படத்தின் பெயரே இது விளையாட்டை மையப்படுத்திய படம் என்பதைச் சொல்லிவிடுகிறது.இந்தப் பெயரை வைத்துக் கொண்டு, கிராமத்தில் நடக்கும் மட்டைப்பந்து விளையாட்டுப் போட்டிகள்,அங்குள்ள வீரர்களுக்குள் நடக்கும் தன்முனைப்பு யுத்தம்,இவற்றிற்கிடையே ஒரு காதல், சாதியப்பாகுபாடு மற்றும் அதன் விளைவுகள் ஆகியனவற்றை உறுத்தாமல் தொகுத்துச் சொல்லியிருக்கும் படம் லப்பர் பந்து.

ஹரீஷ்கல்யாண் இளமைத்துடிப்புடன் நடித்திருக்கிறார்.அதற்கேற்ற கதாபாத்திரமும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.விளையாட்டில் பந்து வீசும்போதும் மட்டை பிடிக்கும்போதும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்.விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறும்போது பார்ப்போரையும் கலங்க வைக்கிறார்.

அட்டகத்தி தினேஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.கல்யாண வயதில் ஒரு பெண் உள்ளவராக நடித்திருக்கிறார்.விளையாட்டில் வீரனாகத் திகழ்வதும் மனைவியிடம் பதுங்குவது,ஹரீஷ்கல்யாணிடம் மோதுவது ஆகிய எல்லாவற்றிலும் தன் நடிப்பின் மூலம் இந்த வேடத்துக்கு இவர்தான் பொருத்தம் என நினைக்க வைத்திருக்கிறார்.

ஹரீஷ்கல்யாணின் காதலியாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நன்று.அப்பாவுக்கும் காதலனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது என்று தெரிந்து அதைச் சமாளிக்க அவர் செயல்கள் இரசிக்க வைக்கின்றன.கோபப்படும் இடங்களிலும் வரவேற்புப் பெறுகிறார்.

அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகாவிஜய், மிகப் பொருத்தமாக நடித்து பாத்திரத்துக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறார்.

காளிவெங்கட், பால சரவணன், ஜென்சன் திவாகர், கதிர், கீதா கைலாசம்,தேவதர்ஷினி, டிஎஸ்கே என படத்தில் நடித்திருக்கும் அனைவருமே அவரவர் வேலையைத் திறம்படச் செய்திருக்கிறார்கள். பால சரவணனும் ஜென்சன் திவாகரும் பேசும் வசனங்கள் சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைப்பதாகவும் அமைந்திருக்கின்றன.

தினேஷ்குமார் புருசோத்தமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக நன்றாக அமைந்து பார்வையாளர்களுக்கு இதமூட்டுகின்றன.விளையாட்டுப் போட்டி நிஜமாக நடப்பது போன்றே அமைந்திருக்கின்றன.

ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசையும் அளவு.

கலை இயக்குநர் வீரமணி கணேஷ் உழைப்பில் கிராமத்து வாழ்க்கை கண்முன் நிறைகிறது. படத்தொகுப்பாளர் மதன் ஜி இயக்குநரின் சிந்தனைக்கேற்ப செயலாற்றியிருக்கிறார்.

விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு திரைக்கதையில் காதல்,குடும்ப உறவுகள்,சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளிட்ட பல விசயங்களையும் அளவாகக் கலந்து ஒரு சுவாரசியமான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.நாயகர்களுக்கான வயது வேறுபாட்டை விஜயகாந்த்,விஜய் ஆகியோரை வைத்துச் சொல்லியிருப்பது நல்ல உத்தி.

ஆழமான விசயங்களைக்கூட சொற்களால் சொல்லாமல் காட்சிகளால் உணரவைத்திருப்பது சிறப்பு.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.