பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்திய ஒன்றிய அரசு 2014 ஆம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவரை அங்கீகரித்து அவர்களுக்கான உரிமைகள் சலுகைகள் உள்ளிட்டவற்றை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும் வெகுமக்கள் மனநிலை அவர்களை முழுமையாக ஏற்கவில்லை.நாள்தோறும் அல்லல்படுகிறார்கள்.

இதை இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தியிருக்கும் படம்தான் நீலநிறச்சூரியன்.

என் பெயர் அரவிந்த் என்பதிலிருந்து என் பெயர் பானு என்று மாறுகிற வரையான திரைக்கதையைக் கொண்டிருக்கிறது இப்படம்.

அரவிந்த் ஆகவும் பானுவாகவும் நடித்திருக்கிறார் சம்யுக்தா விஜயன்.எல்லா நேரங்களிலும் ஒருவித பதட்டம் பரபரப்புடன் கழிக்க வேண்டிய கஷ்டத்தை சரியாக வெளிப்படுத்தி கலங்க வைத்திருக்கிறார்.அவரே இயக்குநர் என்றாலும் அதற்காக அதீத வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாமல் திரைக்கதைக்குத் தேவையான அளவு அவருடைய பாத்திரத்தை வைத்திருப்பது நன்று.

அரவிந்த்தின் தந்தையாக கஜராஜ், தாயாக கீதாகைலாசம் ஆகியோர் பெரும்பான்மை சமூகத்தைப் பிரதிபலித்திருக்கிறார்கள்.

பிரசன்னா பாலச்சந்திரன், கே.வி.என்.மணிமேகலை, மசாந்த் நடராசன், வின்னர் இராமச்சந்திரன், விஸ்வநாத் சுரேந்திரன், மோனா பத்ரா,ஹரிதா, செம்மலர் அன்னம், கெளசல்யா ஆகியோர் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

மனநல மருத்துவராக நடித்திருக்கும் கிட்டியின் பொருத்தமான நடிப்பும் அவர் பேசும் விசயங்களும் கவனிக்கத்தக்கவை.

ஸ்டீவ் பெஞ்சமின், ஒளிப்பதிவு, இசை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பணிகளைச் செய்துள்ளார்.பணியாக எண்ணாமல் கடமையாக எண்ணி உழைத்திருக்கிறார்.

ஆணாகப் பிறந்த ஒருவர் பெண்ணாக மாற ஆசைப்பட்டு இறுதியில் திருநங்கை எனும் மூன்றாம்பாலினமாக மாறக் காரணம் உடலில் சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன்) பாதிப்பு எனும் அறிவியல்தான்.

இந்த அறிவியலை அறியாமல் அவர்களைக் குற்றவாளிகள் போல் ஆக்கும் சமுதாயத்தை விரல்நீட்டிக் கேள்வி கேட்காமல் விழிநீர் துடைத்து உணர வைத்திருக்கிறார் இயக்குநர் சம்யுக்தா விஜயன்.

காலங்காலமாக இருந்துவரும் ஒரு பழக்கத்தில் இருந்து மனிதமனங்கள் மாறி வர கலைப்படைப்புகளே உந்துசகதியாக அமையும்.இவை அரசின் சட்டத்தைவிட வலிமையானவை.அந்த வலிமையோடு எடுத்துக் கொண்ட சிக்கலை ஆழமாகப் பேசி அழுத்தமாகப் பதிய வைப்பதிலும் அவற்றைத் திரையில் மொழிபெயர்ப்பதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.