நாயகன் வெற்றி சிறு வயதில் விபத்து ஒன்றில் தனது குடும்பத்தை இழந்துவிடுகிறார். வாழ்க்கை வெறுத்துப் போய் காசிக்கு சென்று அங்கிருக்கும் மடத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் நிலைக்கிறார். ஆனால், ஆன்மீகத்தினுள் செல்லமுடியாமல் அவரது லட்சியம் தடை செய்கிறது. 10 வருடங்களுக்குப் பின் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று விரும்பும் அவரது லட்சியத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறார்.
அப்போது அவருக்கு கிடைக்கும் ஒரு பெண்னின் நட்பு, அவரது பாலைவனம் போன்ற வாழ்க்கையை சோலைவனமாக மாற்றுகிறது. அதன் மூலம் துறவியாக சுற்றி திரிந்தவர் சக மனிதராக மாறி, தன் மனம் விரும்பும் எழுத்துலகில் இணைய முற்படும் போது, மீண்டும் ஒரு கசப்பான சம்பவத்தை எதிர்கொள்கிறார். அதன் மூலம் மீண்டும் திசை மாறும் வெற்றியின் வாழ்க்கை என்னவானது?, அவர் விரும்பிய எழுத்துலகில் அவர் சாதித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
அமைதியான முகம், ஆரவாரம் இல்லாத திரை இருப்பு, அளவான நடிப்பு என துறவி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நடிகர் வெற்றி, தன் ஆன்மீக வேடத்தை களைத்துவிட்டு காதல் வயப்படும் போது, தனது முகத்திலும், உடல் அசைவிலும் வெட்கத்தை வெளிப்படுத்தும் விதம், நடிப்பில் அவரது முதிர்ச்சியை காட்டுகிறது. நான் கடவுள் ருத்ரா போல் மிரட்டவில்லை என்றாலும் பார்வையாளர்கள் மனதில் ஆலனாக ஒட்டிக்கொள்வதற்கான நேர்த்தியான நடிப்பை வெற்றி சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை நேசிக்கும் ஜெர்மனி நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் மதுரா, சிரித்த முகத்தோடு வசனம் பேசி பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறார். தான் சிறுவயதில் சந்தித்தவரை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த தனது மன மகிழ்ச்சியை தன் அம்மாவிடம் கைப்பேசி மூலம் வெளிப்படுத்தும் போது ஜெர்மனி மொழியில் பேசினாலும், அம்மா என்ற வார்த்தையை நடு நடுவே உச்சரித்து தமிழுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறார்.
மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அனு சித்தாராவின் அழகு முகத்தை பார்த்தால் போதும் பசி கூட பறந்து போய்விடும், அந்த அளவுக்கு கவர்ச்சி நிறைந்த கண்களோடு கவனம் ஈர்க்கிறார். ஆனால், உடல் எடை தான் ”வெற்றிக்கு காதலியா..!” என்று அதிர்ச்சியடைய வைக்கும் விதத்தில் இருக்கிறது.
விவேக் பிரசன்னா, அருவி மதன், டிட்டோ வில்சன், ஸ்ரீ தேவா, ஹரிஷ் பெராடி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் குறையில்லை.
ஒளிப்பதிவாளர் விந்தன் ஸ்டாலின், தனது கேமரா மூலம் பார்வையாளர்களுக்கு ஆன்மீகத் தளங்களுக்கு பயணித்த அனுபவத்தை கொடுக்கிறார்.
மனோஜ் கிரியானாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் மு.காசி விஸ்வநாதன், இயக்குநர் சொல்ல நினைத்ததை, அவர் சொன்ன விதத்தில் தொகுத்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் சிவா.ஆர், ”நம் மனது எதை அதிகம் விரும்புகிறதோ அதுவே கடவுள்” என்ற கருத்தை காதல் பின்னணியோடு சொல்ல முயற்சித்திருக்கிறார்.
எழுத்துலகம், காதல், ஆன்மீகம் ஆகிய மூன்றும் படத்தின் மிக முக்கிய அம்சங்களாக இருந்தாலும், ஒன்று கூட பார்வையாளர்களின் மனதை பாதிக்காமல் பயணித்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
தான் எடுத்துக் கொண்ட கதையை நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர் சிவா.ஆர், அதற்கான திரைக்கதையை எந்தவித சுவாரஸ்யமும் இன்றி நகர்த்தி செல்வதோடு, அடுத்தது என்ன நடக்கப் போகிறது, என்பதை யூகிக்கும்படியான காட்சிகள் மூலம் சொல்வதும், பல வருடங்களாக ஆன்மீகத்தில் ஈடுபட்ட ஒருவர், சட்டென்று சக மனிதராக மாறி காதல் வயப்படுவது உள்ளிட்ட ஏகப்பட்ட விசயங்கள் லாஜிக் மீறல்களாக இருக்கிறது.
ஆலன் காதல், கதை, ஆன்மீகம் எதிலும் உறுதியாக இல்லை.