காதலுக்காகப் போற்றப்படும் காத்தவராயன் ஆரியமாலா கதையின் தற்கால வடிவமாக வந்திருக்கும் படம் ஆரியமாலா.

கிராமமொன்றில் வசிக்கும் நாயகி மனிஷாஜித் கனவில் கண்ட நாயகனை நிஜத்திலும் பார்க்கிறார்.காதல் கொள்கிறார்.காத்தவராயன் கூத்து கட்டும் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக்குக்கும் நாயகி மீது காதல் வருகிறது.நாயகியிடம் காதலைச் சொல்கிறார்.அவரும் ஏற்றுக் கொள்வார்.சுபமுடிவாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் நாயகி காதலை ஏற்றுக்கொள்ள மறுத்து அதிர்ச்சி கொடுக்கிறார்.அது எதனால்? அதன் பின்னணியில் என்ன இருக்கிறது? என்பதைச் சொல்வதுதான் படம்.

கூத்துக்கலைஞர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் ஆர்.எஸ்.கார்த்திக்.காதல் உணர்வையும் அது தரும் வலியையும் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மனிஷாஜித், கதையே தன் மீதுதான் நடக்கிறது என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார்.காதல், கடவுளிடம் பேச்சு,தன் நிலையறிந்து வருத்தம்,தங்கை மீது பாசம் என எல்லா நிலைகளிலும் நன்றாக நடித்து நற்பெயர் பெறுகிறார்.

நாயகியின் தாய்மாமன்களாக வரும் மாரிமுத்து மற்றும் தயாரிப்பாளர் ஜேம்ஸ்யுவன் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள்.நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் எலிசபெத், தெருக்கூத்துக் குழுவின் வாத்தியராக நடித்திருக்கும் நடன இயக்குநர் சிவசங்கர், ஊர்ப் பெரியவராக நடித்திருக்கும் தவசி, நாயகியின் தங்கையாக நடித்திருக்கும் மணிமேகலை ஆகியோர் அளவாக நடித்து பலமாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெய்சங்கர் ராமலிங்கம்,கிராமத்துக்குள் நடமாடியது போன்ற எண்ணத்தைக் கொடுத்திருக்கிறார்.

செல்வநம்பி இசையமைத்திருக்கிறார்.கதை நடப்பது 1980 காலகட்டம் என்பதால் அதற்கேற்ப பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார்.

மிரட்டல் செல்வா, வீரா ஆகியோரின் சண்டைக் காட்சிகள் நன்று. ஹரிஹரனின் படத்தொகுப்பு கச்சிதம்.

திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கும் படத்தின் இணை இயக்குநர் ஆர்.எஸ்.விஜய பாலா,பெண்களின் பல்வேறு எண்ணங்களை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜனா ஜாய் மூவிஸ் குழுவின் கூட்டுமுயற்சியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் முடிவு விமர்சனங்களுக்கு உட்பட்டது எனினும் கதை நடக்கும் காலகட்டம் 1980 கள் என்பதால் அப்போதைய மக்கள் மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்பது அவர்களுக்குப் பாதுகாப்பு.

– இளவழகன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.