மறைந்த அப்துல்கலாம் பதினாறு வயதான கலாமாக திரும்ப வருகிறார்.எதற்காக அவர் வந்தார்? என்கிற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து அறிவியல் தத்துவம் ஆகியனவற்றை உள்ளடக்கி எடுக்கப்பட்டிருக்கும் படம் ராக்கெட் டிரைவர்.

விண்வெளி விஞ்ஞானியாக வேண்டுமென்ற கனவில் இருக்கும் பிரபா, இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுகிறார்.அவருடைய ஏழ்மை நிலையால் அவரால் உயர்கல்வி படிக்க முடியாமல் போகிறது.அதனால் தானி ஓட்டிக்கொண்டிருக்கிறார்.அவருடைய தானியில் ஒருநாள் 16 வயதுப்பையன் பயணிக்கிறார்.அவர் மறைந்த அப்துல்கலாம் என்பதும் அவர் காலப்பயணம் செய்து 1948 இல் இருந்து நிகழ்காலத்துக்கு வந்திருக்கிறார் என்பதையும் உணர்ந்து கொள்கிறார்.

சுவையான இந்தக் கற்பனையில் அதற்குப் பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் திரைக்கதை.

விஞ்ஞானியாக முடியாத சலிப்புடன் தானி ஓட்டும் கதாநாயகன் வேடத்துக்கு ஏற்ப இருக்கிறார் விஷ்வத்.ஆசைப்பட்ட ஒன்றை அடைய முடியாத ஏமாற்றத்தையும் முன்னோடியாகக் கருதும் அப்துல்கலாமை கண்டவுடன் அடையும் உற்சாகத்தையும் அதன்பின் நடக்கும் நிகழ்வுகளிலும் தன் இருப்பை சரியாகப் பதிவு செய்திருக்கிறார்.

படத்தில் நாயகி சுனைனாவும் இருக்கிறார்.அவர் யாருக்கும் இணையராக நடிக்கவில்லை.நாயகனுக்கு ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்தும் வேலையைச் செய்கிறார்.அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.

சிறுவயது அப்துல் கலாமாக வரும் தேசிய விருதுபெற்ற நாகவிஷாலும்,அப்துல்கலாமின் நண்பராக வரும் காத்தாடி ராமமூர்த்தியும் பொறுப்பாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கெள்ஷிக் க்ரிஷ் இசையில் அவரும் செத்துட்டாரா? பாடல் கவனம் ஈர்க்கிறது.பின்னணி இசையில் கதைக் களத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ் தம்முடைய உழைப்பால் காட்சிகளை எதார்த்தமாக்கியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன்,இயக்குநரின் எண்ணத்தைச் சிந்தாமல் சிதறாமல் இரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்த்சங்கர், ஒரு சுவையான கற்பனையை வைத்து ஆழமான பல கருத்துகளை உணர்த்த முனைந்திருக்கிறார்.திரைக்கதையை இன்னும் வேகமாக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.நம் அன்றாட வாழ்வில் நடக்கும் சின்னச் சின்ன விசயங்களை அலட்சியமாகக் கடந்து போயிருப்போம்.இப்படம் பார்ப்போர் இனி அவற்றைக் கூர்ந்து கவனிப்பர் என்பதுதான் இப்படத்தின் வெற்றி.

– இளையவன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.