காதல்,சண்டை,கொலை.விசாரணை ஆகிய அம்சங்களைக் கொண்ட கதையை ஓடும் தொடர்வண்டிக்குள் வைத்து வேகமாக்க முயன்றிருக்கும் படம் ஹிட்லர்.
மதுரையில் இருந்து சென்னை பயணிக்கும் நாயகன் விஜய் ஆண்டனி,தொடர்வண்டி நிலையத்தில் நாயகி ரியாசுமனைக் கண்டதும் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்.அதே தொடர்வண்டிக்குள் ஓர் அமைச்சரின் பெரும்தொகையான பணம் கொள்ளை போகிறது.கொலையும் நடக்கிறது.அதை விசாரிக்க காவல்துறையும் வருகிறது.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம்.
மீசையை மழித்து கொஞ்சம் முடி அதிகமாக வைத்து தோற்றத்தில் மாற்றம் காட்டியிருக்கிறார் விஜய் ஆண்டனி.ரியா சுமனைப் பார்த்ததும் காதல் கொள்வது அதன்பிறகான காதல்காட்சிகள் ஆகியனவற்றில் இளமைத்துள்ளலைக் காட்ட முயன்றிருக்கிறார்.சண்டைக் காட்சிகளை வழக்கம்போல் செய்திருக்கிறார்.
சண்டைப்படங்களில் கதாநாயகிகளுக்கு எவ்வளவு இடம் கிடைக்குமோ அவ்வளவு இடம்தான் நாயகி ரியாசுமனுக்கு.அதிலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.தன் அழகான எதிர்வினைகளால் இரசிக்க வைத்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம்மேனன், தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சரண்ராஜ், தமிழ், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி,விவேக் பிரசன்னா ஆகியோர் பொருத்தமாக நடித்திருப்பது காட்சளிலுள்ள குறைகளை மறக்கும்படி செய்திருக்கிறது.
நவின்குமார் ஐ ஒளிப்பதிவில் தொடர்வண்டிக்காட்சிகள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன.விஜய் ஆண்டனி உள்ளிட்ட நடிகர்களுக்கும் அவர் ஒளியமைப்பில் நன்மை செய்திருக்கிறார்.
விவேக் – மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள்.பாடல்களில் இறங்கி அடித்திருக்கிறார்கள்.பின்னணி இசையில் தொய்வில்லை.
சங்கத்தமிழன்.இ படத்தொகுப்பின் மூலம் படத்தின் சுவாரசியத்தைக் கூட்ட உழைத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் தனா.பொழுதுபோக்கு அம்சமான திரைப்படத்தில் மக்கள் சிக்கலைப் பற்றிப் பேச விழைந்திருக்கிறார்.அதற்குள் காதல்,மோதல்,நகைச்சுவை,சண்டை ஆகிய வியாபார அம்சங்களைச் சரிவிகிதத்தில் கலந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்.
ஆனால் எடுத்துக்கொண்ட சிக்கலும் அதற்கான தீர்வும் ஏற்கெனவே அறிந்தவை என்பது பெரும் பலவீனம்.இயக்குநர், திரைமொழி கற்ற அளவுக்கு சமுதாயம் பற்றிப் படிக்கவில்லை என்பது புலனாகிறது.ஆனாலும் காட்சிகளை இரசிக்கும்படி கொடுத்து தன்னையும் படத்தையும் காப்பாற்ற முயன்றிருக்கிறார்.
– இளையவன்