பொதுத்துறையில் பணியாற்றும் கதாநாயகன் விஜய்யின் சொந்த வாழ்க்கையில் மகன் காணாமல் போகிறார் மனைவி பிரிகிறார் என்பது உள்ளிட்ட பல சிக்கல்கள். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? காணாமல் போன மகன் கிடைத்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடை தாம் தி கோட்.
அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய்.அப்பா கதாநாயகன் மகன் வில்லன்.இதில் அப்பாவாக நடித்திருக்கும் விஜய் வழக்கம்போல் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.மகனாக நடித்திருக்கும் விஜய்யின் தோற்றம், கதாபாத்திர வடிவமைப்பு அதில் அவருடைய நடிப்பு ஆகியன தவறாக இருக்கின்றன.
விஜய்யுடன் பணிபுரிகிறவர்களாக நடித்திருக்கும் பிரசாந்த்,பிரபுதேவா,அஜ்மல், ஜெயராம்,அப்பா விஜய்யின் மனைவியாக சினேகா,மகன் விஜய்யின் காதலியாக மீனாட்சி சவுத்ரி,வில்லனாக நடித்திருக்கும் மோகன் ஆகியோரோடு யோகிபாபு,வைபவ்,பிரேம்ஜி,அஜய்,ஆகாஷ் அரவிந்த்,யுகேந்திரன்,ஒய்.ஜி.மகேந்திரன்,லைலா,பார்வதி நாயர், விடிவி கணேஷ்,புதுமுகம் அபியுக்தா உட்பட பலர் படத்தில் இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் ஒரு சண்டைக்காட்சிக்கு நடுவிலும் த்ரிஷா ஒரு நடனக்காட்சிக்கும் வந்து போகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த்நுனியின் உழைப்பில் வெளிநாட்டுக் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் பார்ர்கும்படி அமைந்திருக்கின்றன.
யுவன்சங்கர்ராஜா ஈடுபாட்டோடு இசையமைத்ததுபோலவே தெரியவில்லை. பாடல்கள் பெரிதாக அமையாதது பெரும் குறை.பின்னணி இசையிலும் தன் முத்திரைகளைப் பதிக்கத் தவறியிருக்கிறார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் திலீப்சுப்பராயனுக்கு அதிக வேலை.அவர் நிறைவாகச் செய்திருக்கிறார்.
நீ காந்தியா இருக்கும்போது நான் சுபாஷ்சந்திரபோஸா இருக்கக் கூடாதா? என இருபொருள் கொள்ளும் வசனங்கள் உட்பட பல இடங்களில் தன் இருப்பைக் காட்டியிருக்கிறார் விஜி.
படத்தைத் தொகுத்திருக்கும் வெங்கட்ராஜன், கவலையே படாமல் அரைமணி நேரத்தைக் குறைத்திருக்க வேண்டும்.ஆனால் அப்படிச் செய்யாமல் இரசிகர்களைச் சோதித்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு.அவருடைய படங்கள் கலகலப்பாக நகர்ந்து இளைப்பாறுதல் கொடுக்கும்.இப்படத்தில் அது சுத்தமாக இல்லை.மிகப் பழைய கதை, படம் தொடங்கும்போதே முடிவு வரை இரசிகர்கள் நினைப்பது அனைத்தும் அட்சரம் பிசகாமல் நடக்கும் அரதப் பழசான திரைக்கதை ஆகியன இப்படி மாட்டிக் கொண்டோமே? என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது.
மகனாக நடித்திருக்கும் விஜய்க்கு ஜீவன் என்கிற பெயர் இருக்கும்போது சஞ்சய் என்ற பெயரை வில்லன் வைப்பது மிகப்பெரிய குறியீடாகத் தெரிகிறது.
அப்பா விஜய்யின் இயல்பான நடிப்பு,அங்கங்கே சிரிக்க வைக்கும் வசனங்கள்,தொடக்கத்தில் வரும் தொடர்வண்டிக் காட்சி மற்றும் சில சண்டைக்காட்சிகள் ஆகியன படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.
– இளையவன்