முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாத வீட்டை பார்த்திருக்கிறீர்களா? அதுவும் இரண்டு பெண்கள் வசிக்கிற வீட்டில் கண்ணாடியே இல்லை என்றால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும்.
மலைப் பிரதேசத்தில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியிலிருக்கும் அந்த வீட்டில். நோய்வாய்ப்பட்டு எழுந்து நடமாட சிரமப்படும் நிலையில் தனிமையிலிருக்கிறார் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி. அவருக்கு உதவியாளராக பணியில் சேர்கிறாள், பெயரைப் போலவே மகிழ்ச்சியாகவும் நிலா போல் அழகாகவும் இருக்கிற மகிழ்நிலா.
அந்த வீட்டில் கண்ணாடி கிடையாது; முகம் பார்க்க வாய்ப்பேயில்லை. தன் காதலனுடன் பேச வேண்டுமென்றால் வீட்டுக்குள் சிக்னல் கிடைக்காது. வெளியில் சென்றுதான் பேச வேண்டும். அந்த வீட்டம்மா மகிழ்நிலாவிடம் பாசமாகப் பழகினாலும், அவளது கனவில் வந்து பயமூட்டுகிறார். ஒன்றிரண்டு மாதங்கள் காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருந்தவளுக்கு, போன் பிரச்சனையாகி அந்த வாய்ப்பும் பறிபோகிறது.
ஒருசில நாட்கள் கடந்துபோக வெளியுலகத்துடன் எந்தவித தொடர்புமின்றி இருக்கும் அவளது முகத்தில் ஒருவித மாறுதல் உருவாகிறது. அந்த மாறுதல் படத்தைப் பார்ப்பவர்களுக்கு தெரியுமே தவிர, அவளுக்குத் தெரியாது. காரணம் அவள் தன்னைப் பார்க்க அந்த வீட்டில் கண்ணாடி கிடையாது.
தன் தோற்ற மாற்றத்தைத்தான் அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லையே தவிர, தன்னைச் சுற்றி மர்மமான விஷயங்கள் நடப்பதை உணர முடிகிறது. அப்படியே சிலபல நாட்கள் கடந்துபோக, ஒரு கட்டத்தில் அவள் தனது தோற்ற மாற்றம் பற்றியும், அதன் பின்னணியில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதையும், நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளாகியிருப்பதையும் தெரிந்து அதிர்கிறாள். அந்த அதிர்ச்சி நமக்கும் தொற்றிக் கொள்கிறது. இயக்கம் அருண் கே ஆர்
உருண்டு திரண்ட கன்னங்களும் மலர்ந்த சிரிப்பும் மகிழ்நிலாவாக வருகிற கவிப்பிரியாவின் அழகை மெருகேற்றிக் காட்ட, படபடக்கும் விழிகளில் காதல் மொழி பேசுவதும் அதே விழிகளில் பயத்தின் ஆழத்தை வெளிப்படுத்துவதுமாய் விறுவிறுப்பாய் நகரும் காட்சிகளில் தனது பங்களிப்பை சுறுசுறுப்பாய் தந்திருக்கிறார்.
கவிப்பிரியாவை காதலிக்கும்போது பூ மலர்வது போன்ற மென்மையான உடல்மொழியோடு வலம்வரும் மைக்கேல் தங்கதுரை, தன் ஆயுளையும் இளமையையும் தக்க வைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவராக வில்லத்தனத்திலும் வீரியம் காட்டியிருக்கிறார்.
ஸ்ரீரஞ்சனி சரிவர எழுந்து நடமாட முடியாதவராக; ஊட்டி விட்டால்தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் இருப்பவராக தன் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப நடித்திருக்க,
சூழ்ச்சிக்கு ஆளாகி, வயிற்றில் கருவைச் சுமந்தபடி, தனியறையில் சங்கிலியால் கட்டப்பட்டு, அவஸ்தைகளை அனுபவிக்கும் பரிதாபமான கதாபாத்திரத்தில் மிகை நடிப்போடு களமாடியிருக்கிறார் கலைராணி.
மிச்சமிருக்கிற ஒருசிலர் கெஸ்ட் ரோல் மாதிரி வந்துபோனாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
மைக்கேல் தங்கதுரையும் ஸ்ரீரஞ்சனியும் உடுத்தும் உடைகளின் வண்ணங்களும் வடிவமைப்பும் காஸ்டியூம் டிசைனர் யாருப்பா என கேட்க வைக்கிறது.
மலைப் பிரதேசம், கண்ணுக்கெட்டும் தூரம் வரை பசுமை, அதற்கிடையில் ஒரேயொரு வீடு என கதையின் முக்கிய சம்பவங்கள் அரங்கேறும் இடங்களை அழகு குறையாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சூர்யா வைத்தி.
ஆரம்பத்தில் இதமான காதல் காட்சிகள், பின்னர் மர்மம், திகில், திருப்பம் என பரபரப்பு அத்தியாயங்கள் அத்தனைக்கும் பொருத்தமாக இருக்கிறது விவேக், ஜெஸ்வந்த் கூட்டணியின் பின்னணி இசை.
படத்தில் லாஜிக் மீறல்களும் உருவாக்கத்தில் சில குறைகளும் உண்டு. புது அனுபவத்துக்காக அதையெல்லாம் பொறுத்துக் கொள்ள தயாராக இருப்பவர்கள் தியேட்டருக்கு கிளம்பலாம்.
ஆரகன், அழகான அரக்கன்!
— க.கணேஷ்குமார்.