக சக கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். உடன் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள் மீது அக்கறை செலுத்துபவர். இது மிகவும் அரிதான தகுதி. இதைப் பெற்றிருக்கும் சீயான் விக்ரமை பாராட்டுகிறேன். இதற்காக நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

நடிகை பார்வதி பேசுகையில், ” பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை தங்கலான் படத்தில் நிறைவேறி இருக்கிறது. தங்கலான்- இயக்குநர் பா.ரஞ்சித்தின் கற்பனை படைப்பு.‌ அவர் உருவாக்கிய உலகம் இது.

நடிப்புக்கு அலங்காரம் என்பது மிகவும் முக்கியம். இதற்கு துணையாக இருந்த ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர் -ஆடை வடிவமைப்பாளர்- ஒப்பனையாளர் – அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் ரவிக்கை இல்லாமல் நடிப்பது சவாலாக இருந்தது. இதற்கு தேவையான உளவியல் வலிமையை வழங்கிய படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி.

சீயான் விக்ரமின் அன்பு- நட்பு -உழைப்பு இதை நேரில் கண்டு வியந்து விட்டேன். ஒரு கற்பனையான கதாபாத்திரத்தை வடிவமைப்பதற்கு எல்லையில்லை. ஆனால் அதனை ஏற்று நடித்து நடிப்பிற்கு எல்லையே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறீர்கள். உங்களுடைய நடிப்பு எனக்கு முன்மாதிரியாக இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல வளர்ந்து வரும் அனைத்து கலைஞர்களுக்கும் உங்களுடைய நடிப்பு சிறந்த பாடமாக அமைந்திருக்கிறது. ” என்றார்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ” சீயான் விக்ரம் என் மீது நம்பிக்கை வைத்தார். அவருடன் பணிபுரிந்ததை பெருமிதமாக கருதுகிறேன். இவரைப் போன்ற ஒரு திறமையான நட்சத்திர நடிகருடன் பணியாற்றும்போது நாம் எழுதுவதை துல்லியமாக திரையில் செதுக்கி விட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

நேற்று இப்படத்தின் இறுதி பிரதியை பார்க்கும் போது நடித்திருக்கும் அனைத்து கலைஞர்களும் அவர்களது கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருப்பதை பார்த்து வியந்தேன். இதுபோன்ற கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்ததையே நான் பெருமையாக கருதுகிறேன் இவர்களால் தான் இந்த படைப்பு தரமான படைப்பாக உருவாகி இருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்கள் நடிக்கும் போது எனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அவர்களாகவே நடிப்பை வழங்கினார்கள். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.‌ அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ நடிகர்கள் – நடிகைகள்- மட்டுமல்லாமல் கலை இயக்குநர் -ஒளிப்பதிவாளர் -ஒலி வடிவமைப்பாளர் – படத்தொகுப்பாளர் -சண்டை பயிற்சியாளர் என அனைவரும் தங்களது திறமையான பங்களிப்பை வழங்கினர்.‌

இசையமைப்பாளர் ஜீ. வி பிரகாஷ் உடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றுவது போல் இல்லை.‌ நான் எழுதிய கதையின் தன்மையை.. அது சொல்லவரும் விசயத்தை புரிந்து கொண்டு.. அதனை இசை வடிவில் மாற்றுவதற்கான அனைத்தும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு இருக்கிறார். அது மிகச் சிறப்பாக இருக்கிறது.

இந்த படைப்பிற்கு ஜீ..வி பிரகாஷ் பொருத்தமாக இருப்பார் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் பரிந்துரை செய்தார். ஜீவியுடனான முதல் சந்திப்பிலேயே அவருக்கும் எனக்குமான புரிதல் எளிதாக இருந்தது.‌ அவர் இந்த திரைக்கதைக்கு என்ன மாதிரியான ஒலி வேண்டும் என்பதை ஆர்வத்துடன் விவரித்தார். இப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. மூன்று பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதுவே படத்தின் வெற்றியை தீர்மானிப்பதற்கு காரணியாக அமைந்து விட்டது. அத்துடன் படத்தின் பின்னணி இசைக்காக அவருடைய கடின உழைப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்த தருணத்தில் அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்திற்காக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் கடினமாக உழைத்து வருகிறார். அதிலும் படத்தின் வெளியீட்டிற்காக கடுமையாக உழைத்து வருகிறார். ‘அட்டகத்தி’ காலகட்டத்தை விட அவருடன் பழகிய போது அவரை சரியாக புரிந்து கொண்டது இந்த காலகட்டத்தில் தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கை. படத்தைப் பற்றி விவாதம் எழும் போது கலந்து ஆலோசித்த பாணி… தற்போது கூட படத்தின் விளம்பரத்திற்காக ஒரு சிறிய விசயத்தை செய்ய திட்டமிட்டு இருந்தேன். அதற்கு கூட சம்மதம் தெரிவித்தார். இந்த படத்திற்காக அவர் தன்னாலான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் நிபந்தனை இன்றி வழங்கி வருகிறார்.‌ இதற்காகவே அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக தனஞ்ஜெயனின் ஒருங்கிணைப்பு பணி சிறப்பாக இருந்தது. தங்கலான் படத்தை அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய செய்திருக்கிறார்.

ஒரு படத்தை விளம்பரப்படுத்தி அனைத்து தரப்பு ரசிகர்களிடயும் சென்றடையச் செய்ய வேண்டிய பணி அப்படத்தின் நடிக்கும் நடிகர்களுடையது அல்ல என்றாலும்.. சீயான் விக்ரம் இதற்காக உழைத்த உழைப்பு என்னை வியக்க வைக்கிறது.‌ குறிப்பாக தங்கலான் படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதில் அவரால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருப்பதை பார்த்து பிரமித்திருக்கிறேன்.‌ தங்கலான் படத்திற்கு தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது சீயான் விக்ரமின் விளம்பரப்படுத்திய பாணி தான். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.

தங்கலான் யார்? தங்கலான் படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் ? தங்கலான் எப்படி இருக்கும்? என்பதை பற்றி இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியானதும் பார்வையாளர்களிடத்தில் ஒரு விதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும்.‌ அதே தருணத்தில் பா ரஞ்சித்தின் படம் என்பதால் எந்த வகையான அரசியல் இருக்கும்? என்பது குறித்தும் நீங்கள் யூகித்திருப்பீர்கள்.

இந்தப் படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு தான் என்னை நானே தேடத் தொடங்கினேன். நான் ஒரு வரலாற்றுப் பயணி என நினைத்துக் கொள்கிறேன்.‌
தங்கலான் படத்தின் போது தான் என்னை நானே சரியாக புரிந்து கொள்ள முடிந்தது. என் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நான் யார்? என என்னை நானே தேடிக் கொண்டிருக்கிறேன்.

நான் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்பதை பற்றியும், மக்களிடத்தில் என்ன மாதிரியான விவாதங்கள் எழ வேண்டும் என நான் தீர்மானிக்கிறேன் என்பதையும் மையமாகக் கொண்டுதான் என் படைப்புகள் உருவாகிறது. தங்கலான் படத்தின் மூலம் நான் என்னை நானே புரிந்து கொண்டு, வரலாற்றுப் பயணியாக பயணிக்கிறேன்.

தங்கலான் படத்தில் தங்கலானுக்கும் அவருடைய சமூக அரசியலுக்கும் இடையேயான புரிதலை விவரித்து இருக்கிறேன். தங்கலான் தான் யார்? என்பதை தேட தொடங்குவதன் ஊடாக விடுதலையை எப்படி அடைகிறார் என்பதும் இடம் பிடித்திருக்கிறது. இதை என்னுடைய திரை மொழி வடிவத்தில் சொல்லி இருக்கிறேன். என்னுடைய திரை மொழி வடிவம் சிக்கலானது என்றாலும்..‌ இந்தப் படத்தில் எளிமையாக சொல்ல முயற்சித்திருக்கிறேன்.‌

தமிழ் திரையுலக ரசிகர்கள் எப்போதும் முற்போக்கான விசயங்களுக்கு ஆதரவை வழங்குவார்கள்.‌ தமிழ் ரசிகர்கள் வணிக படம் கலை படம் என்னை பிரித்துப் பார்த்து ஆதரிப்பதில்லை. அவர்கள் அனைத்தையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தான் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதனால்தான் என்னுடைய படங்களில் நான் பேசும் அரசியலை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறார்கள். நான் பேசும் கருத்தியலில் முரண் இருக்கலாம். ஆனால் என்னுடைய திரை மொழியை வரவேற்கிறார்கள்.‌ தொடர்ச்சியாக அவர்கள் அளித்து வரும் ஆதரவினால் தான் நான் தங்கலானை உருவாக்கி இருக்கிறேன். அத்துடன் ரசிகர்களுக்கு தங்கலான் ஒரு புது அனுபவத்தை வழங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்களுக்கும் இந்த தங்கலான் புதிய அனுபவத்தை அளிக்கும். ” என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில், ” தங்கலான் படத்தின் முதல் புகைப்படம் வெளியானதிலிருந்து ஊடகங்களின் ஆதரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. படத்தை நிறைவு செய்வதற்கான ஊக்கத்தையும் அளித்தது. உங்களுடைய ஆதரவிற்கு நன்றி.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போது ஆயிரம் ஆண்டிற்கு முன்னதான தமிழகத்தின் வரலாறு தொடர்பான கதை. அரசர்கள் -ஆடம்பரம்- வீரம் -வெற்றி- தோல்வி- போர்- ஆகியவற்றை பற்றி பேசி இருந்தார்கள்.‌ ஆனால் தற்போது அதே இந்தியாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் நாம் அனைவரும் வறுமையில் இருந்தோம். கஷ்டப்பட்டோம். இது வேறு உலகம்.‌ இதை மையமாக வைத்து பா ரஞ்சித் உருவாக்கிய கதைதான் தங்கலான்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்வையிட்டதிலிருந்து இந்த திரைப்படத்தை ஜனரஞ்சகமாக உருவாக்கி இருக்கிறோம் என அனைவருக்கும் தெரிய வருகிறது. அந்த அளவிற்கு மக்களை மனதில் வைத்து இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் கலை படைப்புகள் போல் அல்லாமல் இந்த படத்திற்கு முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஒரு ஆற்றல் வாய்ந்த படைப்பை பா. ரஞ்சித் உருவாக்கி இருக்கிறார்.‌ இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக கடந்த பத்து நாட்களில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என தென்னிந்திய மாநிலங்கள் முழுவதிற்கும் பயணிப்பதற்கான பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், தனஞ்ஜெயனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள்- நடிகர்கள் -நடிகைகள்- என அனைவரும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் அற்புதமான இசையமைத்த இசை அமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷுக்கு பிரத்யேகமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் அவருடைய கடின உழைப்பிற்காக சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க விருதை பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்.

இந்தப் படத்திற்காக இயக்குநர் பா. ரஞ்சித் கடினமாக உழைத்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியை உருவாக்கும் போதும் அதனை படமாக்கும் போதும் படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கடின உழைப்பை என்னால் உணர முடிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்தாலும்.. படைப்பிற்கு என்ன தேவையோ.. அதனை நட்சத்திரக் கலைஞர்களிடமிருந்து பெறுவதில் உறுதியாக இருந்த விதம் என்னைக் கவர்ந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு இதில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் எந்த படத்திலும் எளிதாக நடிக்க கூடிய அளவிற்கு பயிற்சியை வழங்கி இருக்கிறார். எங்கள் அனைவரையும் திறமை வாய்ந்த நட்சத்திரமாக மாற்றி இருக்கிறார்.

இந்தப் படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். ஆனால் இது ஒரு கூட்டு முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் டேனியல் நம்ம ஊர் கலைஞர்களை போல் மாறிவிட்டார். அவருடைய எனர்ஜி பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பயணிக்கும் போது ரசிகர்களை சந்திக்கும் போது அவரது பேச்சு உற்சாகமாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் அதை போன்றது.. இதைப் போன்றது.. என்று சொல்வார்கள். ஆனால் இது வேற மாதிரியான படம் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். படத்தை பார்த்துவிட்டு உங்களின் மேலான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.