கவின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கிறார். ரெடின் கிங்ஸ் லீ நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அக்ஷயா ஹரிஹரன்,அனார்கலி நாசர்,மாருதி பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கிறார்கள்.சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜென் மார்டின் இசையமைக்கிறார்.ஆர்.நிர்மல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்.
இப்படம் இவ்வாண்டு தீபாவளி நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் உடன் ஓர் உரையாடல்…
1.உங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்..?
நான், நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக இருந்த வேட்டை மன்னன் படத்தின் போது அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன், அந்தப்படம் கைவிட்ட பிறகு தொலைக்காட்சிகளில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பிறகு படம் இயக்குவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தேன்.அதன்பின் நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை ஆரம்பித்த உடன் அவருடன் பணியாற்றத் தொடங்கினேன்.அப்போதிருந்து அவருடன் பயணித்த நான் இப்போது இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.
2.ப்ளடி பெக்கர் படம் பற்றி..?
எதுவும் இல்லாத, எந்த ஆசையும் இல்லாத, எந்தக் கவலையும் இன்றி அனைவரையும் நக்கல் செய்து கொண்டு, திமிராகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம்.அப்படிப்பட்டவருக்கு திடீரென்று ஒரு ஆசை வருகிறது.அதை நோக்கிப் பயணப்படும் போது வரும் சிக்கல்கள் தான் கதை.முழுக்க முழுக்க கவினைச் சுற்றித் தான் கதை நடக்கும்.அவர் இதில் பிச்சைக்காரராக வருவதால், ‘ப்ளடி பெக்கர்’ என்று தலைப்பு வைத்தோம்.மக்களிடம் எளிதில் சென்றடையும் சொல் என்பதால் இந்தப் பெயரை வைத்தோம்.
3.கவினை பிச்சைக்காரராக கற்பனை செய்தது எப்படி?
இந்த திரைக்கதையை எழுதி முடித்தவுடன், இப்படி ஒரு வேடத்தில் யாரும் யோசித்துப் பார்க்காத ஒரு நடிகரை நடிக்க வைத்தால் புதிதாக இருக்கும் என்று தோன்றியது.கவினிடம் இந்தக் கதையைச் சொல்லி ஆலோசனை கேட்டேன். அவருக்கும் இந்தக்கதை மீது விருப்பம் இருந்தது.அதனால்,அவரையே இதில் நடிக்க வைக்க முடிவு செய்தோம்.பிச்சைக்காரர் கெட்டப்புடன் வெளியே செல்கிறாயா? என்று அவரிடம் கேட்டதற்கு, ஓகே என்று சொல்லி, தெரிவில் நடந்து சென்றார். அப்போது ஒரு பெண் அவரை நிஜமான பிச்சைக்காரர் என்று நினைத்து 20 ரூபாய் கொடுத்தார்.
4.கவின் நடிப்பு பற்றி..?
கவின் பிச்சைக்காரராக நடித்தாலும் படம் முழுவதும் அதே வேடத்தில் வர மாட்டார்.ஆரம்பத்தில் பிச்சைக்காரராக இருப்பார்.அவர் ஏன் அப்படி ஆனார்? என்பதற்கான விளக்கமும் சொல்லப்பட்டிருக்கும். திடீரென்று அவருக்கு ஒரு ஆசை வரும்,அதை நோக்கிச் செல்லும் போது ஏற்படும் குழப்பங்கள், சிக்கல்கள் மூலம் அவர் கதாபாத்திரம் மாற்றமடையும்.நடிப்பைப் பொருத்தவரை, கதாபாத்திரத்தின் நடை, சில ரியாக்ஷன்கள் ஆகியவற்றை வித்தியாசமாகச் செய்திருக்கிறார்.அதன் மூலம் இந்தக் கதாபாத்திரம் வரவேற்புப் பெறும்.
5.கவின் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார்.வந்தாலும் முறையாக ஒத்துழைப்பு தரமாட்டார் என்று சொல்லப்படுகிறதே?
கவின் தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.அதனால் கூட எங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.மூன்று கட்டங்களாகப் படப்பிடிப்பு நடத்தினோம்.அதில்,எந்த ஒரு இடையூறும் இன்றி கவின் கலந்துக்கொண்டார்.அவர் மூலம் எங்களுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.
6.மற்ற கதாபாத்திரங்கள் குறித்து..?
படத்தில் அக்ஷயா ஹரிஹரன் நடித்திருக்கிறார்.அவர் தான் படத்தின் கதாநாயகி.ஆனால் அவர் கதாநாயகனுக்கு ஜோடியாக வர மாட்டார்.படத்தின் முக்கியமான கதாபாத்திரமாகப் பயணிப்பார். அவர் படத்தில் என்னவாக வருகிறார் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதே சமயம், படத்தில் சிறு காதல் இருக்கும். கவின் ஏன் இந்த நிலைக்கு வந்தார் என்பதை விளக்கும் போது அதில் இருக்கும்.ரெடின் கிங்ஸ்லி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
7.இப்படத்தின் சிறப்பம்சங்கள்..?
இரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா கதாபாத்திரத்தின் தொடர்பு இந்தப் படத்தில் இருக்கும்.அது என்ன என்பதைச் சொன்னால் கதை தெரிந்துவிடும்.இந்த கதையை மற்றவர்களிடம் சொன்ன போதே அதுபோல் இருக்கிறது என்று சொல்வார்கள்.அப்போது,அந்தப் படத்தை மனதில் வைத்து செய்தால் நிச்சயம் எடுபடாது என்று எனக்குத் தெரிந்துவிட்டது.அதனால் அந்தப் படத்தின் பாதிப்பு துளி கூட படத்தில் இருக்காத வகையில் பார்த்துக் கொண்டேன்.
8.இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆனது எப்படி ?
நான் படம் இயக்கும் வேலைகளில் ஈடுபட்ட போது நெல்சனிடம் ஆலோசனைகள் கேட்பேன்.அப்படித் தான் இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன்.அவர் நன்றாக இருக்கிறது.இதை சரியான தயாரிப்பாளர் மூலம் செய்தால் பெரிதாக வரும் என்று கூறினார். அவருக்கு இந்தல் கதை மேல் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.அதனால் தான் ஒரு கட்டத்தில் அவரே இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார்.நெல்சன் தயாரித்திருப்பதால் இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி அல்லது பிளாக் காமெடி படமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.நிச்சயமாக அப்படி இருக்காது.முழுக்க முழுக்க ஒரு டிராமாவாகவும், திரில்லர் ஜானரிலும் தான் படம் இருக்கும். சில இடங்களில் சில காட்சிகள் நகைச்சுவையாக இருக்கும், ஆனால் ஒட்டு மொத்தப் படமாக பார்த்தால் இது நகைச்சுவைப் படம் இல்லை.படத்தின் முன்னோட்டம் வெளியாகும்போது படம் குறித்து தெரியவரும்.
– இளையவன்