சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் என்ற இளைஞர், இராணுவத்தில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44 ஆவது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் 2014 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்தார்.
முகுந்த் வரதராஜனின் இந்த நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் ராகுல் சிங் ஷிவ் அரூர் எழுதிய ‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்கிற தொடரிலிருந்து ஒரு அத்தியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.
முகுந்த்வரதராஜன் வேடமேற்றிருக்கும் சிவகார்த்திகேயன்,அதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்.உடல் எடை மற்றும் தோற்றப் பொலிவு மற்றும் வகிக்கும் பதவிக்கேற்ற மிடுக்கு ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பிறந்த முகுந்த்வரதராஜன் கேரளாவைச் சேர்ந்த இந்து ரெபக்கா வர்கீசை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அதனால் படத்தில் காதல்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.கேட்கவா வேண்டும்? அக்காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தின் நாயகி சாய்பல்லவி.மொத்தக் கதையும் அவர் பார்வையில் நடப்பதுபோல் வடிவமைக்கப்பட்டதால் அவர்தான் படத்தின் முதுகெலும்பு.அதை உணர்ந்து மிக நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.அவர் சிரிக்கும்போது சிரித்து அழும்போது கதறிக் கொண்டிருக்கிறது அரங்கம்.அந்த அளவு எல்லோரையும் கட்டிப்போடுகிறார்.
இராணுவக்காட்சிகளில் புவன் அரோரா,ராகுல் போஸ் ஆகியோரும் குடும்பக்காட்சிகளில் கீதா கைலாசம்,ஷ்யாம் பிரசாத் ராஜகோபால் உள்ளிட்டு படத்தில் இருக்கும் நடிகர்கள் பொறுப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய் உழைப்பில் பனிபடர்ந்த காஷ்மீரின் கடும்சூட்டையும் உணரமுடிகிறது.சிவகார்த்திகேயனின் பிம்பம் மாற இவருடைய ஒளிப்பதிவு உதவுகிறது.
படத்தொகுப்பாளர் கலைவாணன்,கடும் சிரத்தையோடு பணிபுரிந்திருக்கிறார்.அதனால் படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது.
ஜீ.வி.பிரகாசின் இசையில் காதல் பாடல்கள் இரசிக்கவைக்கின்றன.அச்சமில்லை பாடல் இறுக வைக்கிறது.பின்னணி இசையிலும் படத்தின் காட்சிகளை உயர்த்திப் பிடித்திருக்கிறார்.
படத்தை இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.சிவகார்த்திகேயனை இந்த வேடத்துக்குத் தேர்வு செய்தது அவருக்கு சவால் என்றால் சாய்பல்லவியை நாயகியாக்கியது அவருடைய புத்திசாலித்தனம்.
இராணுவ வீரர்களின் குடும்பத்தின் பார்வையில் இந்தக் கதையைக் கொண்டு சென்றிருப்பது நல்ல உத்தி.முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்கிற கருத்தை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் நிதானித்திருப்பதும் நல்லது.தெரிந்த கதையை கடைசிவரை உட்கார்ந்து பார்க்க வைத்திருப்பதிலேயே பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.
– அன்பன்