நடிகர் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார்.

இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆலன்’ எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, ‘அருவி’ மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.

‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

YouTube player

தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சிவா விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசுகையில், ” இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர்களைப் பற்றி பேசி இருக்கிறேன். ஏன் எழுத்துக்களை பற்றி பேசினேன்? என்றால்.. என்னுடைய 12 வயது முதல் 18 வயது வரை நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். இந்த தருணத்தில் என்னுடைய பெற்றோர்கள் எப்போதும் என்னுடைய வாசிப்பிற்கு ஆதரவாகவே இருந்தார்கள். இதற்காகவே அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கைக்கு புத்தகத்தை படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். இயக்குநர் கே. பாக்யராஜ் எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற புத்தகத்தை தேடி வாசித்த பிறகு தான் சினிமா மீது எனக்குள் ஒரு ஆவல் வந்தது. நாமும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும்… இயக்குனராக வேண்டும்… என்று எண்ணி சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு முயற்சித்தேன். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாகவும், குடும்ப பொறுப்பினை சுமக்க வேண்டும் என்பதற்காகவும் சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு என்னுடைய வாழ்க்கை முப்பது ஆண்டுகள் கழிந்தது. அங்கு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.

அங்கிருந்து இங்கே பார்க்கும்போது இங்கு எழுத்திற்கு கொடுக்கும் மதிப்பை ஆய்வு செய்தேன். இங்கு புத்தகம் வாசிப்பது குறைந்துவிட்டது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிப்பதை ஊக்கப்படுத்தவில்லை. மிகப்பெரிய தவறினை செய்து கொண்டிருக்கிறோம். பாட புத்தகங்கள் படிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல. அதைக் கடந்து வாழ்வியல் தொடர்பாக ஏராளமான எழுத்துகள் இங்கு இருக்கிறது. தமிழில் லட்சக்கணக்கான எழுத்துக்கள் இருக்கிறது. லட்சக்கணக்கான புத்தகங்கள் இருக்கிறது. தயவுசெய்து உங்கள் வீட்டுப் பிள்ளைகளை புத்தகங்களை வாசிக்க சொல்லுங்கள்.

நான் புத்தகங்களை வாசிக்க தொடங்கும் போது வயது 12. எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் 18 மாணவர்கள் படித்தனர். புத்தகம் வாசித்ததால் ஒழுக்கமானவனாக வாழ்ந்து வருகிறேன். அதனால் புத்தகங்களை படிக்குமாறு சொல்லிக் கொடுங்கள். ஏனென்றால் வாழ்க்கை அதில் தான் இருக்கிறது.

கோவிட் காலகட்டத்தில் எனக்கு நான்கு மாதம் ஓய்வு கிடைத்தது. அப்போதுதான் என் ஆழ் மனதில் விதைத்த விதை எட்டிப் பார்த்தது. ஏதாவது எழுத வேண்டும்… ஏதாவது செய்ய வேண்டும்… என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் தான் இரண்டாவது படமாக ‘ஆலன்’ எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறேன். இது ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை.

ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2018 ஆம் ஆண்டில் ஐநா சபையில் கிரேட்டா என்ற ஒரு இளம் பெண் இந்த உலகத்தினரை பார்த்து ஒரு கேள்வியை கேட்கிறார். அவர் துணிச்சலாக கேட்ட கேள்விக்கான காரணம் என்ன? புவி வெப்பமயமாதல். இந்த பூமியில் 1. 5° செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. இந்த உலகம் எங்களுக்கானது. காற்று எங்களுக்கானது நீர் எங்களுக்கானது இதை அசுத்தம் செய்வதற்கு நீங்கள் யார்? என ஒரு சின்ன பெண் இந்த கேள்வியை கேட்டார். இந்த உலகம் நமக்கானது மட்டுமல்ல. நமது சந்ததிகளுக்குமானது. அடுத்த தலைமுறையினருக்கும் இதனை விட்டுச் செல்ல வேண்டும். அந்தப் பெண் நாம் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினார்.
நாம் ஏதோ இயந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். திரும்பிப் பார்க்கிறோம். கிட்டத்தட்ட அதே போல் தான் இந்த படமும் இருக்கும்.‌

இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்று இருந்தோம். அங்கு நான்கு ஐந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஐந்து அல்லது ஆறு வயது தான் இருக்கும். அவர்களில் ஒருவன் ஓடி வந்து என்னிடம் இது திரைப்படமா? எனக் கேட்டார். ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, நடிக்கிறாயா? என கேட்டேன். வில்லனாக நடிக்கிறேன் என பதில் அளித்தான். ஏன்? என்று கேட்டபோது, ‘அப்போதுதான் வெட்டலாம். குத்தலாம்’ என பதில் அளித்தான். ஒரு பிஞ்சு மனதில் எந்த மாதிரியான நஞ்சினை விதைத்திருக்கிறோம் என அதிர்ச்சி அடைந்தேன். வன்முறையை.. அவனுக்கு இங்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய பாவம் இல்லையா? மனசாட்சி இல்லையா? எதை விதைக்கிறோம்..? இங்கு நான் நல்ல விசயத்தை சொல்வதற்கு .. புத்தகத்தை படியுங்கள் என்று சொல்வதற்கு சிங்கப்பூரிலிருந்து நான் இங்கு வர வேண்டியதாக இருக்கிறது. நான் இங்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. இது என் மனசின் ஆதங்கம்…! வேதனை…! வலி…!எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்? .. இதுதான் என்னை இந்த படத்தை இயக்கத் தூண்டியது. எழுத்தைத்தான் இந்தப் படத்தில் அழுத்தமாக பேசி இருக்கிறேன். எழுதினால் யாருக்கு பயன்படும்…. எழுத்தினால் இந்த உலகத்திற்கு என்ன நன்மை கிடைக்கும்? ஒரு புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். ஒரு புத்தகம் வாழ்க்கையை மாற்றிவிடும். நான் இங்கு நிற்பதற்கும் புத்தகங்கள் தான் காரணம். நான் ஒரு ஒழுங்கான வாழ்க்கையையும்… அர்த்தமுள்ள தேடலையும் எனக்குள் ஏற்படுத்தியது புத்தகங்கள் தான். நான் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதற்கும் நண்பர்கள் காரணமல்ல. புத்தகங்கள் தான் காரணம்.

என் குருநாதர் கே. பாக்யராஜ். அவருடைய எழுத்தில் வெளியான பாக்யா எனும் வார இதழின் முதல் பிரதியை வாங்குவதற்காக 12 கிலோமீட்டர் அதிகாலையிலேயே பயணித்து வாங்கி படித்திருக்கிறேன். அந்த அளவிற்கு வாசிப்பின் மீது தீரா காதல் எனக்கு உண்டு. ஆனால் சிங்கப்பூர் சென்ற பிறகு அங்கு படிக்க முடியவில்லை. ஏனெனில் அது ஒரு இயந்திர வாழ்க்கை. அதனால் இங்கு சிறப்பு விருந்தினராக கே. பாக்யராஜ் வருகை தந்ததற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் ஆலன் அனைவருக்கும் பிடிக்கும். கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஜெர்மனி, காசி, வாரணாசி, ரிஷிகேஷ், காரைக்குடி, கொடைக்கானல், ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தால் தயாரிப்பில் எந்த சமரசமும் இன்றி வன்முறையில்லாமல் தரமாக உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வன்முறை கலந்து என்னால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் கதையின் நாயகன் அந்த வன்முறையையும் கடந்து செல்கிறான். வாழ்க்கையை பார்வையிடுகிறான். ஒரு பலசாலியை எளியவன் தாக்க முடியுமா? எளியவன் திருப்பித் தாக்க முடியாத ஒரு விசயத்தை நாம் ஏன் திணிக்கிறோம்? எல்லாம் கலந்தது தான் இந்த உலகம் என்ன சொல்வார்கள். இல்லை என்று நான் மறுக்கவில்லை‌. ஆனால் இங்கு எது அதிகம் தேவைப்படுகிறது? அன்பும் காதலும் தான். அதுதான் அதிகம் தேவை. இயற்கையை கொண்டாடுங்கள். அன்பை கொண்டாடுங்கள். காதலை கொண்டாடுங்கள். இந்த உலகம் அமைதியாக வாழும். இந்த தலைமுறை அமைதியாக.. பாதுகாப்பாக.. வாழும். வீட்டில் மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் போதாது. வெளியில் செல்லும்போதும் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

மேலும் இந்தப் படத்திற்காக நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் .

‘ஆலன்’ படத்தினை வழங்கும் விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஜி. தனஞ்ஜெயன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தை நண்பர் ஒருவர் மூலமாக பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் டைட்டில் ஆலன் என்று இருந்தது. இது ஆங்கில படமா..! என்ற சந்தேகமும் எனக்குள் இருந்தது. நான் தினமும் நிறைய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை பார்க்கத் தொடங்கியவுடன் தொடர்ந்து பார்த்தேன். இந்த படத்தை பார்த்தவுடன் இயக்குநர் சிவாவின் நம்பிக்கை தெரிந்தது.

சிங்கப்பூரில் தொழிலதிபராக இருக்கும் அவருக்கு சினிமா மீது ஒரு தீராத காதல். அங்கிருந்து இங்கு வருகை தந்து படத்தை இயக்கி விட்டு மீண்டும் அங்கு சென்று விடுகிறார். அவருக்காக இங்கு ஒரு குழு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் ஆத்மார்த்தமாக நேசிக்கும் சினிமாவை எந்தவித சமரசம் இன்றி உருவாக்கி இருக்கிறார். காதலும் அன்பும் கலந்த ஒரு படைப்பை தந்திருக்கிறார். இந்த உலகத்திற்கு காதல்தான் முக்கியம் வன்முறை முக்கியமல்ல. அன்பைத் தேடி நாம் பயணித்தால் போதும்… வாழ்க்கை சிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். இந்த திரைப்படத்தை நான் ஒரு கவித்துவமான படைப்பாக பார்க்கிறேன்.

இந்தப் படத்தை பற்றி அவர் என்னிடம் பேசும் போது இந்த திரைப்படம் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள் என்று தான் கேட்டார். ஒரு படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும் என்றார். நானும் அவரைப் போல் சினிமாவை நேசிப்பதால் இதற்கு என்னாலான உதவிகளை செய்ய சம்மதித்தேன். இந்தப் படத்திற்காக நான் சில ஆலோசனைகளை வழங்கிய போது எந்தவித மறுப்பும் சொல்லாமல் செய்தார். இந்தப் படத்தை பார்க்கும் போது.. மக்களுக்கு தேவையான விசயத்தை தான் இயக்குநர் சொல்லி இருக்கிறார் என்பதை அனைவரும் உணர்வீர்கள். இந்தத் திரைப்படத்தை வெகுவிரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் வெற்றி அவருடைய பயணத்தில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ‘எட்டு தோட்டாக்கள்’, ‘ஜீவி’, ‘பம்பர்’ என வித்தியாசமான கதையையும் தேர்வு செய்து நடித்து வருகிறீர்கள். இந்தப் படத்தில் அவர் ஒரு நல்ல பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் மேலும் பல நல்ல வெற்றிகளை தர வேண்டும். ஆலன் படத்திற்காக நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பு எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. இது போன்ற ஒரு கதையில் நடிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அந்த தைரியம் உங்களிடத்தில் இருக்கிறது. அவருடைய முயற்சி வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன், கேபிள் சங்கர் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி. ” என்றார்.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், ” கொந்தளிப்பான மனநிலையில் இருக்கும் போது கவிதை எழுதி இருக்கிறேன். அதன் பிறகு பல ஆண்டுகள் கடந்து.. மனம் ஒரு புள்ளியில் ஒடுங்கி, அமைதி அடைந்தது. அதன் பிறகும் கவிதை எழுதி இருக்கிறேன்.

இந்த ஆலன் படத்தில் கதையின் நாயகனான தியாகு கதாபாத்திரம் ஒரு புள்ளியில் வாழ்க்கையைத் தொடங்கி ஏராளமான சுழலுக்குள் சிக்கி அதிலிருந்து வெளியே வந்து அதனை கடந்து வாழ்க்கை கொடுத்த அனுபவ சாரமாக ஒரு நூலை எழுதுகிறான். அதன் மூலமாக அவன் எழுத்தாளராக மாற்றம் பெறுகிறார். ஏறக்குறைய என்னுடைய வாழ்க்கை பயணத்தை போல் தான்.. என்னை போல் எழுதிக் கொண்டிருக்கிற பாடல் ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் போன்ற இலக்கிய ஆளுமைகளின் வாழ்வியலில் இந்த கதாபாத்திரம் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொள்ளும். அதனால் இந்த படத்தில் பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கம். இந்தப் படத்தில் பாடல் எழுதிய போது என் வாழ்க்கையை நான் மீண்டும் நினைத்தது போல் இருந்தது. அதனால் பாடல் எழுதும் போது எந்த சிரமமும் இல்லை.

ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு தாளம் உண்டு. அதனை நாம் தொலைக்கும் போது.. அதனை மீட்டெடுப்பது போல் இந்த படத்தின் பாடல்கள் இருந்தது. இதற்கான முயற்சி தற்போதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் இந்த படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்கள் இந்திய செவ்வியல் இசையை முதன்மையாகவும், அதற்கு இணையாக மேல்நாட்டு இசைத் தாளத்தை துணையாகவும் கொண்டு பாடல் உருவாகி இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.‌ இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறிய வயதில் இருந்தே இசை துறையில் பணியாற்றி வருகிறார். திரை துறையில் தான் அவருக்கு இது முதல் திரைப்படம். இந்தப் படத்தின் பாடல்களை பொறுமையாகவும், மன அமைதியுடனும் கேட்கும் போது… இந்த நிலத்திற்கான தாளத்தை உங்களால் கேட்க முடியும்.

‘நம்முடைய அழுக்குகளை நாமே குறைத்துக் கொண்டு வருவது.. அதன் மூலம் நாம் மேலே உயர்ந்து எழுவது’ என சைவ சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தை என் வாழ்க்கையில் நான் கடைப்பிடித்த போது என் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. என் எழுத்திலும் மாற்றம் ஏற்பட்டது.

‘ஆலன்’ என்ற தலைப்பு கேட்கும் போதெல்லாம் எனக்கு நெருக்கமானதாக இருந்தது. மேலும் இந்த படம் எனக்குள் நெருக்கமாக இருப்பதற்கு என்னுடைய இளைய சகோதரர் நடிகர் விவேக் பிரசன்னா இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் ஒரு காரணம்.

சிவன் அருளால் சிவா இயக்கிய ஆலன் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது. இதற்கு முன் நான் ஒரு படத்திற்காக இசையமைக்க ஒப்பந்தமானேன். அந்தப் படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைத்தேன் அந்த பாடல்களை ஒளிப்பதிவாளர் விந்தன் கேட்டார். அவரின் பரிந்துரையின் பேரில் தயாரிப்பாளர் இயக்குநர் சிவா அந்த பாடல்களை கேட்டு, இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார். இந்த திரைப்படம் என்னுடைய அறிமுக படமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அனைவரின் ஆசியையும் கோருகிறேன்.

இயக்குநர் சிவா சினிமா மீது தீவிர காதல் கொண்டவர். இந்தப் படத்திற்காக இசையமைக்கும் போது எந்த கட்டுப்பாடுகளையும் அவர் விதிக்கவில்லை.‌ இந்தப் படத்திற்காக முழுமையான பங்களிப்பை வழங்குங்கள் என்றார்.‌ அவருடைய எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்து இருக்கிறேன் என நம்புகிறேன்.

இந்தப் படத்திற்கு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தாவின் தீவிர ரசிகர் நான். நான் இசையமைத்த மற்றொரு படத்திற்கும் அவர்தான் பாடல்களை எழுதி இருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் அவர்தான் எழுதியிருக்கிறார். நான் அவருக்கு மெட்டுகளை அனுப்பி வைப்பேன். அவர் அதற்கு பாடல் வரிகளை எழுதி அனுப்புவார். அத்துடன் ஏதாவது திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? என கேட்பார். இதற்கு மேல் திருத்தம் தேவையில்லை என நான் சொல்வேன். சிறப்பான பாடல் ஆசிரியர். அவருடைய வார்த்தைகள் தான் இந்த பாடல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அவருக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் வெற்றியின் நடிப்பு நன்றாக இருந்தது. படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். ” என்றார்.

‘ஜீவி’ பட இயக்குநர் கோபிநாத் பேசுகையில், ” சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளரும்,விநியோகஸ்தருமான தனஞ்செயன் தொடர்பு கொண்டு ஆலன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதற்குப் பிறகுதான் இந்தப் படத்தில் அவருடைய பங்களிப்பும் இருக்கிறது என்பதனை தெரிந்து கொண்டேன். பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் தனஞ்ஜெயன் சார் கடுமையாக உழைப்பார். இந்த படத்தில் அவர் இணைந்ததால் இந்த படம் வெற்றியை பெறும் என உறுதியாக நம்புகிறேன்.

பம்பர் படத்திற்கு முன் வெற்றியை ஒரு முறை இயல்பாக சந்தித்தேன். அப்போது அவரிடம் கன்டென்ட் ஓரியண்டாகவே நிறைய படங்களை தேர்வு செய்து நடிக்கிறீர்கள். அது வரவேற்கத்தக்கது தான். அதே நேரத்தில் கமர்சியல் பிளஸ் கன்டென்ட் ஜானரிலும் நடிக்க வேண்டும் என சொன்னேன். அதன் பிறகு பம்பர் படத்தின் டீசரை காண்பித்தார். அந்தப் படம் வெற்றி பெறும் என்று அப்போதே அவரிடம் சொன்னேன். அதன் பிறகு அவர் தேர்வு செய்து வைத்திருக்கும் கதைகள் மற்றும் படங்கள் அனைத்தும் நன்றாக இருந்தன. அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனாலும் திரை உலகில் அவர் இப்போது இருக்கும் உயரத்தை விட மேலும் உயர வேண்டும். அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என ஒரு நண்பராக வேண்டுகோள் வைக்கிறேன். அடுத்த வருடம் இதை விட ஒரு படி மேலே உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தின் பாடலை கேட்டவுடன் வெற்றியை தொடர்பு கொண்டு.. பாடல் மிக சிறப்பாக இருக்கிறது. யார் இசையமைப்பாளர்? என கேட்டேன். அவர் மனோஜ் கிருஷ்ணா என சொன்னார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள். பாடல் ஆசிரியர் கார்த்திக் நேதாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், ” படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரான சிவா என்னுடைய சிறந்த வாசகர். அவரும் ஒரு எழுத்தாளர். என் இனிய நண்பர். அவரைப் பற்றிய ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் எழுதிய புத்தகம் ஒன்று இம்மாதம் வெளியாகிறது. அதை என்னுடைய உயிர்மை பதிப்பகத்தில் இருந்து தான் வெளியிடுகிறோம். அவர் எழுதிய புத்தகத்தை வாசிக்கும் போது அவர் ஒரு மிக முக்கியமான எழுத்தாளர் என்பதை உணர்ந்தேன். அவருடைய எழுத்தில் நகைச்சுவை… எழுத்து நடை..
கூர்மையான சமூகப் பார்வை… என பல அம்சங்களும் அவருடைய சிறுகதை தொகுப்பில் இருக்கிறது.

YouTube player

அவருக்குள் இருக்கும் சினிமா பற்றிய கனவு பெரியது. அவருடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். சினிமா என்கிற கலை மீது அவர் அடங்காத அன்பினை கொண்டிருக்கிறார்.‌ இவரைப் போல் பலர் தமிழகத்திற்கு வெளியே இருக்கிறார்கள்.

தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு நல்ல படமாக வழங்க வேண்டும் என நினைக்கிறார். சமூகத்துக்கு நல்லதொரு செய்தியை சொல்லும் படைப்பாக தர வேண்டும் என நினைக்கிறார். சினிமாவில் சமூக பொறுப்புணர்வு உள்ள படைப்பாளியாக வரவேண்டும் என விரும்புகிறார்.‌ இதனை அவரிடம் நடந்த தொடர் உரையாடல்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.

இந்தப் படத்தில் நானும் என்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். அந்த தருணத்தில் நண்பருடன் இருக்கிறேன் என்ற உணர்வு தான் எழுந்தது.

அவருடைய கனவுகள் வெல்லட்டும். இந்தத் திரைப்படம் தனஞ்செயன் வழங்குகிறார் என்ற உடன் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் இந்த திரைப்படத்திற்காக மேற்கொள்வார்.

நாங்கள் கல்லூரி மாணவர்களுக்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சி குறித்த பட்டறையை மூன்று நாள் நடத்தினோம். அந்த நிகழ்வில் தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் அனைத்து நட்சத்திர இயக்குநர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். அனைவரும் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் பற்றி பேசினார்கள். அவர் திரைப்படங்களை இயக்கி நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்றும் அவரைப் பற்றி ஏன் பேசுகிறார்கள்? அவரைக் கடந்து திரை கதையை பற்றி பேசுவதற்கு வேறு நபர் ஏன் இல்லை? என்ற விசயம் எனக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அவர் இயக்கிய காலகட்டத்தில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பதை தற்போது உணர முடிகிறது. அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் இந்த மேடையை நானும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படம் வெற்றி பெறட்டும். தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் நண்பர் சிவா வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், ” தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சிவாவின் பேச்சில் சமூக அக்கறை தெரிந்தது. அவருடைய நல்ல எண்ணத்திற்காகவும், நோக்கத்திற்காகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று அவர் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தமிழ் திரை உலகில் நிதானமாக பயணித்து நல்லதொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றிக்கு இந்த திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும். அவர் நடித்த முதல் படமான எட்டுத் தோட்டாக்கள் என்ற படத்தில் நான் நடித்திருக்கிறேன். மிகவும் நல்ல மனிதர். தனக்கு எந்த கதை பொருத்தமாக இருக்கிறதோ…! அதனை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவிற்கும், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனஞ்செயன் எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவர் இணைந்திருக்கும் இந்த ஆலன் படத்திற்கும் அவர் உச்சபட்ச உழைப்பை வழங்கி இந்தப் படத்தில் வெற்றிக்கு பாலமாக இருப்பார். ” என்றார்.

நடிகர் வெற்றி பேசுகையில், ” ஆலன் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் – தயாரிப்பாளர் சிவாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு காதல் படத்தில் நடிப்போம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது.. சிவா சார் இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். படித்தவுடன் இரண்டு விசயங்கள் தான் எனக்குள் தோன்றியது. இந்தப் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது. பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அடுத்ததாக இசையமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். காதல் கதை என்பதால் இது முக்கியம் என தயாரிப்பாளிடம் சொன்னேன். அவரே இயக்குநர் என்பதால் அவருடைய கற்பனைக்காக செலவு செய்ய தயாராக இருந்தார். படத்தினை கஷ்டப்பட்டு தான் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்த சக கலைஞர் அனைவரும் நன்றாக தங்களுடைய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறந்த இசையை வழங்கி இருக்கிறார். இது போன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள்” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஓம் நமச்சிவாய’ என்ற பாடல் ஒலித்தது. ஓம் நமச்சிவாய என்றவுடன் அது ஆன்மீகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பை பொய்யாக்கி, அதை ஒரு கமர்ஷியல் ரிதமாக மாற்றி இசையமைத்திருந்தார் அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா. இதையே பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கி இருந்தார் என்றால் படத்தில் அனைத்து பாடல்களையும் அவர் சிறப்பாக உருவாக்கி இருப்பார். அதனால் இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறிய முதலீட்டு திரைப்படங்களை திரையரங்கத்திற்கு கொண்டு வருவதில் பெரு முயற்சி செய்து வருபவர் தனஞ்செயன். அவர் இந்தப் படத்திலும் இணைந்திருப்பதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி என்று சொன்னால் வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிப்பவர் என்ற ஒரு எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. இவர் எல்லா படங்களையும் ஒப்புக்கொண்டு நடிப்பவர் அல்ல என்பது ரசிகர்களுக்கும் தெரியும். ஏதாவது வித்தியாசம் இருந்தால் தான் இவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பதால்… அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆலன் திரைப்படம் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தை தேர்வு செய்து நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்த வெற்றிப் பயணத்தை மாற்றிக் கொள்ளாமல்… புதிய முயற்சிக்கு மேற்கொள்ளுங்கள். இதுவும் காதல் கதை தான். ஆனால் இதிலும் கமர்ஷியல் கலந்திருக்கிறது.

பிரிவு என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அது மிகச் சிறப்பாக இருக்கிறது. தமிழ் மொழியில் அடுத்தவருடைய திறமைக்காக அவர் சேவை செய்து கொண்டிருக்கிறார். இதற்காகவும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலந்து கொண்ட திரைக்கதை எழுவது குறித்து எழுதுவது குறித்த பயிற்சி பட்டறையில் என்னைப்பற்றி அனைத்து இயக்குநர்களும் பேசியதாக குறிப்பிட்டார். அதை கேட்பதற்கு பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இவை அனைத்தும் எங்களுடைய குருநாதர் பாரதிராஜாவுக்குத்தான் சேரும். ஏனெனில் அவர் இல்லை என்றால் நான் இல்லை.

இங்கு பேசியவர்களில் பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தா பேசியது எனக்கு புரியவில்லை. இருந்தாலும் ரசித்தேன். அவர் முதலில் எழுதிய கவிதை என்று ஒரு கவிதையை வாசித்தார். அது எனக்கு புரியவே இல்லை. ஏனென்றால் சொற்கள் புதிதாக இருந்தது. பிறகு பத்து வருஷம் கழித்து கவிதை எழுதினேன் என்றார். அதுவும் எனக்கு புரியவில்லை. ஆனால் இறுதியில் ஒரு கவிதையை வாசித்தார். அது எளிதாக இருந்தது . அனைவருக்கும் பிடித்திருந்தது.

தயாரிப்பாளரும், இயக்குநருமான சிவாவிற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். பேரும் புகழும் வேண்டும் என்பதற்காக திரைத்துறைக்கு வருவார்கள் அல்லது சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வருவார்கள். நானும் பேரும் புகழுக்காக தான் திரைத்துறையில் நுழைந்தேன். அதன் பிறகு சம்பாத்தியம் கிடைத்தது. ஆனால் இந்த இரண்டு விசயத்தை கடந்து வேறு ஒரு விசயம் இருக்கிறது என்பதை சிவா சொல்லும்போது.. மிகவும் நெகிழ்வாக இருந்தது. சமூக சேவைக்காக சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றதும் அவர் மீது எனக்கு மரியாதை வந்தது.

குடும்ப சூழல் காரணமாக சிங்கப்பூருக்கு சென்று அங்கு சம்பாதித்து, சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என நினைக்காமல்… சினிமாவில் அவர் என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ.. அதை ஆத்மார்த்தமாக செய்வதற்காக ஆலன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நஷ்டத்தை பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.

அவருடன் பேசும்போது எழுத்தாளர்களுக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டில் நிறைய மரியாதை இருக்கிறது. ஆனால் இங்குதான் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை இல்லை என குறிப்பிட்டார். அந்த ஆதங்கத்தின் காரணமாகவே இந்த படத்தின் நாயகன் வெற்றியை ஒரு எழுத்தாளராக நடிக்க வைத்திருக்கிறார்.

உண்மையில் கதை என்பது நம்முடைய வாழ்வில் இருந்து எடுப்பதுதான். ஒவ்வொருவரும் கதாசிரியர்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையில் பாதித்த விசயத்தை நினைவு படுத்தி எழுதினால் அதுவே சிறந்த கதையாக இருக்கும்.

சினிமாவிற்கு வரும்போது ஒன்று அல்லது இரண்டு கதைகள் உடன் வந்தால் போதும். அதன் பிறகு இங்கு கிடைக்கும் அனுபவத்தை வைத்து கதையை உருவாக்கிக் கொள்ளலாம். என்னிடம் முதலில் சுவரில்லாத சித்திரங்கள் கதை மட்டும் தான் இருந்தது. அதன் பிறகு தான் ஒரு கை ஓசை படத்தின் கதை உருவானது. அதன் பிறகு மௌன கீதங்கள்… இப்படி படிப்படியாக அனுபவங்களின் மூலம் கதைகளை உருவாக்கினேன்.

நம் வாழ்க்கையை பார்ப்பதும் ஒன்றுதான். புத்தகங்களை படிப்பதும் ஒன்றுதான். ஏனெனில் ஒருவன் தன் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருக்க முடியாது. ஆனால் புத்தகங்களை படிக்கும் போது தான் அந்த கதாசிரியர் .. அவருடைய வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பார்.

நான் என் வாழ்க்கையில் காண்டேகர் கதைகள் ,ஜெயகாந்தன் கதைகள், கல்கியின் கதைகள் ஆகியவற்றை படித்திருக்கிறேன். இது போன்ற ஏராளமான புத்தகங்களை படிக்கும் போது புதிய புதிய கதாபாத்திரங்கள் கிடைக்கும்.

அதேபோல் கடைசி வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கடைசி வரை நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருந்து கொண்டே இருக்கும். இன்று கூட ஆலன் என்றால் என்ன? என்று எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக சிவாவிடம் கேட்டபோது ஆலன் என்றால் சிவன் என்றார். இது எனக்கு ஒரு புது விசயமாக இருந்தது.

இந்தப் படம் காதலும் ஆன்மீகமும் கலந்த படம். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் ஒரு வசனம் வரும். ‘எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ.. அதுவே ஆன்மிகம். ‘ இதுவும் என்னைக் கவர்ந்தது.

சேவை மனப்பான்மையுடன் திரைத்துறைக்கு வருகை தந்திருக்கும் சிவா வெற்றி பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு அன்பின் வலிமை புரிய வேண்டும் என இயக்குநர் சிவா விரும்பி இருக்கிறார். தூய்மையான ஆன்மீகம் என்பது அன்பு என்பதையும் சொல்லி இருக்கிறார். எனவே சிவாவின் ஆலன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.